Facebook Twitter RSS

Friday, November 09, 2012

Widgets

பாங்கிற்கு பதிலளிப்பதால் கிடைக்கும் இம்மை, மறுமைப் பலன்கள்

இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் 'அருள்மழை' உங்கள் மீது பொழிய அவசியம்'இக்கட்டுரையை' படியுங்கள், பின்பற்றுங்கள். மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்வதன் மூலம் அதிகமான நன்மைகளைப் பெற விரையுங்கள்.
அல்லாஹ்வைத் தொழுவதினால் இம்மை, மறுமை இருவாழ்விலும் குவியும் ஏராளமான நன்மைளை கணக்கிட்டால் நம்மால் பட்டியலிட முடியாத அளவுக்கு அவைகள் நீண்டு கொண்டே செல்லும்.
இன்று நம்மில் பலர் தொழுகை விஷயத்தில் அலட்சியப்போக்கை கையாளுவதற்கு எது காரணமென்றுத் தெரியவில்லை?
ஒன்று அதனுடைய நன்மைகளைத் தெரியாமல் இருக்க வேண்டும், அல்லது தெரிந்துகொண்டு அதில் நம்பிக்கை இழந்து இருக்கவேண்டும். இல்லை என்றால் பட்டியலிட முடியாத அளவுக்கு நன்மைகளை குவிக்கக்கூடிய தொழுகை விஷயத்தில் அலட்சியமாக இருக்க முடியாது.

தொழுகையாளிகளாகிய நாம் தொழுகைக்கான அழைப்பைக் கேட்கும்பொழுது அதற்காக பதில் கூறுகிறோம். அதற்கு நன்மை எழுதப்படுகிறது. அத்துடன் அது நின்றுவிடாமல்இன்னும் தொடருகிறது.
இதைக் குறைத்து மதிப்பிட முடியுமா? அல்லது இதற்கு ஒரு அளவுகோலை ஏற்படுத்திக் கொண்டு இந்தளவுக்கு நன்மை தான் இது என்று வறையருத்துக் கூறமுடியுமா? அல்லாஹ்வின் அருள்மழை நம்மீது பொழிகிறதென்றால் அதற்கு அளவே கிடையாது. எல்லையைத் தாண்டிய நன்மை அல்லவா இது.
பாங்கிற்கு பதில் கூறிவிட்டு ஸலவாத் ஓதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அல்லாஹ்வின் அருள் நம்மீது இடைவிடாமல் இறங்கும் பொழுது அச்சமற்ற வாழ்வும், மன அமைதியும் கிடைக்கும் இது உலக நன்மை. இது உலகில் வாழும்பொழுது ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவைப்படும் நன்மைகள்.
அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வசீஸாவுக்காக அவர்களின் வேண்டுகோளை ஏற்று யார் உலகில் பாங்கின் அழைப்பொலிக்குப் பிறகு தொடர்ந்து பிரார்த்தித்து வந்தாரோ அவருக்காக எந்தப் பரிந்துறையும் பயன் தரமுடியாத இறுதித் தீர்ப்புநாளில் அல்லாஹ்விடம் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பரிந்துறை செய்வதாக வாக்களித்துள்ளார்கள்.
மேற்காணும் நன்மையின் பொக்கிஷங்களை மொத்தமாக அடைந்து கொள்வதற்கு தொழுகையாளிகளால் மட்டுமே முடியும். காரணம் தொழுகையாளிகளைத் தவிற தொழாதவருக்கு பாங்கொலியே கடுமையானதாக இருக்கும் பாங்கு சொல்லும் வரை பள்ளிவாசலுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருப்பவர் பாங்கொலியைக் கேட்டதும் தொழுகை முடியும் வரை பிற தொழுகையாளிகளின் கண்களில் படாதவாறு ஒளிவதற்கு இடத்தைத் தேடி ஓடிவிடுவார்.
''அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதனில் வஸீல(த்)த வல்ஃபழீல(த்)த வத் தரஜதர் ரஃபீ அ(த்)த வப் அதஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹு வர்ஜுக்னா ஷஃபா அ(த்)தஹு யவ்மல் கியாமதி இன்னக லாதுஹ்(kh)லிஃபுல் மீ ஆத். (பொருள்: 'முழுமையான இந்த அழைப்புக்குரிய இறைவனே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஸீலா எனும் பதவியையும், சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!') என்று யார் பாங்கோசை கேட்கும் போது கூறுவாரோ அவருக்கு மறுமையில் நாளில் என்னுடைய பரிந்துரை அவசியம் கிடைக்கும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹுநூல்: புகாரீ 614)

தொழுகையினுடைய அமல் என்பது பாங்கு ஒலிக்கத் தொடங்கியது முதல் தொடங்கி விடுகிறது.
பாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் பலன்கள்.
பாங்கிற்கு பதில்கூறி முடித்தப்பின் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் ஓதுகிறோம். அவ்வாறு ஓதப்படும்பொழுது ஒருமுறை ஓதினால் ஓதுபவர் மீது அல்லாஹ் பத்துமுறை அருள் புரிகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கின்றார்கள். ஒருமுறை ஓதுவதற்காக அல்லாஹ்வின் அருள்மழை பத்து அமுறை நம்மீது பொழிகிறதென்றால் அது சாதாரண விஷயமா?
சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். நாளை என்ன நடக்குமோ? அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ? என்ற பீதியிலும், அச்சத்திலும் இன்று உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம்கள் உறைந்துப் போய் இருப்பதற்கு காரணம் அல்லாஹ்வின் அருளை அடைந்து கொள்ளும் இலகுவான வழிகளை அடைத்துக் கொண்டது ஒரு காரணமாகும்.
மறுமை நன்மை:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் ஓதி முடிந்ததும் அவர்களுக்காக சுவனத்தில் சங்கை மிகுந்த வசீலா எனும் உயர் பதவிக்காக பிரார்த்தனை செய்கிறோம், கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகில் வாழும்பொழுது அவர்களுக்காக என்று நம்மிடத்தில் எதையும் கேட்டதில்லை மாறாக நம்முடைய நேர்வழிக்காக அவர்களின் வசதியான வாழ்க்கையைத் துறந்து ஏழ்மையை தேர்வுசெய்து கொண்டார்கள். அப்படிப்பட்ட அருமை நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகில் வாழ்ந்து கொண்டிருந்தபொழுது நம்மிடம் இந்த ஒன்றை மட்டுமேக் கேட்டார்கள். அதுவும் உலக வாழ்விற்காக அல்ல, மறுமையின் நிம்மதியான வாழ்வுக்காக பிரார்த்திக்கக் கூறினார்கள்.
அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக மறுமையில் வசீலா எனும் உயர் பதவிக்காக நாம் பிரார்த்திப்பதன் மூலமாக மறுமையில் நமக்கு மிகப்பெரியப் பரிசுக் காத்திருக்கிறது அந்தப் பரிசு மறுமையை உறுதியாக நம்பக் கூடியவர்களுக்கு மிகப்பெரியப் பாக்கியமிக்கதாக இருக்கும்.
இது எத்தனை நன்மைகள் என்று வரையறுத்துக் கூறமுடியாத எல்லையற்ற நன்மையாகும் காரணம் தகிக்கும் வெயிலில் ஒவ்வொருவரும் தன் வியர்வையிலேயே தான் மூழ்கிக் கொண்டிருக்கும் பொழுது வாய்கள் மூடப்பட்டு கால்களும், கைகளும் தனக்கெதிராக சாட்சியமாகிக் கொண்டிருக்கும் கடுமையான நேரத்தில் உதவிக்கான எந்த வழியுமில்லாத அந்த நேரத்தில் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்காக வல்ல இறைவனிடம் பரிந்துறை செய்வார்கள் என்றால் இது வiரையறுத்துக் கூறக்கூடிய நன்மையில் உள்ளதா?இல்லவே இல்லை, இது கணக்கிட முடியாத பொக்கிஷக் குவியல்களாகும்
''நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் பாங்கு கூறுபவர் கூறுவதைப் போலவே கூறுங்கள்.
பிறகு என் மீது ஸலவாத் கூறுங்கள்.
என் மீது எவர் ஒரு முறை ஸலவாத் கூறுகிறாரோ அவர் மீது இறைவன் பத்து முறை அருள் புரிகிறான்.
சொர்க்கத்தில் வஸீலா எனும் ஓர் உயர்ந்த பதவி உள்ளது. அந்தப் பதவியை இறைவன் தன் அடியார்களில் ஒருவருக்குத் தான் வழங்க இருக்கிறான். அந்த ஒருவனாக நான் இருக்க விரும்புகிறேன்.
வஸீலா எனும் அந்தப் பதவி எனக்குக் கிடைக்க எவர் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்''
என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹுநூல்: முஸ்லிம் 628)
பாங்கொலிக்கு பதில் கொடுப்பதில் மட்டும் இத்தனை நன்மைகள் குவிந்து கிடக்கிறதென்றால் அண்ணல் அவர்கள் நமக்கு காட்டித்தந்த வழியில் தொழுது முடித்து பள்ளியை விட்டு வெளியேறும் போது நம்முடைய நன்மையின் எடை என்னவாக இருக்கும்? என்பதை சிந்தித்தால் எந்த ஒரு பாங்கிற்கும் பதிலளித்து, ஸலவாத் ஓதி, வசீலாவுக்காகப் பிரார்த்திப்பதை தவற விட மாட்டோம்.
வஸீலாவுக்கு பிரார்த்தித்தவர் கண்டிப்பாக தொழுகைக்கு வந்து விடுவார், வசீலாவுக்குப் பிரார்த்தித்து விட்டு தொழாமல் ஒளிய மாட்டார். இன்று தொழுகையாளிகளிலும் கூட சிலர் பாங்கு சொல்வதை ஒருப்பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை பாங்கு சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது பேச்சை நிருத்தாமல் தொடர்ந்து பேசிக் கோண்டே இருப்பதும், கடைகளில் நின்று பொருள்களை வாங்கிக் கொண்டிருப்பதுமாக இருக்கின்றனர். இது மறுமையில் அடையவிருக்கும் நன்மையை நாமேத் தடுத்துக் கொள்ளக்கூடாது. பாங்கிற்கு பதில் சொல்லிவிட்டு, அதன் பிறகு ஸலவாத் ஓதிவிட்டு, அதன்பிறகு கீழ்காணுமாறு வசீலாவுக்காகப் பிரார்த்திக்க வேண்டும்.
பாங்கிலிருந்து தொடங்கி தொழுவது முதல் தஸ்பீஹ், துஆ, சுன்னத் தொழுகை என்றுப் பள்ளியை விட்டு வெளியில் வரும்வரை தொழுகைக்கான அமல்கள் நீடிக்கின்றன. அவற்றை முழுமையாக நிறைவு செயது அதற்கான நற்கூலிகளை குறைவின்றி அறுவடை செய்துகொள்ளும் பாக்கியமிக்கவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக!
جَزَاكَ اللَّهُ خَيْرًا   அதிரை ஃபாரூக். source nidur.info

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets