Facebook Twitter RSS

Monday, June 25, 2012

Widgets

இந்தியாவிலேயே அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலம் கேரளா-தேசிய குற்றவியல் பதிவுத்துறை அறிக்கை!


Kerala is country's most crime-prone state, NCRB statistics show
புதுடெல்லி:மக்கள் தொகைக்கு ஏற்ப இந்தியாவிலேயே அதிகமான குற்றங்கள்  ’தெய்வத்தின் சொந்த நாடாக’ பெருமைப் பேசப்படும் கேரளா மாநிலத்தில் நடைபெறுவதாக தேசிய குற்றவியல் பதிவு துறை(NCRB) அறிக்கை கூறுகிறது.
கல்வியிலும், சுகாதாரத்திலும் சிறந்து விளங்கும் மாநிலமாக கருதப்படும் கேரளாவில் தான் இந்தியாவிலேயே அதிக ஆபத்து நிறைந்த நகரமான கொச்சி அமைந்துள்ளது.
2010-ஆம் ஆண்டு தகவல்களின் அடிப்படையில் என்.சி.ஆர்.பி இவ்வறிக்கையை தயார் செய்துள்ளது. லட்சம் மக்கள் தொகைக்கு ஏற்ப குற்றச்செயல்கள் கணக்கிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் கேரளாவில் நடைபெறும் குற்றங்களின் சராசரி தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இந்தியாவில் வருடந்தோறும் நடக்கும் குற்றங்களின் சராசரி 187.6 சதவீதமாகும். ஆனால் கேரளாவில் 424.1 சதவீதம் ஆகும். 2009-ஆம் ஆண்டைத் தவிர கேரள மாநிலத்தின் முக்கிய நகரமான கொச்சியில் குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் பல்கிப் பெருகியதாக என்.சி.ஆர்.பி அறிக்கை கூறுகிறது. முந்தைய ஆண்டுகளை விட கொச்சியில் 193 சதவீத குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.
குற்றச்செயல்களில் 2-வது இடத்தை வகிக்கும் மத்தியபிரதேச மாநிலத்தில் கேரளாவை விட மிக குறைந்த அளவிலேயே குற்றங்கள் நடைபெற்றுள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தின் குற்றங்களின் சராசரி 297.2 சதவீதம் ஆகும். 279.8 சதவீத குற்றங்களின் சராசரியைப் பெற்று இந்தியாவின் தலைநகரமான டெல்லி 3-வது இடத்தை வகிக்கிறது.
கலவரங்கள், தீவைப்பு சம்பவங்களின் எண்ணிக்கையிலும் கேரளா முதலிடத்தைப் பெற்றுள்ளது. இவற்றில் இந்தியாவின் மொத்த சராசரி 6.4 சதவீதம் என்றால் கேரளாவின் சராசரி 26 ஆகும். பெண்களுக்கு எதிரான கொடுமைகளிலும் கேரளாவே முதலிடத்தைப் பெற்றுள்ளது. கேரளாவின் சராசரி 27 ஆகும். டெல்லிக்கு 24.6 சதவீதம் ஆகும்.
உயர்கல்வி, சிறந்த சுகாதாரம், நீண்ட ஆயுள் என பெருமைப் பேசப்படும் கேரளா மாநிலம், டெல்லி, உ.பி மாநிலங்களை கூட தோற்கடிக்கும் வகையில் குற்றச்செயல்களில் முன்னணி வகிப்பதாக என்.சி.ஆர்.பி அறிக்கை கூறுகிறது.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets