Facebook Twitter RSS

Wednesday, July 11, 2012

Widgets

முஸ்லிம் வேட்டை:கண்ணீரும், கண்டனங்களும் நிறைந்த அரங்காக மாறிய பொதுக்கூட்டம்!


politics of terror- targeting muslim youths

புதுடெல்லி:மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ்,மக்கா மஸ்ஜித், காட்கோபர் குண்டுவெடிப்புகள், பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர், கத்தீல் சித்திக்கியின் படுகொலை, ஃபஸீஹ் மஹ்மூதின் மர்மமான கைது… தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரால் முஸ்லிம் இளைஞர்களை பாதுகாப்பு ஏஜன்சிகள் குறி வைத்து வேட்டையாடிய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள ஏற்பாடுச்செய்த பொதுக்கூட்டத்தில் கண்ணீர் கதைகளை கேட்டு அரசு மீது கோபக்கனல் வீசியது.
உள்ளத்தில் அடக்கி வைத்த எதிர்ப்புகளையும், கவலைகளையும் கான்ஸ்ட்யூஸன் அஸெம்ப்ளி க்ளப்பில் டெபுட்டி ஸ்பீக்கர் ஹாலில் திரண்டிருந்த மக்களிடம் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பகிர்ந்துகொண்டனர்.

பல்வேறு பத்திரிகையாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இணைந்து ஏற்பாடுச் செய்த “பாலிடிக்ஸ் ஆஃப் டெரர்: டார்கெட்டிங் முஸ்லிம் யூத்” பொதுக்கூட்டத்தில் மக்களின் பங்களிப்பும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.
தனது மகனின் விடுதலைக்காக கடைசி வரை போராடுவேன் என சவூதியில் வைத்து கைது செய்யப்பட்ட பீகாரைச் சார்ந்த இளம் பொறியாளர் ஃபஸீஹ் மஹ்மூதின் தாயார் அரசு பள்ளிக்கூட தலைமையாசிரியை அம்ர் ஜமாலின் உறுதிப்பூண்ட உரையுடன் நிகழ்ச்சி துவங்கியது.
“உச்சநீதிமன்றத்தில் கூட காரணங்களை மூடி மறைக்கும் அரசு, நீதியை கையில் கொண்டு தராது. நீதிக்காக போராடாமல் எனது மகனின் விடுதலை சாத்தியமில்லை” என அம்ரா ஜமால் கூறினார்.
அவர் தனது மகனின் அனுபவத்தை விவரித்த அம்ரா ஜமால் பல தடவை மைக் முன்னால் அழுதார்.
தனது தந்தையை கைது செய்து 5 மாதங்கள் கழிந்த பிறகும் புலனாய்வு குழுவினரால் எவ்வித ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இயலவில்லை என்று இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர்  செய்யத் அஹ்மத் காஸ்மியின் மகன் ஷவ்கத் காஸ்மி கூறினார்.
2003-ஆம் ஆண்டு மும்பை காட்கோபர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அத்னான் பிலால் முல்லாவின் தந்தை நாஸிர் ஹெச்.முல்லா தனது உரையில்; “வெறுமனே அழுதுக்கொண்டோ, மனுக்கொடுத்துக் கொண்டோ இருந்து எந்த வித பலனும் இல்லை என்பது இவ்வளவு நாட்கள் அனுபவம் என்னை பாடம் கற்று தந்துள்ளது” என்று நாஸிர் கூறினார்.
ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பின் பெயரால் முஸ்லிம் இளைஞர்கள் தற்போதும் வேட்டையாடப்படுவதாக மலேகானில் இருந்து வந்த அப்துற்றஹீம் விவரித்தார்.
முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவதை முஸ்லிம்களின் மட்டும் பிரச்சனையாக கருதக்கூடாது என்றும், அனைத்து பிரிவினரும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் பிரபல பத்திரிகையாளர் குல்தீஃப் நய்யார் வலியுறுத்தினார்.
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக தொடரும் வரை முஸ்லிம்களுக்கு நீதிக் கிடைக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது என்று சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
பிஜாப்பூரில் குழந்தைகளை கூட்டுப் படுகொலைச் செய்த சம்பவத்தை நக்ஸல் எதிர்ப்பு போராட்டத்தின் வெற்றி என்று கூறியவர் ப.சிதம்பரம். அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பழங்குடியினரும், முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டும் என்று அக்னிவேஷ் கூறினார்.
எங்கே குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்யும் போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும். 20 ஆண்டுகள் சிறையில் அடைத்த பிறகு நிரபராதி என்று விடுதலைச் செய்வதில் எவ்வித பலனும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஹனுமந்த ராவ் தனது உரையில் கூறினார்.
கைது செய்யும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய உச்சநீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிபந்தனைகளை முஸ்லிம் இளைஞர்கள் விஷயத்தில் போலீஸ் கடைப்பிடிப்பதில்லை என்று லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் தனது உரையில் குறிப்பிட்டார்.
20 கோடி மக்கள் தொகையைக் கொண்ட முஸ்லிம் சமூகம் பீதியில் வாழும் நாட்டில் ஜனநாயகம் பூரணமாகாது என்று சி.பி.ஐ தலைவர் ஏ.பி.பரதன் தனது உரையில் குறிப்பிட்டார்.
முஸ்லிம் வேட்டையின் பெயரால் ஆவேசமான உரைகள் அல்ல, சரியான விபரங்களை சேகரித்து அதிகாரிகளை அணுகவேண்டும் என்று டி.ராஜா கூறினார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வாலைப் பிடித்துக்கொண்டு நடக்கும் அரசு அவர்களின் முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கையையும் இங்கே இறக்கமதிச் செய்யக் கூடாது என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சார்ந்த டேனிஷ் அலி கூறினார்.
பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாவிட்டாலும், மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லாஹ் நிகழ்ச்சியில் தாமாகவே முன்வந்து கலந்துகொண்டார்.
முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் நீதி மறுப்பைக் குறித்து தனது பேச்சில் விளாசிய ஃபரூக் அப்துல்லாஹ்வை நோக்கி, அவையில் இருந்தோர் கேள்விகளை எழுப்பினர். முஸ்லிம்களுக்கு பிரச்சனைகள் இருப்பதை உங்களுக்கு தெரிவிப்பதற்கு அல்ல, அரசு சார்பாக நீங்கள் பரிந்துரைச் செய்ய விரும்புகின்றீர்கள் என கேள்வி எழுப்பி அவையில் அமளி கிளம்பியது.
நீதி மறுக்கப்பட்ட மக்களின் கோபத்திற்கு பதிலளிக்க ஃபரூக் அப்துல்லாஹ்வால் இயலவில்லை.
முஸ்லிம்களுக்கு எதிராக போலீசும், பல்வேறு பாதுகாப்பு ஏஜன்சிகளும் நடத்தும் வேட்டையை நிறுத்த ஐ.மு அரசும், ப.சிதம்பரமும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பொய் வழக்குகளில் சிக்கவைத்து விசாரணை கூட நடத்தாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நபர்களின் வழக்குகளில் தீர்ப்பினை விரைந்து வழங்க மத்திய அரசும், தொடர்புடைய மாநில அரசுகளும் விரைவு நீதிமன்றங்களை நிறுவ வேண்டும். இத்தகைய வழக்குகளில் நீதிமன்றங்கள் குற்றமற்றவர்கள் என விடுவித்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.
தீவிரவாதத்தின் பெயரால் மத்திய-மாநில புலனாய்வு ஏஜன்சிகள் முஸ்லிம் இளைஞர்களை குற்றவாளிகளாக்குவது குறித்து விசாரணை நடத்த பிரபல நபர்கள் அடங்கிய ஒரு உண்மை கண்டறியும் குழுவை நியமிக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஆனி ராஜா, சீமா முஸ்தஃபா, முஹம்மது அதீப் எம்.பி, அஜித் ஸாஹி, ஜே.என்.யு.பேராசிரியர் அனுராதா ஸெனோய், இஃப்திகார் ஜீலானி, அமீக் ஜாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.SOURCE THOOTHU ONLINE

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets