நுஐம் பின் மஸ்ஊத் அல் அஷ்ஜஈ (نُعَيْمِ بْنِ مَسْعُودٍ الْأَشْجَعِيِّ)
அது ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம். 10,000 போர் வீரர்களுடன் மக்கத்துப் படையினர் மதீனாவை முற்றுகை இடுவதற்காக வந்திருந்தனர். நடுவில் புதிதாய் வெட்டப்பட்ட அகழியொன்று அவர்களை மேற்கொண்டு முன்னேற விடாமல் தடுத்துக் கிடந்தது. முஸ்லிம்களுக்குக் கடுமையான சோதனை நேரம் அது. போர்மேகம் சூழ்ந்து 27 நாட்கள் ஆகியிருந்தன.
அன்று இரவு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள்: "யா அல்லாஹ்!, நீ வாக்குறுதி அளித்தாயே வெற்றி, அதை வழங்கும்படி மன்றாடிக் கேட்கிறேன்".
அந்த நள்ளிரவில் முற்றுகை இட்டிருந்த மக்கத்துப் படைப்பிரிவிலிருந்து ஒருவர் அவசரமாய் நழுவி முஸ்லிம்களின் கூடாரத்தின் பக்கம்வர, அவரை நபியவர்கள் பார்த்து விட்டார்கள். அடையாளம் தெரிந்துவிட ஆச்சரியத்துடன், "நுஐம் பின் மஸ்ஊத்!"
"ஆமாம், நான்தான் அல்லாஹ்வின் தூதரே!" என்றார் நுஐம்.