Friday, December 30, 2011
"தானே' புயல் தமிழகத்தை நெருங்குகிறது : இன்றும், நாளையும் பலத்த மழை எச்சரிக்கை
"தானே' புயல் தமிழகத்தை நெருங்குகிறது : இன்றும், நாளையும் பலத்த மழை எச்சரிக்கை
சென்னை: வங்கக் கடலில், கிழக்கு மற்றும் தென்கிழக்கே, 268.817 கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டிருக்கும், "தானே' புயல், நாளை (30ம் தேதி), நெல்லூருக்கும், கடலூருக்கும் இடையே கரையைக் கடக்கிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக் கூடும் என்றும், 24 மணி நேரத்தில், அது கரையை நெருங்கும் போது, வலுவிழக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 20ம் தேதி துவங்கியது. வங்கக் கடலில்பல முறை உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக, சீசனில் கிடைக்க வேண்டிய மழையை விட, தமிழகத்தில் கூடுதலாக மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும், இயல்பை விட அதிக மழை கிடைத்தது.
வழக்கமாக, மார்கழி மாதத்தில் தான் பனிப்பொழிவு துவங்கும். ஆனால், இந்த ஆண்டு தட்பவெப்பநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால், முன்னதாகவே பனி பொழியத்துவங்கியது. இதன் காரணமாக, தமிழகத்தில் இரவு நேரத்தில், 19 டிகிரி செல்சியசை ஒட்டியே, வெப்பளவு இருந்தது. இதனால், அதிகமான பனிப்பொழிவு உணரப்பட்டது.
சில வாரங்கள் ஓய்வுக்குப் பின், தென்கிழக்கு வங்கக் கடலில், கடந்த 24ம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது மேலும் வலுப் பெற்று, கடந்த 26ம் தேதி, தென்கிழக்கு வங்கக் கடலில், சென்னையிலிருந்து தென்கிழக்கே, 456.989 கடல் மைல் தூரத்தில், புயலாக உருவெடுத்தது. இதற்கு, "தானே' என, பெயர் சூட்டப்பட்டது. இதன் காரணமாக, கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது. கடல் சீற்றத்தால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் கிராமங்களில், தண்ணீர் புகுந்துள்ளது. கரையோரம் நிறுத்திய படகுகள், கடலில் அடித்துச் செல்லப்பட்டன; பல படகுகள் சேதமடைந்தன.
நேற்று காலை 5:30 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து தென்கிழக்கே, 322.580
கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டுடிருந்த "தானே' புயல், வடக்கு மற்றும்
வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. நேற்று பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து தென்கிழக்கே,
268.817 கடல் மைல் தூரத்தில், மையம் கொண்டுள்ளது. நாளை (30ம் தேதி) காலை
நெல்லூருக்கும், கடலூருக்கும் இடையே தானே புயல் கரையைக் கடக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் எச்சரிக்கை கூண்டு
புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு, 90 முதல் 140 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். இதனால், கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படும். இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். சூறைக்காற்றில், மரங்கள் வேரோடு சாயலாம்.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், எண்ணூர், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில், புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது; பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கடல் சீற்றம் காரணமாக, அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்புகின்றன. நேற்று மாலை முதல், பலத்த சூறைக்காற்றும் வீசத் துவங்கியது.
தமிழகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பள்ளிக் கல்வி நிர்வாகத்திற்கும், புயல் எச்சரிக்கை குறித்து, அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் வசிக்கும் பகுதியில் பாதிப்பு அதிகமிருக்கும் இடங்களில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆறுதல் : இவ்வளவு எச்சரிக்கைகளுக்கும் இடையே, புயல் தரையை நெருங்கும் போது,
சற்றே வலுவிழக்கும் வாய்ப்புள்ளது எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது, சற்று ஆறுதலான செய்தி.
கடலூர் துறைமுகத்தில் 8ம் எண் கொடியேற்றம் : வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் கரையை நோக்கி நகர்ந்து வருவதால், கடலூர் துறைமுகத்தில் 8ம் எண் எச்சரிக்கைக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நேற்று முன்தினம் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது மேலும், தீவிரமடைந்து புயலாக மாறி கடலூருக்கும், நெல்லூருக்குமிடையே கரையை கடக்கும் என, வானிலை மையம் நேற்று அறிவித்தது. தற்போது அந்த புயலுக்கு, "தானே' என பெயரிடப்பட்டுள்ளது. "தானே' புயல் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால், சென்னைக்கு தென் கிழக்கே 400 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல், கடலூர்-நாகப்பட்டினமிடையே நாளை (30ம் தேதி) கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக,கனமழையுடன் 60 முதல் 65 கி.மீ., வரை பலத்த சூறைக் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக, கடலூர் துறைமுகத்தில் எச்சரிக்கைக் கொடி எண்.8 ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment