Facebook Twitter RSS

Friday, November 16, 2012

Widgets

போதையில் மிதந்த தமிழகம்! – 2 நாளில் ரூ.270 கோடி விற்பனையாம்!


போதையில் மிதந்த தமிழகம்!
சென்னை:தனிமனித வாழ்க்கையையும், குடும்பத்தையும், சமூகத்தையும் சீரழிக்கும் மதுவை மக்கள் நலன் கருதாமல் வருமானத்தை குறிவைத்து அரசே கடைகளை நடத்தி வரும் அலங்கோலம் தமிழகத்தில் புதிய சாதனையை படைத்து வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது. தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளில் மட்டும் ரூ.270 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த தீபாவளியன்று ரூ.20 கோடி அதிகமாக விற்பனையாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 6,823 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக ரூ.80 கோடி முதல் ரூ.100 கோடி வரை மதுபான விற்பனை நடந்துள்ளது. பண்டிகை நாட்களில் வழக்கமாக விற்பனை சூடு பிடிக்கும். தீபாவளி என்றால் உச்சத்தை தொடும்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு குடிமகன்களுக்கு தட்டுப்பாடின்றி சரக்குகள் கிடைக்க டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. ஒவ்வொரு கடைக்கும் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை சரக்குகள் கூடுதலாக அனுப்பப்பட்டன.
தீபாவளியை ஒட்டி தொடர் விடுமுறை வந்ததால் மதுபான விற்பனை சூடு பிடித்தது. கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. குடிமகன்கள் தங்களுக்கு விருப்பமான சரக்குகளை கேட்டு வாங்கினர். இதன்  காரணமாக தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பே விற்பனை ரூ.100 கோடியை தாண்டியது. நவம்பர் 10ம் தேதி ரூ.110 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. நவம்பர் 11ம் தேதி ரூ.100 கோடிக்கு விற்பனையானது.
உச்சகட்டமாக தீபாவளிக்கு முதல் நாளான 12ம் தேதி ரூ.150 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. தீபாவளியன்று ரூ.120 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தீபாவளி முதல் நாள் மற்றும் தீபாவளியன்று என 2 நாளில் மட்டும் ரூ.270 கோடி வசூலானது. கடந்த தீபாவளியன்று ரூ.100 கோடிதான் வசூலானது.
தீபாவளியையொட்டி ரூ.480 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன. இலக்கை அடைந்ததற்கு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதும் ஒரு காரணம். இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி கூறும்போது, ”கடந்த தீபாவளிக்கு ரூ.100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டது இந்த ஆண்டு டாஸ்மாக்கில் ரூ.125 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை விட கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது” என்று கூறுகிறார்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets