Monday, December 19, 2011
பேராசிரியை இல்ஹாம் அல் கர்ளாவி...
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி"
என்று அன்று பாடிவைத்தான், பாரதி.
நவீன உலகில் எத்தனையோ பெண்கள் பாரதிகண்ட புதுமைப் பெண்களாய், பல்துறை நிபுணிகளாய், சாதனையாளர்களாய்த் திகழ்ந்து வருகின்றனர்.
"இஸ்லாமிய மார்க்கம் பெண்களை அடக்கிஒடுக்கி அவர்களின் உரிமைகளைப் பறித்துள்ளது; ஃபர்தாவுக்குள் அவர்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது" என்றெல்லாம் உலகெங்கிலும் பல கூக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. மார்க்கம்என்ற பெயரால் பெண்களுக்கு இறைவன் கொடையாக அளித்துள்ள திறமைகளை வெளிப்படுத்த விடாமல் மூலையில் முடக்கிப் போடும் சுயநலவாதிகளான ஒருசில ஆண்களால் இந்தக் கோஷம் மேலும் மேலும் வலுப்பெற்று வருவதையும் நாம் மறுப்பதற்கில்லை. எனினும், இத்தகைய கோஷங்களைப் பொய்ப்பித்து, தாம் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளையெல்லாம் வெற்றிகொண்டு சாதனைகளை நிலைநாட்டிவரும் முஸ்லிம் பெண்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களுள் ஒருவர் என்ற வகையில், உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் யூசுஃப் அல் கர்ளாவியின் மகள் இல்ஹாம் அல் கர்ளாவியின் சாதனைகளைச் சுருக்கமாக நோக்குவோம்.
பொதுவாக இயற்பியல், அணுசக்தி, வானியல் முதலான துறைகள் பெண்களுக்குப் பொருத்தமானவை அல்ல; அத்துறைகளில் பெண்கள் நின்றுபிடிப்பதோ சாதனை படைப்பதோ சாத்தியம் இல்லை எனும் கருத்தியல்கள் நம் சமூகத்தில் காலங்காலமாய் நிலவி வருவதை நாமறிவோம். அத்தகைய கருத்தியல்களையெல்லாம் கட்டுடைப்புச் செய்தவர் என்ற பெருமையை அரபு முஸ்லிம் பெண்மணியான இல்ஹாம் அல் கர்ளாவி பெற்றுக் கொள்கின்றார்.
1981 ஆம் ஆண்டு கட்டார் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எஸ்ஸி பட்டம் பெற்ற இல்ஹாம், 1984 ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்திலே பட்டப் பின்படிப்பைத் தொடர்ந்து அணுசக்தித் துறையில் எம்.எஸ்ஸி பட்டத்தையும், 1991 ஆம் ஆண்டு மின்னியல் துறையில் முனைவர் (பி.ஹெச்.டி) பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
1981 முதல் 1984 வரை கட்டார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய கல்விப் பணியைத் தொடங்கிய இவர், 1984-1991 காலப் பகுதியில் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். 1991 முதல் இன்று வரை கட்டார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் இணைப் பேராசிரியையாகப் பணிபுரிந்து வருகின்றார். அதுமட்டுமன்றி, 1998-1999 ஆம் ஆண்டுகளில் லண்டன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் துறைகளில் இணை ஆய்வாளராகவும் இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய கல்வியியல் நடவடிக்கைகளுக்குப் புறம்பாகப் பல்வேறு அமைப்புக்களின் நிர்வாகம், திட்டமிடல் முதலானவற்றுக்குப் பங்களிப்புச் செய்யுமுகமாகப் பல்வேறு செயற்குழுக்கள், அமைப்புக்கள் என்பவற்றிலும் இவர் அங்கத்துவம் வகித்துள்ளார். சிலவற்றில் செயற்குழுத் தலைவியாகவும் தன்னுடைய காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார். அந்த வகையில், 2007 முதல் கட்டார் பல்கலைக்கழக ஆய்வுக் கொள்கைகள் தொடர்பான செயற்குழு உறுப்பினராகவும், 2005 முதல் பல்கலைக்கழக ஆய்வுக்குழு உறுப்பினராகவும், 2004 முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆய்வுக் குழுத் தலைவியாகவும் இவர் சேவையாற்றியுள்ளார்.
மேலும், 2006-2007 ஆம் ஆண்டுகளில்கணித மற்றும் இயற்பியல் துறை வரவுசெலவுத் திட்டக்குழுத் தலைவியாகவும், 2005-2006 ஆம் ஆண்டுகளில் அதே துறையின் வெளியுறவுக் குழுத் தலைவியாகவும் இருந்து இவர் தன்னுடைய பொறுப்புக்களை மிகத் திறம்பட நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போதும் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு அமைப்புக்களில்செயற்குழு உறுப்பினராகவும் செயற்திட்ட ஆலோசகராகவும் இவர் பங்களிப்பு வழங்கி வருகின்றார்.
பேராசிரியை இல்ஹாம் அல் கர்ளாவி துடிப்பும் செயற் திறனும் கொண்ட கல்வியியலாளராகவும் ஆய்வாளராகவும் திகழ்ந்தமைக்கு இவர் பெற்றுக் கொண்டுள்ள ஏராளமான பரிசுகளும் விருதுகளும் சான்றாக அமையும். அந்த வகையில், இவர் 2007 ஆம் ஆண்டு உலக அணுசக்திப் பல்கலைக்கழகம், பரிஸில் உள்ள அரபுலக நிறுவனம், கட்டார் பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு சரவதேச அமைப்புக்கள் முதலானவற்றினால் பரிசுகளும் விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய துறை சார்ந்து ஏராளமான ஆய்வு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ள இவர்,அரபு முஸ்லிம் பெண் சாதனையாளர்களுள் தலைசிறந்தவராகப் போற்றப்பட்டு வருகின்றார்.
அண்மையில் ஜப்பானில் இடம்பெற்ற பூமியதிர்ச்சி, சுனாமி மற்றும் அணு ஆலைகள் வெடிப்பு என்பன தொடர்பில் அல் ஜெஸீரா ஆங்கிலத் தொலைக்காட்சி சேவைக்கு இவர் அளித்துள்ள பேட்டி இத்துறையில் அவருக்கிருக்கும் புலமையை உணர்த்தும்.
இவருடைய இணையதளம்:
http://www.ilhamalqaradawi.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment