முஸ்லிம் தொழிலதிபர்கள் வியாபாரத்திலோ, இன்னபிற தொழில்துறைகளிலோ மட்டும் கவனம் செலுத்தி வந்த காலம் மலையேறிவிட்டது. இன்று சமுதாயத்தில் மிகப் பலமுள்ள மீடியாவிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லோரையும் எளிதில் சென்றடையக்கூடிய தொலைக்காட்சி ஊடகத்தில் அவர்கள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள் என்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
தொழில்துறைகளில் உடனே ஈட்டும் லாபம் மாதிரி மீடியா உலகில் ஈட்ட முடியாது என்றறிந்திருந்தும், அது பிரபலமாகி சூடுபிடிக்கும் வரை காத்திருக்கவேண்டும் என்றறிந்திருந்தும் காலத்தின் தேவையறிந்து பெரும் மூலதனத்தை இதில் கொட்டியிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. இது முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்காலத்தில் எற்படவிருக்கம் பிரகாசத்தை இப்போதே காட்டுகிறது.
ஆனால் அப்படி ஈடுபடுபவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முஸ்லிம் ஊடகம் என்றாலே வெறும் பயானும், இன்னபிற மதச் சடஙகுகளும், ஆச்சாரங்களும்தான் காட்டப்படும் என்ற நிலையை மாற்றவேண்டும்.
கடந்த ரமலானில் முஸ்லிம்கள் தொலைக்காட்சிச் சானல்களில் நடத்திய நிகழ்ச்சிகள் குறித்து ஆளூர் ஷாநவாஸ் ஒரு கட்டுரையில் அழகாக அலசியிருந்தார். எந்தச் சானலைத் திருப்பினாலும் வெறும் பயான் மட்டும்தான் நடத்தப்படுவதாக அதில் அவர் கவலை தெரிவித்திருந்தார்.
காட்சி ஊடகம் என்பது காட்சிப்படுத்துதலை மையப்படுத்தி அமைந்திருக்க வேண்டும். ஆயிரம் வார்த்தைகளை ஒரு காட்சி அழகாக வர்ணித்து விடும். அதுதான் மக்கள் மனங்களில் பதியவும் செய்யும்.
இன்று மீடியா என்பது பெரிய பெரிய ஜாம்பவான்களின் கைகளில் உள்ளது. அவர்களோடு நாம் போட்டி போடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே நமது நிகழ்ச்சிகள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சர்வதேசத் தரத்தில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் நாம் மீடியாவில் நிலைத்திருக்க முடியும்.
மீடியாவில் அவர்கள் எவ்வாறெல்லாம் சாதித்திருக்கிறார்கள் என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த கட்டுரையில் காண்போம்.
தொடரும்…
MSAH source by thoothu online.com
No comments:
Post a Comment