Facebook Twitter RSS

Friday, June 01, 2012

Widgets

மணிப்பூர் முஸ்லிம் மாணவர் சாதனை – சி.பி.எஸ்.இ – 12-ஆம் வகுப்பு தேர்வில் இந்தியாவில் முதலிடம்!

Manipur boy Mohammad Ismat tops CBSE Class 12 Exam
இம்பால்:மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ)-2012 ஆம் ஆண்டிற்கான 12-வகுப்பு தேர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தை மணிப்பூரைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் முஹம்மது இஸ்மத் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
வடகிழக்கு மாநிலத்தில் இருந்து ஒரு மாணவர் இந்திய அளவிலான சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெறுவது இதுவே முதன் முறையாகும்.
முஹம்மது இஸ்மத் சி.பி.எஸ்.இ +2 தேர்வில் 500க்கு 495 மதிப்பெண்களை (99.6%) பெற்றுள்ளார். இவர் மணிப்பூர் மாநிலம் தவ்பால் மாவட்டத்தில் லிலாங்கில் Haoreibi MayaiLeikai என்ற ஊரைச் சார்ந்தவர். இவரது தந்தை மவ்லானா பஸீருர் ரஹ்மான் ப்ரமைரி மதரஸா ஆசிரியர் ஆவார். தாயார் இஸ்மத்தின் சிறுவயதிலேயே மரணமடைந்துவிட்டார்.
7 சகோதரிகளை கொண்ட இஸ்மத் குடும்பத்தில் கடைசி நபர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தபோதும் இஸ்மத் படிப்பில் கெட்டிக்காரர். இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா?இவர் வசிக்கும் கிராமத்தில் தினமும் 2 அல்லது 3 மணிநேரமே மின்சாரம் இருக்கும். இதனால் அவர் தனது பெரும் பகுதி நேரத்தை பள்ளிக்கூடத்திலேயே கழிப்பார். தினமும் 8 to 10 மணிநேரம் படிப்பார்.
இவர் ஸெனித் அகாடமியில் பயின்று வந்தார். இஸ்மத்துக்கு +2 பயிலத் துவங்கும் பொழுது ரெஜிஸ்ட்ரேசன் ஃபீஸ் கட்ட இயலாத சூழல் இருந்தது அவரது நிலைமையை புரிந்துகொண்ட ஸெனித் அகாடமியின் செயலாளர் எஸ்.எம்.சிங், கட்டணத்தை செலுத்தியுள்ளார். மேலும் அவருக்கு படிப்பதற்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இஸ்மத் உடல்ரீதியாக பலவீனமானவர் என்பதால் நீண்ட படிப்பதையும் அவர் கைவிடும் சூழல் உருவானதாக எஸ்.எம்.சிங் கூறுகிறார்.
இவரது தந்தை கூறுகையில்,இஸ்மத்தின் பலவீனமான உடல்நிலையும், பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையும் கல்வி கற்க தடைக் கற்களாகும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், தனது மகன் இத்தகைய தடைகளை தாண்டி வெற்றியை ஈட்டியுள்ளதற்கு உதவிய  அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதாக கூறினார்.
இஸ்மத் டெல்லியில் உள்ள ஸ்டீஃபன் கல்லூரியில் பயில விரும்புகிறார். இயற்பியல்(பிசிக்ஸ்) பாடத்தை பயின்று விஞ்ஞானியாக மாறவேண்டும் என்பதே இஸ்மத்தின் நோக்கமாகும். மேலும் பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்த பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதவேண்டும் என்பதும் அவரது ஆர்வமாகும்.
ஸெனித் அகாடமி அவரது அடுத்த கட்ட படிப்பிற்கான அனைத்து பொருளாதார உதவிகளையும் அளிப்பதாக தெரிவித்துள்ளது. லிலாங் தொகுதி எம்.எல்.ஏவும் மாநில விவசாய அமைச்சருமான முஹம்மது அப்துல் நாஸிர் ரூ.1,11,111 பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்.
இஸ்மத் தனது வெற்றியின் சூத்திரமாக கூறுவது என்னவெனில், “ஒருவர் தனது ஆசையை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நோக்கி அவரது நடவடிக்கைகள் அமையவேண்டும். ஆடம்பரமாக நவநாகரீகமாக வாழ்வதை விட எளிமையாக வாழ்வதிலும், அதிகமாக சிந்திப்பதிலும் ஒருவர் கவனம் செலுத்தவேண்டும். ஒரு மனிதன் தீர்மானித்து செயல்பட்டால் எல்லாம் சாத்தியமே.” என்றார்.!

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets