திரிபோலி:முஅம்மர் கத்தாஃபியின் யுகம் முடிந்த பிறகு லிபியாவில் முதன் முதலாக இன்று(ஜூலை-7) ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு ஏற்பாடுகள் நடந்து வரவே, மோதல் சூழல் நிலவுவது அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
40 ஆண்டு காலம் லிபியாவில் நடந்த முஅம்மர் கத்தாஃபியின் ஏகாதிபத்திய ஆட்சி மக்கள் புரட்சியின் மூலமாக முடிவுக்கு வந்தபிறகு முதன் முதலாக சுதந்திரமான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
புரட்சிக்கு பிறகு லிபியாவை ஆட்சிபுரியும் இடைக்கால அரசான என்.டி.சி(நேசனல் ட்ரான்சிஸனல் கவுன்சில்) தேர்தல் மூலம் ஆட்சியில் இருந்து விலகும். புதிய அரசு பதவியேற்கும். மேலும் அரசியல் சாசன உருவாக்கத்திற்கான குழுவும் தேர்தலுக்கு பிறகு அமலுக்கு வரும்.
கிட்டத்தட்ட 2500 வேட்பாளர்கள் 200 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்திற்கு போட்டியிடுகின்றனர். 27 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவுச் செய்வார்கள் என கருதப்படுகிறது.
பழங்குடியின குழுக்கள் ஆயுதங்களுடன் இயங்குவதும், பல்வேறு மாகாணங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் புதிய அரசுக்கு சவால்களை உருவாக்கும்.
இஸ்லாமியச் சட்டத்தை தான் லிபியா பின்தொடரும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது. லிபியா மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்பதால் இதற்காக மக்கள் விருப்ப வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை என்று என்.டி.சி செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment