நுஐம் பின் மஸ்ஊத் அல் அஷ்ஜஈ (نُعَيْمِ بْنِ مَسْعُودٍ الْأَشْجَعِيِّ)
அது ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம். 10,000 போர் வீரர்களுடன் மக்கத்துப் படையினர் மதீனாவை முற்றுகை இடுவதற்காக வந்திருந்தனர். நடுவில் புதிதாய் வெட்டப்பட்ட அகழியொன்று அவர்களை மேற்கொண்டு முன்னேற விடாமல் தடுத்துக் கிடந்தது. முஸ்லிம்களுக்குக் கடுமையான சோதனை நேரம் அது. போர்மேகம் சூழ்ந்து 27 நாட்கள் ஆகியிருந்தன.
அன்று இரவு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள்: "யா அல்லாஹ்!, நீ வாக்குறுதி அளித்தாயே வெற்றி, அதை வழங்கும்படி மன்றாடிக் கேட்கிறேன்".
அந்த நள்ளிரவில் முற்றுகை இட்டிருந்த மக்கத்துப் படைப்பிரிவிலிருந்து ஒருவர் அவசரமாய் நழுவி முஸ்லிம்களின் கூடாரத்தின் பக்கம்வர, அவரை நபியவர்கள் பார்த்து விட்டார்கள். அடையாளம் தெரிந்துவிட ஆச்சரியத்துடன், "நுஐம் பின் மஸ்ஊத்!"
"ஆமாம், நான்தான் அல்லாஹ்வின் தூதரே!" என்றார் நுஐம்.

"இந்த இரவு நேரத்தில் இங்கு உன்னை அழைத்து வந்தது எது?" என்று கேட்டார்கள்.
"நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் அல்லாஹ்வின் தூதரே! ஆனால் என் மக்களுக்கு அது இன்னும் தெரியாது. சொல்லுங்கள் நான் என்ன செய்ய வேண்டும்?"
எதிரித் தரப்பிலிருந்து நழுவி வந்தவரிடமிருந்து வந்த ஆச்சரியமான பதில் அது - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக. முஹம்மதை அல்லாஹ்வின் தூதர் என ஒப்புக் கொண்டதாக!
இறைவனின் இரண்டு அற்புதங்கள் வெளிப்பட்ட போர் அது. அதிலொன்று நுஐம் பின் மஸ்ஊத். அவரது புத்தி சாதுரியமான போர் உத்தி!
கத்தஃபான் (بنو غطفان) எனும் கோத்திரத்தினர் நஜ்துப் பகுதியில் வாழ்ந்து வந்தனர். நஜ்துப் பிரதேசம் மதீனா நகருக்கு வடக்கே அமைந்துள்ளது. நுஐம், அந்த கத்தஃபான் கோத்திரத்தைச் சேர்ந்தவர். துடிப்பான இளைஞர், மிகுந்த புத்திசாலி. எந்தப் பிரச்சினையையும் தீர்க்கவல்ல புத்திசாதுர்யம் இயற்கையாய் அவரிடம் அமைந்திருந்தது. வரம், இறைவனளித்த வரம். ஆனால் அவரிடம் ஒரு பலவீனம் இருந்தது.
இதெல்லாம் ஒரு பலவீனமா? என்று ஆச்சரியத்துடன் யாரும் முறைக்கலாம். என்ன செய்ய? அந்தளவு முற்றிப்போன நாகரீகம் நம்முடைய நிகழ்காலம். நுஐம் உல்லாசப் பேர்வழி. அதுதான் அவரது பலவீனம். புறம்பான உல்லாசம் தேடிப்போவது அவர் வாடிக்கை. அவருக்குப் பிடித்த மாதிரி யத்ரிப் நகரில் கிடைத்தது அத்தகைய உல்லாசம். மதீனாவின் தொட்டில் பெயர் யத்ரிப் (يثرب).
யத்ரிப் நகரில் மூன்று யூதக் கோத்திரத்தினர் வாழ்ந்து வந்தனர். பனூ கைனுக்கா (بنو قينقاع), பனூ நதீர் (بنو النظير), பனூ குரைளா (بنو قريظة). இதில் பனூ குரைளா கோத்திரத்தினரின் சகவாசம் நுஐமுக்கு அமைந்தது. அவர் குஷியடையும் விதமான உல்லாசம், பாடல்கள், மதுபானங்கள் அவர்களிடம் அவருக்கு ஏகமாய்க் கிடைத்தன. யூதர்களுக்கு நுஐமால் கொழுத்த வருமானம். மனம் நாடும் போதெல்லாம் நஜ்திலிருந்து குதிரையோ, ஒட்டகமோ ஏறி யத்ரிபுக்கு வந்து விடுவார் நுஐம். மதுபானக் கடைகளில் பணம் தண்ணீராய்க் கரையும். பனூ குரைளாவினருக்கு நுஐம் தடையின்றிப் பொன் முட்டையிடும் வாத்து. எனவே, நுஐமின் நெருக்கமான சகவாசம் குரைளாவினருக்கு அமைந்து விட்டது. அதுவே அவர்களுக்கு ஒரு பாதகமாய் அமைந்துவிடப் போவதை அப்பொழுது அவர்களும் அறியவில்லை; நுஐமும் நினைத்திருக்கவில்லை.
குடி, விபச்சாரம், அனாச்சாரம் என்பதெல்லாம் இஸ்லாம் தோன்றுவதற்கு முன் அரேபியாவில் இருந்தவர்களிடையே மேட்டிமையை வெளிப்படுத்தும் செயல்கள். இந்நிலையில் புத்தெழுச்சியுடன் இஸ்லாம் மக்காவில் புறப்பட்டதும் அந்தச் செய்தி அப்படி-இப்படியென்று நுஐம் காதிலும் வந்து விழுத்தான் செய்தது. ஆனால் அவர் வாழ்ந்து கொண்டிருந்தது கேளிக்கை உலகம்; உல்லாச உலகம். அதனால் அந்தச் செய்தி அவருக்குப் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்திவிடவில்லை. ஓரளவு புரிந்த வகையில் இஸ்லாமும் தனது கேளிக்கையும் பல காத தூரம் இடைவெளி கொண்டவை என்று தெரிந்ததாலும், தனது உல்லாசத்திற்கு இஸ்லாம் மாபாதக இடைஞ்சலாய் அமைந்து விடும் என்று அவர் யூகித்து விட்டதாலும், "அதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது" என்று நிராகரித்து விட்டார். தன் போக்கில் வாழ்ந்து கொண்டிருந்தார்.
யத்ரிப் நகரில் மூன்று யூதக் கோத்திரத்தினர் வாழ்ந்து வந்தார்களல்லவா? அவர்கள் ஒரு காலத்தில் எங்கெங்கிருந்தோவெல்லாம் அரேபியாவிற்குள் - குறிப்பாக யத்ரிபுக்குள் - வந்து சேர்ந்து குடியேறி, அரபு மொழி பேசி, அரபியர்களுடன் வாழ்ந்து வந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அவர்களது வேதம் அறுதியிட்டுச் சொல்லியிருந்தது. வருவார் ஓர் இறுதித் தூதர், அவர் இன்னன்ன மாதிரியுள்ள ஒரு பிரதேசத்தில் தோன்றுவார்; உங்களையெல்லாம் உய்விப்பார் என்று. அதன்படி அவர்கள் கண்டறிந்து கொண்டது மதீனா பிரதேசத்தை. அதனால் காத்திருந்தார்கள் - தலைமுறை தலைமுறைகளாக!
அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை, வேத வாக்கும் பொய்யாகவில்லை. வந்து சேர்ந்தார் முஹம்மது நபி (ஸல்). யத்ரிப் மதீனாவானது. யூதர்கள் மாபெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். நகரின் பெயர் மாற்றத்தினாலெல்லாம் அல்ல; அவரது தோற்றுவாய் வேறு என்பதால். நபிமார்கள் மாறி மாறி அவதரித்த தங்களது பனீ இஸ்ராயீல் கிளையிலிருந்து இறுதி நபி வருவார் என்று காத்திருந்தால், சம்பந்தமேயில்லாமல், பனீ இஸ்மாயீல் கோத்திரத்தில் தோன்றிய ஒருவர் தன்னை நபி என்கிறார், இறைவனின் தூதர் என்கிறார், வேதச்செய்தி வருகிறது என்கிறார் என்று திகைத்து விட்டார்கள். தங்களது பிள்ளையேபோல் அவரை அவர்களுக்கு அடையாளம் தெரிந்தது. இருந்தாலும் அகங்காரம் வென்றது; நிராகரித்தனர். மனதில் உண்மை இன்னதென்று உணர்ந்தே நிராகரித்தனர். அத்துடன் இருந்து விட்டாலும் பரவாயில்லை. வினை செய்யத் தொடங்கினர். தீவினை!
ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை; இணக்கமாய் வாழலாம் வாருங்கள் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அனைவருடனும் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார்கள். யூதர்களும் கையெழுத்திட்டார்கள். ஆனால் அவர்களுக்குத் தொன்றுதொட்ட குலவழக்கம் ஒன்று இருந்தது. எக்காலத்திலும் உடன்படிக்கையைப் பேணிப் பாதுகாப்பது இழிவானது எனும் வழக்கம். அதை மீறலாகுமோ? எனவே மெதுமெதுவாக உடன்படிக்கையை மீற ஆரம்பித்தார்கள். விஷயம் தீவிரமாகி முதற்கட்டமாக பனூ கைனுகாவுடன் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. அதை விரிவாக வேறொரு நிகழ்ச்சியில் பின்னர் பார்ப்போம். பிரச்சனை ஏற்பட்டது. வெட்டுக் குத்து நிகழ்ந்து, இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது என்பதுவரை இப்போது தெரிந்தால் போதும். "உங்கள் அட்டகாசம் போதும்" என்று அந்தக் கோத்திரத்தினர் அனைவரும் மதீனாவிலிருந்து வெளியேற்றப் பட்டனர்.
இதைப் பார்த்து மற்ற இரு கோத்திரத்தினரும் பாடம் படித்திருக்க வேண்டும். அல்லாமல் அடுத்துத் தொல்லை கொடுக்க ஆயத்தமானார்கள். இம்முறை பனூ நதீர். முஸ்லிம்களையும் முஸ்லிம் பெண்களையும் பற்றி முகம் சுளிக்க வைக்கும் ஆபாசக் கவிதை, புறம், அவதூறு, மக்காவிற்குச் சென்று குரைஷிகளுக்குத் தூபம் என்பதெல்லாம் போக, ஒரு கட்டத்தில் முஹம்மது நபியின் தலைமேல் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொல்லவே துணிந்து விட்டனர். பொறுமையின் எல்லை அத்துடன் முடிவடைந்தது. முஸ்லிம்கள் போர் தொடுக்கத் தயாரானதும் தங்களது கோட்டை-கொத்தளங்களுக்குள் சென்று பூட்டிக் கொண்டனர். முற்றுகையிடப்பட்டது. ஏறக்குறைய இருவார முற்றுகைக்குப் பிறகு அவர்கள் சரணடைய, "இத்துடன் சரி, இனி இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கக் கூடாது, கிளம்பிச் செல்லுங்கள்" என்று அனுமதியளிக்கப்பட்டது.
மதீனாவிலிருந்து கிளம்பிய பனூ நதீர் கூட்டத்தில் பெரும்பகுதியினர் கைபருக்குப் புலம் பெயர, மற்றவர்கள் சிரியா சென்று விட்டனர். கைபர் சென்று குடியேறியவர்கள் ஒழுங்காய் அங்கேயே அமைதியாய் வாழ்ந்திருக்கலாம் - ம்ஹும்! கூடவே பிறந்த விபரீத புத்தி விடவில்லை.
மக்கத்துக் குரைஷிகள் முஸ்லிம்களுடனான முந்தைய போர்களின் வலியால் கோபத்துடன் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்த நிலையில், ஹுயை பின் அக்தப் (حيي بن أخطب) எனும் பனூ நதீரின் முக்கியப் புள்ளி, மக்கா சென்று குரைஷித் தலைவர்களைச் சந்தித்தான். இந்த ஹுயை பின் அக்தபின் மகளான சஃபிய்யா பின்த் ஹுயை (ரலியல்லாஹு அன்ஹா) பின்னர் முஹம்மது நபியவர்களின் மனைவியானது தனிக் கதை. மக்கா சென்ற அவன் சந்திக்க வேண்டிய தலைவர்களைச் சந்தித்து, சரியான முறையில் கிளற, ஏற்கெனவே அனல் அடங்காமலிருந்த நெருப்பு, எளிதில் பற்றிக் கொண்டது.
"படை திரட்டி நீங்கள் மதீனா வந்தடையும்போது நாங்களும் படையுடன் கலந்து கொள்கிறோம். அந்த முஹம்மதையும் அவர் கூட்டத்தையும் ஒரு கை பார்த்து விடுவோம்" என்று பேசிக் கொள்ளப்பட்டது. சுபயோக சுபதினமாக ஒரு தேதி குறித்தார்கள். அபூஸுஃப்யான் தலைமையில் குரைஷிகள் படை தயாராக ஆரம்பித்தது.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வரும் முஸ்லிம்களை அழித்தொழிக்க இது பத்தாது. மேலும் கூட்டணி அமைத்துப் பெரும்படை திரட்ட வேண்டும் என்று நிச்சயம் அறிந்திருந்தார்கள் பனூ நதீர் கூட்டத்தார். எனவே அங்கிருந்து அப்படியே நஜ்து சென்றார்கள். அங்குள்ள கத்தஃபான் கோத்திரத்தைப் பேசி வளைத்தார்கள். வளைப்பதற்கு நல்ல விலை பேசப்பட்டது, விளைச்சலில் பாதி கத்தஃபானுக்கு அன்பளிப்பு என்று. அதாவது தங்கள் அறுவடையில் சரிபாதி என்று வாக்களிக்கப்பட்டது. இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று ஏற்றுக்கொண்டு உயைனா இப்னு ஹஸ்ன் தலைமையில் கத்தஃபானின் படை தயாரானது. அதன் முன்னணிப் படை வீரராக நியமிக்கப் பெற்றவர் நுஐம் பின் மஸ்ஊத்.
இது தவிர துலைஹா அஸதி தலைமையில் பனீ அஸத் சேர்ந்து கொண்டனர். பனூ ஸுலைம், பனூ முர்ரா, பனூ ஷுஜா போன்ற இதர கோத்திரத்தினரும் ஏதோ திருவிழா வேடிக்கை பார்க்கப் போவதுபோல் சேர்ந்து கொண்டனர்.
காலாட்படை, குதிரைப்படை என கூட்டணிப் படையினர் பத்தாயிரம்வரை திரண்டு விட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அது பெரிய படை. அந்தக் காலகட்டத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால் அது வலுவான பெரிய படை.
சற்று மூச்சு வாங்கிக் கொண்டு நிகழ்காலத்தைப் பார்த்தால், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ஒழித்துக் கட்ட கூட்டணிப்படை அமைப்பது என்பது ஆயிரத்து நானூற்று சொச்சம் வருடங்களாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்ற நிதர்சனம் புரியும். ஏதும் மாற்றமில்லை. அன்று பனூ நதீர், இன்று வல்லரசு நாட்டான். அவ்வளவே!
செய்தி மதீனா வந்தடைந்தது. முஹம்மது நபி (ஸல்) உடனே தம் தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். முஸ்லிம்கள் தரப்பில் ஏறக்குறைய மூவாயிரம் படை வீரர்கள் தேறினர். எதிரியின் வலுவுடன் ஒப்பிட்டால் மூன்றில் ஒரு பங்குதான். காட்டுத்தனமாய் ஒரு முடிவுடன் கூட்டணிப் படை முன்னேறி வருகிறது. என்ன செய்யலாம் எனப் பல திட்டங்கள் விவாதிக்கப்பட்டன. ஸல்மான் அல் ஃபாரிஸி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் எடுத்து வைத்த ஒரு யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. பாரசீகத்திலிருந்து வந்தவர் அவர். அரபு நாட்டுப் போர் வீரர்க்ளுக்கு அறிமுகமாகி இல்லாத புதிய தற்காப்பு முறை ஒன்று தெரிவித்தார்.
அகழி!
அனைவருக்கும் அது பிடித்துப்போக, இராப்பகலாக வேலை நடக்க ஆரம்பித்து அகழி தயாரானது.
முஸ்லிம்கள் அகழி வெட்டிவிட்டுக் காத்திருந்தனர். கூட்டணிப் படை மதீனாவை நெருங்கி விட்டிருந்தது. அந்த நேரத்தில் பனூ நதீர் கூட்டத்தார் மற்றொரு சதித் திட்டம் தீட்டினர். மதீனாவில் மிஞ்சியிருந்த பனூ குரைளாவினர், ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டு முஸ்லிம்களுடன் இணக்கமாக இருந்து வந்தார்களல்லவா? அவர்களைச் சென்று சந்தித்து நோண்ட ஆரம்பித்தார்கள். "நீங்களும் வந்து கூட்டணியில் இணைந்து கொள்ளுங்கள்" என்று. மற்றப் படைகளாவது வெளியிலிருந்து அணிதிரண்டு மதீனா வருகின்றன. இவர்கள் உள்ளுக்குள்ளேயே இருக்கிறார்கள். போர் என்று அவர்களும் குதித்தால், முஸ்லிம்களின் கதி? அதற்குத்தான் சமயோசிதப் பிரயத்தனம்.
"ம்ம்ம், யோசனை நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும்..." என்று மிகவும் யோசித்தார்கள், பயந்தார்கள் பனூ குரைளாவினர். முஹம்மதை ஒழித்துக் கட்டினால் தேவலை என்ற பேரவா அவர்களின் உள்ளுக்குள்ளும் பலமாய் இருந்ததுதான். "நாங்கள் விரும்பி நிறைவேற்ற நினைக்கும் ஒரு காரியத்திற்கு எங்களையும் சேர்ந்து கொள்ளச் சொல்கிறீர்கள். ஆனால் முஹம்மதுக்கும் எங்களுக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை இருப்பது உங்களுக்குத் தெரியும். அமைதியும் நிம்மதியும் மதீனாவில் எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அவருடன் சமாதானம் மீறக் கூடாது என்று அது கூறுகிறது. அந்த உடன்படிக்கை இன்னமும் அமலில்தான் உள்ளது. நாங்கள் உங்களுடன் சேர்ந்து கொள்ளப்போய், முஹம்மத் இந்தப் போரில் வென்று விட்டால் அவரின் தண்டனை மிகவும் கடுமையானதாக இருக்கும். மேலும் சூழ்ச்சிக்குப் பலனாய் நாங்கள் நாடு துறக்கும் படியாகிவிடும்" என்றெல்லாம் கவலை தெரிவித்தனர்.
பனூ நதீர் சளைக்கவில்லை. வரும் படையினரின் பலம் எடுத்துரைத்தார்கள். முஹம்மத் இம்முறை எப்படியும் தோல்வியடைவது உறுதி என்று தர்க்கம் விவரித்தார்கள். முழுசாய் இந்தப் பிரச்சனை ஒரு முற்றுப் பெற்றுவிடும் என்று நம்பிக்கை அளித்தார்கள். நன்றாக யோசித்தார்கள் பனூ குரைளா. இறுதியில் அம்மி நகர்ந்தது.
உடன்படிக்கையைக் கிழித்துக் காற்றில் பறக்கவிட்டு, "நீங்கள் முன்னேறி வாருங்கள், இங்குப் பின்புறத்திலிருந்து நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்து விட்டார்கள்.
அது ஒரு பேரிடி! பாக்கு வெட்டியில் சிக்கிய பாக்கு என்றால் இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு புரியும் எனத் தெரியவில்லை, ஆனால் "சான்ட்விச்" தெரியும். அந்த நிலையாகிப் போனது முஸ்லிம்களின் நிலை.
கூட்டணிப் படையினர் மதீனாவை அடைந்து "ஆ"வென்று வாய் பிளந்து கிடந்த அகழ்நிலத்தைப் பார்த்து "ஹா" வென்று வாய் பிளந்தார்கள். அந்தத் தந்திரம் புதுசு. அதற்குமுன் அவர்கள் அறியாதது அது. பாலம் கட்டியோ, தாவியோ கடக்க முடியாது. அகழிக்கு அந்தப்புறம் முஸ்லிம் படை. சுதாரித்துக் கொண்டு, "பரவாயில்லை, காத்திருப்போம்" என்று அகழிக்கு இந்தப்புறம் தங்கிவிட்டார்கள். முற்றுகை தொடங்கப் பட்டது. வெளியிலிருந்து எந்த உணவோ, பண்டமோ, உதவியோ மதீனாவிற்குள் செல்லமுடியாமல் பாதையடைத்து விட்டார்கள்.
இந்தக் கடுமையான சூழலில்தான் "முனாஃபிக்குகள்" எனும் நயவஞ்சகர்கள் சுயநிறம் காண்பிக்க ஆரம்பித்தார்கள். இஸ்லாம், அல்லாஹ், நபி என்றெல்லாம் அவர்கள் போருக்கு வரவில்லை. வேறு வழியில்லை; வந்திருந்தார்கள். இப்பொழுது சூழ்நிலை முஸ்லிம்களுக்குத் தோல்வி உறுதி என்று அறுதியிட்டு சொல்கிறது. என்ன செய்வது?
அகழி வெட்டும்போது முஹம்மது நபி (ஸல்) சில எதிர்கால நிகழ்வுகள் பற்றிச் சொல்லியிருந்தார்கள் - சீஸர், குஸ்ரோவின் (ரோம மற்றும் பாரசீக சாம்ராஜ்ஜிய) செல்வமெல்லாம் முஸ்லிம்களின் வசமாகும் என்பது சாராம்சம். அது ஞாபகம் வந்து முனாஃபிக்குகளுக்கு, அடக்க மாட்டாத சிரிப்பு எழ,
"சீஸர் மற்றும் குஸ்ரோவின் செல்வமெல்லாம் நமக்கு கிடைக்கும் என்று முஹம்மத் சொல்கிறார். ஆனால் இங்கு பார் நம் நிலைமையை. ஒருவராவது நிம்மதியாய் வெளியே சென்று மல-ஜலம் கழித்து விட்டு, பத்திரமாய் திரும்ப முடியாத கேவல நிலை."
மனுஷனோட வயிற்று உபாதையையே சரிசெய்து கொள்ள முடியவில்லை, இதில் செல்வமாம், கிரீடமாம்! இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று கிளம்பி விட்டார்கள்.
"என் பெண்டாட்டி தனியா இருக்கா, புள்ளைக் குட்டிகளெல்லாம் தனியாகக் கிடக்கின்றனர். வீட்டில் ஆண்துணை இல்லை. பின்னாலிருந்து பனூ குரைளாவினர் புகுந்து விடுவார்கள் போலிருக்கிறது. முதலில் போய் வீட்டைப் பார்க்கிறோம்" என்று கொஞ்சம் கொஞ்சமாய், சென்று விட்டார்கள்.
மீதமிருந்தவர்கள் நபியும், உயிர் கொடுக்கும் தோழர்களும் மட்டும். கூடவே அவர்களின் அசைக்கவியலா இறை நம்பிக்கையும். நிலைமை கடுமையடைந்து கொண்டே சென்றது. முஹம்மது நபி (ஸல்) இறைவனிடம் ஆழ்ந்து பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள்.
"யா அல்லாஹ், நீ வாக்குறுதி அளித்தாயே வெற்றி, அதை வழங்கும்படி மன்றாடிக் கேட்கிறேன். யா அல்லாஹ், நீ வாக்குறுதி அளித்தாயே வெற்றி, அதை வழங்கும்படி மன்றாடிக் கேட்கிறேன்"
முஸ்லிம்களுக்குப் பேரிடி இறங்கியது என்று பார்த்தோமல்லவா? இப்பொழுது புயல் உருவானது. ஒன்றல்ல, இரண்டு. சற்று வித்தியாசமாய் திசை மாறி அடித்த புயல்கள் அவை.
அதில் முதலாவது நுஐம் மனதைத் தாக்கியது. கூட்டணிப்படை வீரர்களுடன் வெட்ட வெளியில் படுத்திருந்தவர் அன்றிரவு தூங்க இயலாமல் புரண்டு கொண்டிருந்தார். மல்லாந்து படுத்து நட்சத்திரங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு மனதிற்குள் குழப்பங்கள். "அட நுஐம்! நீ நஜ்து நாட்டினன். கண்காணாத தூரத்தில் இருக்கிறது உனது ஊர். அங்கிருந்து எதற்கு மெனக்கெட்டு இந்த முஹம்மதையும் அவருடன் இருப்பவர்களையும் ஒழித்துக் கட்டக் கிளம்பி வந்திருக்கிறாய்? ஏதோ பெரிய சாதனை படைக்கவா? அல்லது உனது வீட்டிற்கோ, குலத்திற்கோ குந்தகம் செய்ததற்குப் பழி வாங்கவா? காரணம் என்று உருப்படியாக ஒன்றுமில்லை. ஏதோ சும்மா பொழுது போகாமல் சண்டை போட வந்திருக்கிறாய். உனக்கென்று ஒரு புத்தி இருக்கிறது. அது நல்ல புத்தி. மற்றவர்களும் உன்னைப் புத்திசாலி என்றுதான் சொல்கிறார்கள். அப்படிப் புத்திசாலியான நீ, எந்த முகாந்திரமும் இல்லாமல் அவர்களைக் கொல்லவோ, அல்லது நீ கொல்லப்பட்டு இறந்து போகவோ என்ன காரணம் இருக்கிறது? இது கேவலம் நுஐம்!
இந்த முஹம்மது நபி என்ன சொல்கிறார்? தன்னைப் பின்பற்றும் மக்களை 'நீதியுடன் நடந்து கொள்ளுங்கள், நல்லன செய்யுங்கள், உறவினர்களுக்கெல்லாம் உதவுங்கள்' என்கிறார். அவர் பேச்சைக் கேட்டு அவர்களும் அந்த உண்மையின்படி நடந்து கொள்கிறார்கள். அப்படிப்பட்ட இவர்களையெல்லாம் கொல்லவா வாளைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டாய்? அவர்களின் உடல்களில் செருகவா ஈட்டியை ஏந்திக் கொண்டு திரிகிறாய்?"
அவருடைய மனசாட்சி அநியாயத்திற்கு அவரிடம் வாதாடியது. புயல் ஓய்ந்தது. மனதில் தெளிவு பிறந்தது. இருட்டில் நழுவினார் நுஐம் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு.
*****
"நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் அல்லாஹ்வின் தூதரே! ஆனால் என் மக்களுக்கு அது இன்னும் தெரியாது. சொல்லுங்கள், நான் என்ன செய்ய வேண்டும்?"
அவரை உற்று நோக்கிய முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள்: "நீ இப்பொழுது இந்தப் பக்கம் வந்தால் எங்கள் எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கும்; வேண்டாம், உன் மக்களிடத்துத் திரும்பிச் செல். உன் மாற்றமும் நம் உறவும் தெரிய வேண்டாம். நிச்சயமாகப் போர் என்பது ஒரு தந்திரமே"
முஹம்மது நபியின் கடைசி வாக்கியத்தில் நுஐமிற்குப் போதுமான போர் உத்தரவுகள் கிடைத்து விட்டன.
"அப்படியே ஆகட்டும் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் நாடினால் தங்களை எது மகிழ்வூட்டுமோ அதனைக் காணப் பெறுவீர்கள்."
மனம் மாறிய நொடியிலேயே முழு முற்றும் சரணடையும் சுவாதீனம் இருந்தது அவருக்கு. அவருக்கென்று மட்டுமல்ல அனைத்துத் தோழர்களுக்கும். வரலாறு பகரும் விசித்திரம் அது. ரலியல்லாஹு அன்ஹும்.
"நான் ஒற்றை ஆள் என்ன செய்ய முடியும்?" என்ற பச்சாதாபமெல்லாம் அவர்களுக்கு இல்லை. மாறாக அவர்கள் தனிப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு படையளவு வலுவுடன் திகழ்ந்தார்கள். இஸ்லாத்தை வாழ்ந்தார்கள், சாதித்துக் காட்டினார்கள். பின்னர் வல்லரசுகளெல்லாம் சிற்றெறும்பாகிய கதையை நமக்கு வரலாறு வாய் பிளந்து விவரிக்க விட்டுச் சென்றார்கள்.
தன் கூடாரம் திரும்பிய நுஐம் உடனே கத்தியை ஓர் ஓரமாக வைத்துவிட்டு, புத்தியைத் தீட்டினார். நேரத்தை வீணாக்கவில்லை. உல்லாசத்திற்கு ஊற்றிக் கொடுத்துக் கூட்டாளியாகிப் போயிருந்த பனூ குரைளாவினரிடம் உடனே சென்றார்.
"இதோ பாருங்கள். எனக்கு உங்கள்மேல் தனிப்பட்ட முறையிலுள்ள அன்பை அறிவீர்கள்தானே?" என்றார்.
"நிச்சயமாக"
"அதனால் உண்மையான ஒரு விஷயம் சொல்கிறேன்"
"என்ன விஷயம் சொல்லு"
"இந்தக் குரைஷிகளுக்கும் கத்தஃபான்களுக்கும் இந்தப் போரில் அவர்களின் சுயநலம்தான் உள்ளது. உங்களின் நலன் அவர்களுக்கு ஒரு முக்கிய விஷயமே இல்லை"
"எப்படி? என்ன சொல்ல வருகிறாய்?"
நிதானமாகத் தெளிவாகச் சொன்னார். "இதோ பாருங்கள். இது உங்கள் ஊர். இங்குதான் உங்கள் சொத்து, பெண்டாட்டி, பிள்ளைக் குட்டிகள் அனைத்தும். ஏதாவது ஒன்று விபரீதமாக முடிந்தால் எல்லாவற்றையும் விட்டு விட்டோ, எடுத்துக் கொண்டோ, இழுத்துக் கொண்டோ வேறு ஊருக்குத் தப்பிச் செல்வது என்பது உங்களால் முடியாத காரியம். ஆனால், அதேநேரத்தில் குரைஷிகளுக்கும் கத்தஃபான்களுக்கும் அவர்கள் நிலம், சொத்து, பெண்டாட்டி, பிள்ளைகள் அனைவரும் பத்திரமாய் அவரவர் ஊர்களில் இருக்கிறார்கள். முட்டிப் பார்க்கலாமே என்று முஹம்மதிடம் போர் புரியக் கிளம்பி வந்து விட்டார்கள். அதோடு நீங்கள் அவருடன் போட்டிருந்த உடன்படிக்கையையும் தூக்கி எறிய வைத்துவிட்டார்கள். நீங்களும் அப்பாவியாய் ஒத்துக் கொண்டீர்கள். போரில் கூட்டணிப் படையினர் வென்று விட்டால் கைப்பற்றுகிற அத்துணைப் பொருட்களையும் அவர்களே எடுத்துக் கொண்டு பங்கு போட்டுக் கொள்வார்கள். உங்களுக்கு ஏதும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் தப்பித் தவறி அவர்கள் தோற்றுவிட்டால், எனக்கென்ன போச்சு என்று ஊரைப் பார்க்க ஓடிவிடுவார்கள். மாட்டப் போவது யார்? நீங்கள்தான். அப்பொழுது முஸ்லிம்களின் அத்துணைக் கோபமும் உங்கள் மேல்தான் இறங்கும். அவர்களை எதிர்க்கும் சக்தியெல்லாம் உங்களுக்கு இல்லை என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்."
சரியான மிரட்டல், தெளிவான வார்த்தைகளில் வந்து விழுந்தது. பதற்றத்தைச் சரியாகவே அவை தோற்றுவித்தன. அவர் சொன்னதன் சாத்தியம் நினைத்துப் பார்க்கவே கதி கலங்கியது பனூ குரைளா கூட்டத்தாருக்கு.
"நீ சரியாகத்தான் சொல்கிறாய். நாங்கள் இப்பொழுது என்ன செய்வது?"
"என்னுடைய ஆலோசனை, நீங்கள் கூட்டணிப் படையினரிடம் முக்கியஸ்தர்கள் சிலரைப் பிணையாளிகளாகப் பெற வேண்டும். அதுவரை அவர்களுடன் நீங்கள் போரில் இணையக் கூடாது. அப்படி அவர்கள் பிணையாளிகளாகச் சிலரைக் கொடுத்தால் நீங்கள் நம்பிச் சண்டையிடலாம். முஹம்மதா நீங்களா என்று ஒரு கை பார்த்து விடலாம். அப்பொழுதுதான் கூட்டணிப் படையினரும் உங்களை நிர்க்கதியாக விட்டு விட்டு ஓடாமல் முழுமூச்சுடன் போரிடுவார்கள்"
"பேஷ் பேஷ். நன்று சொன்னாய் நுஐம்" என்று ஆரவாரித்து மகிழ்ந்தனர் பனூ குரைளாவினர்.
முதல் தந்திரம் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் அடுத்து நேராக அபூஸுஃப்யானையும் மற்றும் சில குரைஷித் தலைவர்களையும் சென்று சந்தித்தார் நுஐம். "குரைஷிகளே! உங்கள் மீது எனது அபிமானமும் முஹம்மத் மீது நான் கொண்டுள்ள வெறுப்பும் நீங்களெல்லாம் நன்கு அறிந்த ஒன்று. நான் சில செய்திகள் கேள்விப்பட்டேன். தங்களுக்கெல்லாம் தெரிவிப்பது எனது கடமை எனத் தோன்றியது. இதனைத் தாங்கள் கவனமாகக் கேட்க வேண்டும். ஆனால் நான் தெரிவித்ததாக யாரிடமும் சொல்லிவிடக் கூடாது."
"என்ன அது? விரைந்து சொல்" என்றனர் குரைஷிகள்.
நுஐம் வலை விரித்தார். "இந்த பனூ குரைளா இருக்கிறார்களே, முஹம்மதிற்கு எதிராகத் தாங்கள் திரும்பி விட்டதை நினைத்துப் பயந்து கவலைப்பட ஆரம்பித்து விட்டார்கள். நீங்கள் ஏதாவது சந்தர்ப்பத்தில் அவர்களைக் கைவிட்டுத் திரும்பி விடுவீர்களோ என்று அச்சப்பட ஆரம்பித்து விட்டார்கள். ஆகையினால் முஹம்மதுக்குத் தூது அனுப்பி விட்டார்கள்.
எப்படியென்றால் 'நாங்கள் செய்ததெல்லாம் மகாத் தப்பு. எங்களை மன்னியுங்கள். மீண்டும் உங்களுடன் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு அமைதியாய் வாழ முடிவெடுத்து விட்டோம். எங்கள் தவறுக்குப் பகரமாய் குரைஷ் மற்றும் கத்தஃபான் முக்கியஸ்தர்கள் பலரைப் பிடித்து உங்களிடம் ஒப்படைத்தால் திருப்தியுறுவீர்களா? பிறகு நாங்களும் உங்களுடன் சேர்ந்து கொண்டு குரைஷ் மற்றும் கத்தஃபான் படைகளை துவம்சம் செய்வோம்' என்று.
எனவே அந்த யூதர்கள் உங்களிடம் ஏதும் பிணையாளிகள் வேண்டும் எனத் தகவல் அனுப்பினால் உங்களில் ஒருவரைக்கூட ஒப்படைத்து விடாதீர்கள். அப்புறம் முக்கியம், இந்தச் செய்தியை நான்தான் உங்களுக்குத் தெரிவித்தேன் என்று சொல்லி விடாதீர்கள்."
"ஆஹா! நீயன்றோ உற்றத் தோழன். உனக்குத் தக்க சன்மானம் கிடைக்கட்டுமாக" என்று புளகாங்கிதமடைந்தார் அபூஸுஃப்யான்.
பிறகு தன் கத்தஃபான் கூட்டத்தாரிடம் சென்ற நுஐம் அதே செய்தியைத் தெரிவித்து, "பனூ குரைளாக்கள் சூழ்ச்சி வலை விரித்துள்ளார்கள், ஜாக்கிரதை" என்று எச்சரித்து வந்து விட்டார். அவர் வேலை முடிந்தது.
கூட்டணிப் படைத் தலைவர்களுக்கு இரத்தம் கொதித்தது. கோபம் தலைக்கேறியது. சோதித்துப் பார்க்கத் தோன்றியது அபூஸுஃப்யானுக்கு.
தன் மகனை பனூ குரைளாவிடம் அனுப்பி வைக்க, "என் தந்தை தங்களுக்கெல்லாம் முகமன் கூறினார். நாம் முஹம்மது மேல் நிகழ்த்தி வரும் முற்றுகை இழுத்துக் கொண்டே செல்கிறது. வீரர்கள் சலிப்பும் சோர்வும் கொண்டுள்ளார்கள். சண்டையை ஆரம்பித்து அந்த முஹம்மதை ஒழிக்க முடிவெடுத்து விட்டோம். என் தந்தை நாளைக்குத் தொடங்கவுள்ள யுத்தத்தில் தங்களையும் சேர்ந்து கொள்ளச் சொன்னார்."
அது என்னவோ மறுநாள் சனிக்கிழமை என்பது அபூஸுஃப்யானுக்கு மறந்து தொலைத்து விட்டது. சனிக்கிழமை யூதர்களுக்கு முழு ஓய்வு நாள். ஒன்றும் அசையாது.
"நாளை சனிக்கிழமை. அன்று நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. அது ஒருபுறமிருக்க நீங்கள் உங்கள் முக்கியஸ்தர்கள் எழுபது பேரை எங்களிடம் பிணையாளிகளாக ஒப்படைக்க வேண்டும். சண்டை துவங்கி மூர்க்கமடையும்போது நீங்களெல்லலாம் உங்கள் ஊரைப் பார்க்க ஓடி, நாங்கள் தனியாய் முஹம்மதிடம் மாட்டினால் அதோ கதிதான். எனவே எங்களுக்கு உங்கள் பிணயாளிகள் வேண்டும். அப்பொழுதுதான் சண்டைக்கு வருவோம்." என்றனர் பனூ குரைளாத் தலைவர்கள்.
அபூஸுஃப்யானின் மகன் வேகமாகத் திரும்பி வந்து, நடந்த செய்தி கூறினான். கூட்டணித் தலைவர்கள் கோபத்தில் கன்னாபின்னாவென்று கத்த ஆரம்பித்து விட்டர்கள். "குரங்குப் பயல்கள், பன்றி மகன்கள்! இறைவன்மேல் சத்தியமாகச் சொல்கிறேன்! ஓர் ஆட்டைப் பணயமாகக் கேட்டால்கூட அவன்களுக்குக் கொடுக்க முடியாது"
நுஐமின் தந்திரம் முழுக்க முழுக்கப் பலித்தது. கத்தியில்லை, சொட்டு இரத்தமில்லை. கூட்டணிப் படை கலகலத்துப் போனது.
அதைத் தொடர்ந்து இரவில் மற்றொரு புயல் அடித்தது. அது நிஜப் புயல். பேய்க்காற்று அடித்தது. கொடிய, கடுமையான குளிர்க்காற்று, கூட்டணிப் படையினரின் கூடாரத்தையும் அவர்களது பண்ட பாத்திரங்களையும் அடித்துச் சென்று, இரவில் அவர்கள் மூட்டிவைத்திருந்த நெருப்பை அணைத்து, அவர்களின் முகங்களிலும் கண்களிலும் மணல் வாரி இறைத்தது. அதற்குமேல் தாக்குப் பிடிக்க இயலாமல் இரவோடு இரவாக அனைவரும் அனைத்தையும் காலி செய்து கொண்டு ஓடிவிட்டார்கள். எழுதியதை ரப்பர் கொண்டு அழித்ததுபோல் காலி. அது ஓர் அற்புதம்! இறைவன் நிகழ்த்திக் காட்டிய அற்புதம்!!
முஸ்லிம்கள் ஆனந்தத்தில் திக்கு முக்காடிப் போனார்கள். நம்பவியலாத வெற்றி அது. மிகப் பெரும் கொண்டாட்டத் தருணம் அது.
ஆனால் நன்றி மிதக்க, அடக்கம் தவழ உரக்க உச்சரித்தனர் -
லா இலாஹா இல்லல்லாஹு வஹ்தஹ்!
ஸதக்க வஅதஹ்!
வ நஸர அப்தஹ்!
வ அஅஸ்ஸ ஜுன்தஹ்!
வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்!
வணங்குதற்கு உரிய தனித்தவன் ஒருவனே, அல்லாஹ் ஒருவனே!
வாக்கை நிறைவேற்றியவன்!
வளமான உதவியைத் தன் அடியார்க்கு வழங்கியவன்!
தன்னுடைய படையைக் கண்ணியப் படுத்தியவன்!
தனித்தவன்; கூட்டணிக் கூட்டத்தினரை வேரறுத்தவன்!
நுஐம் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு) ஒற்றையாளாக மாபெரும் பங்கு வகித்துப் புரிந்த அந்தச் சாதனை, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெரிதும் கவர்ந்து, அதன்பின் பல விஷயங்களில் முக்கியப் பங்கு வகிக்க அவர் நியமிக்கப் பெற்றார்.
அகழி யுத்ததம் நடைபெற்று மூன்று வருடங்களுக்குப் பின் மக்கா முஸ்லிம்கள் வசமானபோது முஸ்லிம்களின் வெற்றி அணிவகுப்பு மக்காவிற்குள் நுழைந்தது. அபூஸுஃப்யான் பார்த்துக் கொண்டிருந்தார். இஸ்லாத்திற்கும் நபிகளாருக்கும் எதிராகப் பல போர்கள் புரிந்து, கெட்ட எதிரியாகத் திகழ்ந்த அதே அபூஸுஃப்யான், இறுதியில் இஸ்லாத்தை ஏற்றது அவரது வாழ்வின் உச்சகட்ட திருப்புமுனை.
மக்காவிற்குள் அணிவகுப்பு நடத்திக் கொண்டிருந்த ஒரு பிரிவில் கத்தஃபான் கொடியை ஒருவர் ஏந்திச் செல்வதைக் கண்டு, "யார் அது?" என்று அபூஸுஃப்யான் விசாரிக்க, "அவர்தான் நுஐம் பின் மஸ்ஊத்" என்று பதில் வந்தது.
"ஹா....! அன்று அகழி யுத்தத்தில் நமக்கு எதிராகப் பயங்கர செயல் புரிந்த நுஐம், அன்று முஹம்மதின் கொடிய எதிரி. இன்று அதே நுஐம் முஸ்லிம்களின் கொடியை ஏந்திக் கொண்டு முஹம்மதின் படையுடன், அவரது தலைமையில் மக்காவிற்கே படையெடுத்து வந்திருக்கிறாரா?"
உதடுகளால் மட்டும் இஸ்லாத்தை உச்சரிக்காத தோழர்கள் அவர்கள்.
ரலியல்லாஹு அன்ஹு!

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.
No comments:
Post a Comment