Facebook Twitter RSS

Saturday, November 17, 2012

Widgets

துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை இழிவுப்படுத்தும் காட்சிகள்: நீக்குவதற்கு இயக்குநர் ஒப்புதல்!


Thuppaki-team-with-muslims-
சென்னை:நடிகர் விஜய் நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பாக அண்மையில் தீபாவளி தினத்தில் ‘துப்பாக்கி’ என்ற திரைப்படம் தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் திரையிடப்பட்டது. இப்படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் அவதூறான கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன.

இதனைத்தொடர்ந்து தமிழக முஸ்லிம்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடு முற்றுகையிடப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை சென்னையில் இப்பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ, த.மு.மு.க உள்ளிட்ட 24 முஸ்லிம் அமைப்புகள் சார்பாக 10 பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகளை நீக்க வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து சர்ச்சைக்குரிய அக்காட்சிகளை உடனடியாக நீக்கப் போவதாக படக்குழுவினர் அறிவித்தனர்.
இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு எதிராக காட்சிகள் அமைப்பது எங்கள் நோக்கமல்ல. படத்தில் வரும் காட்சிகள் முஸ்லிம்களை புண்படுத்தியிருப்பின் அதற்காக மன்னிப்பு கோருவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் இனி வெளிவரும் படம் ஒன்றில் விஜய், முஸ்லிம்களின் தோழனாக நடிப்பார் என்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
அண்மைக்காலமாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் திரைப்படங்கள், தமிழ் உள்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெளியாகி வருகிறது. இதுக்குறித்து முஸ்லிம்கள் மெளனமாக இருப்பது திரைப்பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக மாறியது. இந்நிலையில் துப்பாக்கி பட விவகாரத்தில் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து போராடியது பாராட்டத்தக்கது.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets