கெய்ரோ:கூடுதல் அதிகாரங்களை தம் வசப்படுத்தி அதிபர் முஹம்மது முர்ஸி வெளியிட்ட உத்தரவுக்கு எதிராக தேசிய அளவில் போராட்டம் நடத்த எகிப்தின் நீதிபதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். உயர்மட்ட நீதிபதிகளின் குழு அவசர கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உத்தரவை வாபஸ் பெறும் வரை எவ்வித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர். அதிபருக்கும், நீதிபதிகளுக்கும் இடையே மத்தியஸ்தம் வகிக்க தயார் என்று சட்ட அமைச்சர் அறிவித்துள்ளார்.
கடுமையான விமர்சனங்களை சந்தித்த தலைமை அரசு தரப்பு வழக்குரைஞர் முகைப் மஹ்மூதை முர்ஸி பதவியை விட்டு நீக்கியது நீதிபதிகளை கோபம் அடையச் செய்துள்ளது. இவரை வெளியேற்றியது முபாரக் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரணைச் செய்வதற்கு வழி வகுக்கும் என்று நீதிபதிகள் சந்தேகிக்கின்றனர். முர்ஸியின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகப் போவதாக அப்துல் முகைப் மஹ்மூத் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அனைத்து வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் பணியை நிறுத்தி விட்டு முர்ஸியின் உத்தரவிற்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று நீதிபதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனிடையே முர்ஸியின் மூன்றாவது ஆலோசகர் ஃபாரூக் ஜெவீதா ராஜினாமா செய்துள்ளார். நேற்று முன் தினம் ஸாகினா ஃபுவாத், ஸமீர் மார்கோஸ் ஆகிய ஆலோசகர்கள் ராஜினாமா செய்திருந்தனர்.
அதேவேளையில் புதிய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வரும் வரை மட்டுமே கூடுதல் அதிகாரங்களை உபயோகிப்பேன் என்று முர்ஸி விளக்கம் அளித்துள்ளார். அரசியல் சாசனத்தை தயாரிக்கும் கான்ஸ்டியூவன் அஸெம்ப்ளியை நீதிமன்றம் கலைத்திருந்தது. இதனால் அரசியல் சாசனத்தை தயாரிப்பதும், பாராளுமன்ற தேர்தலும் தாமதமாகிறது. இச்சூழலை தவிர்க்கவே கான்ஸ்டியூவன் அஸெம்ப்ளி கலைப்பது உள்பட விவகாரங்களில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் அதிபருக்கு மட்டுமே இருப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முர்ஸி கூறுகிறார். முர்ஸிக்கு ஆதரவாக நாளை நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த இஃவானுல் முஸ்லிமீன் தீர்மானித்துள்ளது. பல இடங்களிலும் முர்ஸிக்கு எதிரான போராட்டங்களில் வன்முறைகள் நிகழ்ந்தன. அலெக்ஸாண்டிரியாவில் 100க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
அதேவேளையில் காஸ்ஸா எல்லையையொட்டிய எகிப்தின் ரஃபா நகரத்தில் நிகழ்ந்த இரட்டைக் குண்டுவெடிப்புகளில் உளவுத்துறை அலுவலகம் சேதமடைந்தது. யார் இந்த நாசவேலையின் பின்னணியில் செயல்பட்டுள்ளார்கள் என்பது தெரியவில்லை. அப்பகுதி போலீஸின் கட்டுப்பாட்டில் உள்ளது. விசாரணை துவங்கியுள்ளது. source thoothuonline
No comments:
Post a Comment