ஹபீப் பின் ஸைத் பின் ஆஸிம் அல்-அன்ஸாரீ
حَبِيبِ بْنِ زَيْد بْن عَاصِم الأنْصَارِيّ
யத்ரிப்
நகரில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. தந்தை, தாய், இரு மகன்கள் என்ற
அளவான குடும்பம். அந்தக் குடும்பம் ஒரு குழுவுடன் மக்காவிற்கு யாத்திரை
சென்றது. மொத்தம் 73 ஆண்களும், 2 பெண்களும் கொண்ட குழு அது.
மக்காவிற்குச்
சென்று புனித யாத்திரை முடித்த அந்தக் குழுவினர் இரண்டாம்நாள் ஊர் உறங்கிய
நள்ளிரவு நேரத்தில் அகபா பள்ளத்தாக்கில் முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களுடன் ஓர் இரகசிய சந்திப்பு நிகழ்த்தினர். வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு அது. அதன் முடிவில் நபியவர்களுக்கும்
அந்த யத்ரிப் குழுவினருக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. தங்களது
"உயிர், பொருள், செல்வம்" அனைத்திற்கும் மேலாய் நபியை ஏற்றுக்
கொள்வதாகவும், காப்பாற்றுவதாகவும் அவர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம்
செய்து கொடுத்தனர்.
அந்தக்
குழுவில் இடம் பெற்றிருந்த அந்தக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும்
அந்த சத்தியப் பிரமாணத்தில் கலந்து கொண்டனர். ஸைத் இப்னு ஆஸிம், அவரின்
மனைவி உம்மு உமாரா (أُمّ عُمَارَةَ)எனும்
நுஸைபா பின்த் கஅப் அல்-மாஸினிய்யா, அவர்களின் இரு மகன்கள் அப்துல்லாஹ்
இப்னு ஸைத் மற்றும் ஹபீப் இப்னு ஸைத் (ரலியல்லாஹு அன்ஹும்). அப்பொழுது
ஹபீப் இப்னு ஸைத் இளவயதுச் சிறுவர்.