Facebook Twitter RSS

Sunday, July 01, 2012

Widgets

அத்தியாயம்: 1, பாடம்: 1.03, ஹதீஸ் எண்: 10




அத்தியாயம்: 1, பாடம்: 1.03, ஹதீஸ் எண்: 10
‏ حَدَّثَنِي عَمْرُو بْنُ مُحَمَّدِ بْنِ بُكَيْرٍ النَّاقِدُ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ أَبُو النَّضْرِ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ نُهِينَا أَنْ نَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَيْءٍ فَكَانَ يُعْجِبُنَا أَنْ يَجِيءَ الرَّجُلُ مِنْ أَهْلِ الْبَادِيَةِ الْعَاقِلُ فَيَسْأَلَهُ وَنَحْنُ نَسْمَعُ فَجَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ فَقَالَ يَا مُحَمَّدُ أَتَانَا رَسُولُكَ فَزَعَمَ لَنَا أَنَّكَ تَزْعُمُ أَنَّ اللَّهَ أَرْسَلَكَ قَالَ صَدَقَ قَالَ فَمَنْ خَلَقَ السَّمَاءَ قَالَ اللَّهُ قَالَ فَمَنْ خَلَقَ الأرْضَ قَالَ اللَّهُ قَالَ فَمَنْ نَصَبَ هَذِهِ الْجِبَالَ وَجَعَلَ فِيهَا مَا جَعَلَ قَالَ اللَّهُ قَالَ فَبِالَّذِي خَلَقَ السَّمَاءَ وَخَلَقَ الأرْضَ وَنَصَبَ هَذِهِ الْجِبَالَ آللَّهُ أَرْسَلَكَ قَالَ نَعَمْ قَالَ وَزَعَمَ رَسُولُكَ أَنَّ عَلَيْنَا خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِنَا وَلَيْلَتِنَا قَالَ صَدَقَ قَالَ فَبِالَّذِي أَرْسَلَكَ آللَّهُ أَمَرَكَ بِهَذَا قَالَ نَعَمْ قَالَ وَزَعَمَ رَسُولُكَ أَنَّ عَلَيْنَا زَكَاةً فِي أَمْوَالِنَا قَالَ صَدَقَ قَالَ فَبِالَّذِي أَرْسَلَكَ آللَّهُ أَمَرَكَ بِهَذَا قَالَ نَعَمْ قَالَ وَزَعَمَ رَسُولُكَ أَنَّ عَلَيْنَا صَوْمَ شَهْرِ رَمَضَانَ فِي سَنَتِنَا قَالَ صَدَقَ قَالَ فَبِالَّذِي أَرْسَلَكَ آللَّهُ أَمَرَكَ بِهَذَا قَالَ نَعَمْ قَالَ وَزَعَمَ رَسُولُكَ أَنَّ عَلَيْنَا حَجَّ الْبَيْتِ مَنْ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلا قَالَ صَدَقَ قَالَ ثُمَّ وَلَّى قَالَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لا أَزِيدُ عَلَيْهِنَّ وَلا أَنْقُصُ مِنْهُنَّ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَئِنْ صَدَقَ لَيَدْخُلَنَّ الْجَنَّةَ
நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் தேவையில்லாக் கேள்விகள் கேட்கத் தடை விதிக்கப்பட்டிருந்தோம். எனவே, (இந்தத் தடையை அறிந்திராத) விபரமான கிராமத்தார் யாரேனும் ஒருவர் வந்து நபியவர்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும்; நாங்களும் அதைச் செவியுற வேண்டும் என்பது எங்களின் உள்ளக் கிடக்கையாக இருந்தது. அவ்வாறே (ஒரு நாள்) கிராமவாசிகளில் ஒருவர் வந்து, "முஹம்மதே! உங்கள் தூதர் ஒருவர் எங்களிடம் வந்து அல்லாஹ் உங்களை(த் தூதராக) அனுப்பியுள்ளான் என்று நீங்கள் கூறுவதாக எங்களிடம் சொன்னாரே (அது உண்மையா)?" என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் "உண்மைதான்" என்று கூறினார்கள்.


அந்தக் கிராமவாசி, "வானத்தைப் படைத்தவன் யார்?" என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "அல்லாஹ்" என்று பதிலளித்தார்கள். "பூமியைப் படைத்தவன் யார்?" என்று அவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் "அல்லாஹ்" என்றார்கள். "இந்த மலைகளை நட்டு வைத்தவனும் அவற்றில் உள்ளவற்றை உருவாக்கியவனும் யார்?" என்று கிராமவாசி கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "அல்லாஹ்" என்றார்கள். "அப்படியானால், வானத்தைப் படைத்து, பூமியையும் படைத்து, இந்த மலைகளை நட்டும் வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களைத் தூதராக அனுப்பினானா?" என்று அவர் கேட்டார், நபி (ஸல்) அவர்கள், "ஆம்" என்று கூறினார்கள்.

அவர், "இரவிலும் பகலிலும் (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகைகள் எங்கள் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளன என்று உங்கள் தூதர் கூறினாரே (அது உண்மையா)?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உண்மைதான்" என்றார்கள். "உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டானா?" என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "ஆம்" என்றார்கள். தொடர்ந்து அவர், "நாங்கள் எங்கள் செல்வங்களில் இருந்து 'ஜகாத்' செலுத்துவது எங்கள் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உண்மைதான்" என்றார்கள். "உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டானா?" என்று அந்தக் கிராமவாசி கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "ஆம்" என்றார்கள். அவர் "ஒவ்வோர் ஆண்டும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது எங்கள் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே" என்று கேட்க, அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உண்மைதான்" என்றார்கள். "உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டானா?" என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், "ஆம்" என்றார்கள். "மேலும் உங்கள் தூதர் எங்களில் வசதி படைத்தோர் இறையில்லம் கஅபாவில் 'ஹஜ்' செய்வது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று கூறினாரே?" என்று கேட்டார். அதற்கும் நபி(ஸல்) அவர்கள், "உண்மைதான்" என்றார்கள்.

பிறகு அந்தக் கிராமவாசி, "உங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! இவற்றைவிட நான் அதிகமாக்கவும் மாட்டேன்; இவற்றிலிருந்து (எதையும்) குறைக்கவும் மாட்டேன்" என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவருடைய கூற்றை உண்மைப் படுத்திச் செயலாற்றினால் அவர் நிச்சயமாகச் சொர்க்கம் செல்வார்" என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி).


அத்தியாயம்: 1, பாடம்: 1.03, ஹதீஸ் எண்: 11
‏ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ الْعَبْدِيُّ حَدَّثَنَا بَهْزٌ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ قَالَ قَالَ أَنَسٌ كُنَّا نُهِينَا فِي الْقُرْآنِ أَنْ نَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَيْءٍ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ
ஸாபித் அல்புனானி(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ்(ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் தேவையில்லாக் கேள்விகள் கேட்க நாங்கள் குர்ஆன் மூலம் தடை விதிக்கப் பெற்றிருந்தோம்" என்று கூறிவிட்டு மேற்கண்ட ஹதீஸைப் போன்றே அறிவித்தார்கள்.



No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets