ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணியிடங்களுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் (யு.பி.எஸ்.சி.) தேர்வில் 910 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். தமிழகத்திலிருந்து 68 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
2011-12 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் தேர்வு எழுதிய 2 லட்சத்து 40 ஆயிரம் பேரில் 910 மாணவ, மாணவியர் மட்டும் வெற்றி பெற்றனர்.
இதில், தில்லியைச் சேர்ந்த சேனா அகர்வால் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தில்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர் இவர்.
மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸில் எம்.ஏ. பட்டம் பெற்ற ருக்மணி ரியார் 2-வது இடத்தையும், தில்லி ஐ.ஐ.டி.யில் எம்.டெக். படித்த பிரின்ஸ் தவாண் என்ற மாணவர் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தமிழக மாணவர் 5-வது இடம்: ராமாநாதபுரத்தைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானியான எஸ்.கோபால் சுந்தரராஜ், அகில இந்திய அளவில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். போடி நாயக்கனூரைச் சேர்ந்த எம்.சுந்தரேஷ் பாபு 38-வது இடத்தையும், புதுக்கோட்டையைச் சேர்ந்த கே.செந்தில்ராஜ் 57-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டைவிட குறைவு: தமிழக மாணவர்கள் யு.பி.எஸ்.சி. தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான எண்ணிக்கையிலேயே வெற்றி பெற்றுள்ளனர். மொத்தம் 910 மாணவர்களில் 68 பேர் தமிழக மாணவர்கள். கடந்த ஆண்டு இந்தத் தேர்வில் 96 மாணவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
மொத்தம் 2 லட்சம் பேர்: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஜூன் 12-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 4.7 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 2.4 லட்சம் மாணவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்றனர்.
இவர்களில் 11,984 மாணவர்கள் பிரதானத் தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரதான தேர்வு எழுதியவர்களில் 2,417 மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு 2012 மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களில் 183 பேர் தமிழக மாணவர்கள். அதன்பிறகு, முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.
முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களில் படித்த மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 910 பேரில் 195 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவேன்
ராஜராஜேஸ்வரி
ஐ.ஏ.எஸ். தேர்வை மீண்டும் எழுத உள்ளதாக இந்தத் தேர்வில் 556-வது ரேங்க் பெற்ற மாணவி ராஜராஜேஸ்வரி தெரிவித்தார். (இவருக்கு இப்போது ஐ.ஆர்.எஸ்.தான் கிடைக்கும்)
சீர்காழிக்கு அருகே மங்கை மடம் கிராமத்தைச் சேர்ந்த இவர் பி.எஸ்சி. (வேளாண்) பட்டம் பெற்றுள்ளார். 2010 ஆம் ஆண்டில் தேர்ச்சியடைந்த இவர், 8 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றாலும் ஐ.ஏ.எஸ். ஆவதே தனது லட்சியம் என்று அவர் தெரிவித்தார். ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று முடிவு எடுத்ததுமே செய்தித் தாள்களுக்கு முக்கியத்துவம் அளித்து படித்து வந்ததாகக் கூறுகிறார்.
ஓர் ஆண்டு உழைத்தால் ஐ.ஏ.எஸ். ஆகலாம்
எம். சுந்தரேஷ்பாபு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்காக ஓர் ஆண்டு கடினமாக உழைத்தால் வெற்றி பெறலாம் என்று இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள எம். சுந்தரேஷ்பாபு கூறினார். இவர் இந்தத் தேர்வில் 38-வது ரேங்க் பெற்றுள்ளார்.
போடிநாயக்கனூரைச் சேர்ந்த இவர் மதுரையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பி.எஸ்சி. (விவசாயம்) படித்துள்ளார். இவரது தந்தை முருகேசன், தாயார் ஜெயா. பள்ளி ஆசிரியை.
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றது குறித்து அவர் கூறியது:
ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு 2009-ம் ஆண்டிலிருந்து முயற்சி செய்து வருகிறேன். கடந்த முறை நேர்முகத் தேர்வு வரை சென்று வெற்றி பெறவில்லை. ஆனாலும், தொடர்ந்து விடாமுயற்சியுடன் படித்ததால் வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த வெற்றிக்கு எனது பெற்றோர் முக்கிய காரணம்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியான பிறகு மக்கள் எளிதில் அணுகக்கூடிய அதிகாரியாக இருப்பேன். முடிந்தவரை ஏழைகளுக்கு உதவி செய்வேன்.
ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக புவியியல், விவசாயம் ஆகிய இரண்டு பாடங்களை விருப்பப் பாடங்களாகத் தேர்ந்தெடுத்துப் படித்தேன். நாளொன்றுக்கு சராசரியாக 10 மணி நேரம் வரை உழைத்தேன்.
கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால் ஓர் ஆண்டுக்குள் யார் வேண்டுமென்றாலும் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறலாம். அதோடு, அதிருஷ்டமும் முக்கியம்.
ஒரு முறை தோல்வியடைந்தவர்களும் மீண்டும், மீண்டும் முயற்சித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றார் அவர்.
No comments:
Post a Comment