துபாய்:இனி சூடேறிய பாலைவன பூமியில் ரமலானின் நன்மைகளின் வசந்த மழை பொழியப் போகிறது. வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளிலும் எகிப்து, ஜோர்டான் நாடுகளிலும் வெள்ளிக்கிழமை புனித ரமலான் மாதம் துவங்கியது.
முஸ்லிம்களுக்கு ஒரு மாத காலம் இறையச்ச பயிற்சியை அளிக்கும் பாவங்களின் இலையுதிர்காலமாகவும், நன்மைகளின் பொற்காலமாகவும் திகழும் மாதம்தான் புனித ரமலான். ரமலானில் அதிகாலையில் இருந்து மாலை சூரிய அஸ்தமிக்கும் வரை நோன்பு நோற்றல், புனித திருக்குர்ஆனை ஓதுதல், இரவு சிறப்பு தொழுகை, பாவ மன்னிப்புக்கோரல், இறைவனிடம் தேவைகளை கேட்டல், தான தர்மங்களை வணங்குதல், பொறுமை, பச்சாதாபம், நல்லிணக்கம், ரமலானின் கடைசி இரவுகளில் வரும் ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் இரவை அடைவதற்காக இஃதிகாப்(மஸ்ஜிதில் தனித்திருத்தல்) போன்ற பண்புகளை வளர்த்துக்கொள்ளல் என நன்மைகளின் வசந்தகாலமாக ரமலான் திகழுகிறது.
இஃப்தார் என அழைக்கப்படும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக விரிவான ஏற்பாடுகள் வளைகுடா நாடுகளில் செய்யப்பட்டுள்ளன. இது தவிர இஃப்தார் கூடாரங்களும் உண்டு. இதில் நூற்றுக்கணக்கான சிலவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த முஸ்லிம்கள் பங்கேற்பார்கள்.
இஃப்தார் சங்கமங்கள் மனித நேயத்தின் நல்லுறவாக மாறுகின்றன.
கடுமையான கோடை காலம் கடந்த 25 ஆண்டுகளுக்கு இடையே இவ்வாண்டு ரமலானில் நிலவுகிறது. பெரும்பாலான வளைகுடா நாடுகளிலும் 40 டிகிரி செல்சியஸைவிட அதிகமாக வெப்பம் நிலவுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகாலை ஸஹ்ர் முடிவு 4.11 ஆகும். இவ்வேளை முதல் துவங்கும் நோன்பு மாலை 7.12க்கு மஃரிப் பாங்கு வரை நீடிக்கும். மொத்தம் 15 மணிநேரங்களை கொண்ட நோன்பின் நேரம் என்றாலும் முஸ்லிம்கள் குதூகலத்துடன் கடுமையான சூட்டையும் பொருட்படுத்தாமல் நன்மையான காரியங்களில் ஈடுபடுவார்கள்.
No comments:
Post a Comment