பாபர் மசூதியை கரசேவர்கள்
இடிக்க பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் ஆவேசப்
பேச்சும், தூண்டுதல் பேச்சும்தான் காரணம். எனவே அவர்கள் வழக்கு
விசாரணையிலிருந்து விடுபட முடியாது, விசாரணையை அவர்கள் நிச்சயம் சந்தித்தாக
வேண்டும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இப்படித் தெரிவித்துள்ளது சிபிஐ.
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கரசேவர்கள் என்று அழைக்கப்பட்ட சங்
பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் பாபர் மசூதி இடித்துத்
தரைமட்டமாக்கப்பட்டது. அந்த விவகாரம் இன்று வரை தீராமல் இழுபறியாக
நீடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 19 வருடங்களாக பாபர் மசூதி இடிப்பு
தொடர்பான வழக்கும் அனுமார் வால் போல நீண்டு கொண்டே போகிறது
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக 197/92 என்ற எண்ணில் ஒரு முதல் தகவல்
அறிக்கையும், 198/92 என்ற எண்ணில் இன்னொரு முதல் தகவல் அறிக்கையும் பதிவு
செய்யப்பட்டது.
முதல் தகவல் அறிக்கையில் கரசேவகர்கள் என்ற பட்டியலில் பாபர் மசூதியை
இடித்தவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 2வது முதல் தகவல்
அறிக்கையில், கரசேவகர்களிடம் வெறியுணர்வைத் தூண்டும் வகையில் ஆவேசமாகப்
பேசியது, சதித் திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள்
சுமத்தப்பட்டு அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி, வினய் கத்தியார்,
சாத்வி ரிதம்பரா, அசோக் சிங்கால், பால் தாக்கரே, கிரிராஜ் கிஷோர் ஆகியோரின்
பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த வழக்கை 1992ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி முதல் சிபிஐ விசாரித்து
வருகிறது. சிபிஐ சார்பில் கடந்த 1993ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி லக்னோ
மாஜிஸ்திரேட் கோர்ட்டில், இரண்டு வழக்கிலும் சேர்த்து அத்வானி உள்ளிட்ட 40
பேருக்கு எதிராக குற்றபப்த்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1994ம் ஆண்டு
ஏப்ரல் 27ம் தேதி வழக்கு செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. 2001ம் ஆண்டு
லக்னோ செஷன்ஸ் நீதிமன்றம், அத்வானி, பால் தாக்கரே, கல்யாண் சிங் உள்ளிட்ட
21 பேர் மீதான சதித் திட்டம், சதி ஆலோசனை ஆகிய வழக்கிலிருந்து விடுவித்து
உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிபிஐ அப்பீல் செய்தது.
அப்பீல் மனுவை விசாரித்த ரேபரேலி கோர்ட், அத்வானி உள்ளிட்ட 8 பேர் மீதான
குற்றச்சாட்டுக்களில், அத்வானியை மட்டும் விடுவித்து மற்ற 7 பேர் மீது
குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து லக்னோ
உயர்நீதிமன்றத்தை நாடியது சிபிஐ. அதை விசாரித்த உயர்நீதிமன்றம் அத்வானி
மீதும் குற்றச்சாட்டைப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்படி குற்றச்சாட்டுப்
பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ உச்சநீதிமன்றத்தில் ஒரு
பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அத்வானி உள்ளிட்டோரை
வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது. அவர்களது ஆவேசப் பேச்சினால்தான் பாபர்
மசூதி இடிக்கப்பட நேரிட்டது. எனவே இவர்கள் விசாரணையை சந்தித்தாக வேண்டும்
என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டிருப்பதாவது...
முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில குற்றவாளிகளைப் பிரித்து
2வது முதல் தகவல் அறிக்கையில் உள்ளோருடன் சேர்த்து விசாரிப்பது இயலாத
காரியம். மேலும் இரண்டு முதல் தகவல் அறிக்கைகளும் வேறு வேறு வழக்குகள்
என்பதும் தவறான வாதமாகும். இரு முதல் தகவல் அறிக்கைகளிலும் இடம்
பெற்றுள்ளவர்களின் ஒரே நோக்கம் சர்ச்சைக்குரிய கட்டடத்தை (பாபர் மசூதி)
இடித்துத் தரைமட்டமாக்குவது என்பது மட்டுமே. இந்த சதித் திட்ட வேலையில்
அனைவருமே இணைந்து ஒரே நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்படுவதற்கு முன்பு, 2வது முதல் தகவல்
அறிக்கையில் இடம் பெற்றுள்ள 8 குற்றம் சாட்டப்பட்டோரும், தாக்குதலைத்
தூண்டி விடும் வகையில் ஆவேசமாக பேசியுள்ளனர். இந்தப் பேச்சால்
தூண்டப்பட்டுத்தான் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள குற்றம்
சாட்டப்பட்டோர் சம்பந்தப்பட்ட கட்டடத்தை இடித்துத் தரைமட்டமாக்கினர்.
சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்டபோது 2வது முதல் தகவல் அறிக்கையில்
இடம் பெற்றுள்ள தலைவர்கள் அதை கை தட்டியும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்
கொண்டும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடியுள்ளனர். சர்ச்சைக்குரிய
கட்டடம் உள்ள இடத்திலிருந்து 175 மீட்டர் தொலைவில் உள்ள கட்டடத்தில்
இருந்தபடி சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்படுவதை இவர்கள் பார்த்து
ரசித்துள்ளனர்.
ஆவேசமாக கூச்சலிடுவது, ஒரு சமூகத்தினருக்கு எதிராக இன்னொரு சமூகத்தினரை
தூண்டி விடுவது என்பது தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் செயலாகும். எனவே
இவர்களைத் தனித்துப் பார்ப்பது என்பது இயலாத காரியம்.
எனவே குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள அத்வானி உள்ளிட்ட தலைவர்கள்
நிச்சயம் விசாரணையை சந்தித்தாக வேண்டும் என்று சிபிஐ கூறியுள்ளது.
No comments:
Post a Comment