குவஹாத்தி:கலவரத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மாநிலம் கொக்ராஜர் மாவட்டத்தில் ராணுவம் கொடி அணிவகுப்பை நடத்தியது. ஐந்து கம்பெனி ராணுவப்படையினர் எந்த விதமான சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொக்ராஜரில் வியாழக்கிழமை காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இரண்டு கம்பெனி ராணுவத்தினர், கொக்ராஜரிலும், மூன்று கம்பெனி ராணுவத்தினர் கோசைகானிலும் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு உத்தரவை மீறிய போடோலாண்ட் மக்கள் முன்னணி (பி.பி.எஃப்) தலைவர் ஹேமனேந்திரநாத் பிரம்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநில டி.ஜி.பி ஜயந்த நாராயணன் சவுத்ரி கொக்ராஜருக்கு வருகை தந்துள்ளார். பி.எஸ்.எஃப், ராணுவம், சி.ஆர்.பி.எஃப் அதிகரிகளுடன் சவுத்ரி போடோ மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குறித்து ஆராய்ந்தார்.
இம்மாதம் 10-ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் அஸ்ஸாமில் துவங்கிய வன்முறைகளைத் தொடர்ந்து 33 பேரை போலீசார் கைதுச் செய்துள்ளனர். தற்போதைய கலவரத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள பகுதிகளில் தங்களின் நடமாடும் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தியுள்ளதாக ஊடக செய்தியாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
பிரதமர் மன்மோகன் சிங் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோயுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அஸ்ஸாம் நிலைமைகளைக் குறித்து விவாதித்தார். போட்டோக்கள், முஸ்லிம்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்த ராணுவத்தை அனுப்பி சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்களை பறிமுதல் செய்ய மத்திய அரசு, மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அஸ்ஸாமிற்கு தேவையான ராணுவத்தினரை அனுப்ப, மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய-மாநில உளவுத்துறை ஏஜன்சிகளிடம் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் அஸ்ஸாமில் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களுக்கு எதிராக போடோ தீவிரவாதிகள் கட்டவிழ்த்துவிட்ட கலவரத்தில் 90 பேர் கொல்லப்பட்டனர். 4.80 லட்சம்பேர் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். 3 மாத இடைவேளைக்குப்பிறகு அஸ்ஸாமில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.
No comments:
Post a Comment