கெய்ரோ:உச்ச அரசியல் சாசன நீதிமன்றம் மற்றும் ராணுவ கவுன்சிலின் உத்தரவுகளை புறக்கணித்துவிட்டு எகிப்து பாராளுமன்றம் நேற்று கூடியது.
சபாநாயகர் ஸஅத் அல் கதாதனியின் தலைமையில் கூடிய பாராளுமன்றம் சிறிது நேரமே நீடித்தது. பாராளுமன்றத்தை கலைத்த நடவடிக்கையை குறித்து மதிப்பீடு செய்து மாற்று வழியைக் குறித்து ஆலோசிப்பதே பாராளுமன்ற கூட்டத்தின் நோக்கம் என சபாநாயகர் தெரிவித்தார். பாராளுமன்றம் கூடியது நீதிமன்றத்தை மீறும் நடவடிக்கை அல்ல என்றும், மாறாக தீர்ப்பை எவ்வாறு அமல்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பதற்காகும் என்று கதாதனி தெரிவித்தார். இதற்காக அப்பீல் நீதிமன்றத்தை அணுகுவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தவேண்டும் என்ற சபாநாயகரின் தீர்மானத்தை அங்கீகரித்த பிறகு பாராளுமன்றம் கலைந்தது.
பாராளுமன்ற கூட்டத்தை எகிப்து தேசிய தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. பாராளுமன்றத்தை கலைத்த உச்ச அரசியல் சாசன நீதிமன்றத்தின் உத்தரவை முடக்கியதைத் தொடர்ந்து அதிபர் முஹம்மது முர்ஸிக்கும், ராணுவம் மற்றும் நீதிமன்றத்திற்கு இடையேயான மோதல் போக்கு துவங்கியது. முர்ஸியின் உத்தரவை தள்ளுபடிச் செய்த நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு நடந்த தேர்தல் சட்டவிரோதம் என்றும், பாராளுமன்றத்தை கலைத்து ஜூன் 14-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு இறுதியானது என்றும் இதனை குறித்து மேல்முறையீடுச் செய்ய இயலாது என்றும் தெரிவித்தது.
ஆனால், இதனை நிராகரித்துவிட்டு நேற்று பாராளுமன்ற கூட்டம் கூடியது. இஸ்லாமியவாதிகளை பெரும்பான்மையாக கொண்ட பாராளுமன்றத்தை கலைத்த நடவடிக்கையை கண்டித்து ஜனநாயக எதிர்ப்பாளர்களின் தலைமையில் கடுமையான எதிர்ப்பு போராட்டங்கள் எகிப்தில் நடந்தன. பாராளுமன்றத்தை கலைத்த பிறகு பல முக்கிய அதிகாரங்களை ராணுவம் தம் வசப்படுத்தியது.
இதனிடையே, அதிபருக்கும், ராணுவத்திற்கும் இடையேயான பிரச்சனையை வெகு விரைவில் தீர்க்கவேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment