Facebook Twitter RSS

Saturday, May 05, 2012

Widgets

ஒரு வருட ஜெ. ஆட்சி... பாஸா? பெயிலா?



ஓர் ஆண்டு... thanks vikatan.com,
கடந்த சட்டசபைத் தேர்தலில் சுனாமி​யாக எழுந்த மக்களின் எதிர்ப்பு அலை, கருணாநிதியை ஆட்சிக் கட்டிலில் இருந்து அப்புறப்​படுத்தியது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன்... அமோகப் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டார் ஜெயலலிதா. மே 16-ம் தேதியோடு ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்ய இருக்கிறார், ஜெய​லலிதா. இந்த ஒரு வருடத்தில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்.

ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தாரா ஜெயலலிதா? அவர்களுடைய பிரச்னைகள் தீர்க்கப்பட்டதா? இந்த ஒருவருட ஆட்சியின் மீது மக்களின் மதிப்பீடு என்ன? என்று கேள்விகள் எழவே, கருத்துக் கணிப்பு நடத்த முடிவு எடுத்தோம். ஓர் ஆட்சி தன்னுடைய சிந்தனை​களை ஓரளவாவது அமல்படுத்த இரண்டரை ஆண்டுகள் ஆகும் என்றாலும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய பாதையில் இவரது ஆட்சி செல்கிறதா என்பதே இந்தக் கருத்துக் கணிப்பின் நோக்கம்.
ஜெயலலிதாவின் ஆட்சி முறை, முதல்வராக அவரது செயல்பாடு, அமைச்சர்களின் பங்கேற்பு, மின்வெட்டு, கட்டண உயர்வுகள், சட்டம் - ஒழுங்கு, இலவசத் திட்டங்கள், சசிகலா விவகாரம் என்று 18 கேள்விகளை சர்வேயில் முன்வைத்தோம். விகடன் படை  களம் இறங்கியது. கிராமம், நகரம், மாநகரம் என  எல்லாம் புகுந்து புறப்பட்டு மக்களைச் சந்தித்து வந்தது ஜூ.வி. டீம். ஏப்ரல் 26 தொடங்கி மே 2-ம் தேதி வரை எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் 3,659 பேரிடம் வினாக்களைக் கொடுத்து விடைகளை வாங்கினோம். இதில் பெண்கள் எண்ணிக்கை மட்டும் 1,445.
சர்வே எடுக்கச் சென்ற ஜூ.வி. டீமுக்கு நிறையவே புதுமையான அனுபவங்கள். சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கேட்டது, 'ஏங்க... இந்த கரன்ட் பிரச்னை எப்போங்க தீரும்?’
'எங்களுக்கு வேற எதுவுமே வேணாம். கரன்ட் மட்டும் கொடுத்தாப் போதுங்க...’ என்று, மக்கள் கெஞ்சு​கிறார்கள். மின்சாரத்தை அடுத்து, பால், பஸ் மற்றும் மின்கட்டண உயர்வை மிகவும் கடுமையாகச் சாடினார்கள். காரசாரமான விமர்சனங்களை ஜெயலலிதா ஆட்சி மீது மக்கள் வைத்தார்கள். ஒரு வருடத்துக்கு முன், சிம்மாசனத்தில் தூக்கி வைத்துக் கொண்டாடிய மக்கள், இப்போது ஜெயலலிதா மீது அதிக ஆத்திரத்தில் இருப்பதை உணர முடிந்தது.  'இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், லேப்டாப் எல்லாம் எங்களுக்கு இன்னும் கிடைக்கலை. எப்போ கொடுப்பாங்க?’ என்று ஒரு சிலரே கேட்டார்​கள். மற்ற அனைவருக்கும் மின்சாரம்தான் முதல் முக்கியத் தேவையாக இருக்கிறது.
ஜெயலலிதாவின் ஒரு வருட ஆட்சி என்ற கேள்விக்கு, 'சுமார்’ என்று பதில் சொன்னவர்களே அதிகம். மின்வெட்டுப் பிரச்னையைப் பொறுத்த வரை, 'மோசம்’ என்று சொன்னவர்கள் 47.31 சதவிகிதம் பேர். 'தி.மு.க. ஆட்சியைவிட மோசம்’ என்று சொன்னவர்கள் 37.66 சதவிகிதம். மின்வெட்டுப் பிரச்னைக்கு மட்டும் 84.97 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் 'மின்’ வெப்பத்தில் இருக்கிறார்கள். மின்வெட்டுப் பிரச்னையைத் தீர்ப்பதில் அரசின் செயல்பாடு எப்படி? என்கிற கேள்விக்கு 'அரசு உரிய அக்கறை காட்டவில்லை’ என்பதே அதிக மக்களின் கருத்து.
புதிய சட்டசபை, அண்ணா நூலகத்தை ஜெய​லலிதா முடக்கியது தொடர்பான கேள்விகளுக்கு, 'தவறு’ என்று அதிகபட்சமாக 50.23 சதவிகிதம் பேர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள். பால், பஸ், மின் கட்டண உயர்வு பற்றிய கேள்விக்கு 'படிப்படியாக உயர்த்தி இருக்கலாம்’ என்று கருத்து சொன்னவர்கள்தான் அதிகம்.
ஜெயலலிதா ஆட்சிக்கு சாதகமாக ஒரே விஷயம்... நில அபகரிப்புப் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான். தி.மு.க பிரமுகர்கள் மீது தொடுக்கப்பட்ட அபகரிப்புப் புகார்களையும், அதிரடி நடவடிக்கைகளையும் 'நியாயமானது’ என்று வரவேற்கிறது தமிழகம். ஜெயலலிதா கொண்டுவந்த இலவசங்கள் ஏனோ பெரிய வரவேற்பைப் பெறவில்லை. மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் போன்ற இலவசத் திட்டங்கள் தொடர்பான கேள்விக்கு, 'மக்கள் வரிப் பணம்தான் வீண் ஆகிறது’ என்று 63.41 சதவிகிதம் பேர் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
இப்படி சர்வே முடிவுகள் நிறையவே ஆச்சர்யங்​களையும் அதிர்ச்சிகளையும் உண்டாக்கி இருக்​கிறது.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets