சென்னை:பெட்ரோல்
விலை உயர்வைக் கண்டித்து நேற்று நாடு முழுவதும் இடதுசாரிகள் மற்றும் பாஜக
அழைப்பு விடுத்த பாரத் பந்த் தமிழகத்தில் தோல்வியடைந்தது.
பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நேற்று
பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் நாடு தழுவிய பந்த்
போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வட மாநிலங்களில் பந்துக்கு ஆதரவு
இருந்த போதிலும் தமிழகத்தில் இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை.
பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. பள்ளி, கல்லூரிகள் திறந்திருந்தன. அரசு, தனியார் அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்பட்டன.
பெரும்பாலான கடைகள், வர்த்தக
நிறுவனங்களும் திறந்திருந்தன. அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல்
ஓடின. ஷேர் ஆட்டோக்களும் இயங்கின. ரயில் போக்குவரத்தும் எந்த பாதிப்பும்
இன்றி நடைபெற்றது. சென்னையில் மின்சார ரயில்கள் வழக்கம் போல் ஓடின.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு
வழக்கம் போல் காய்கறிகள் வந்து இறங்கின. எல்லா கடைகளும் திறந்திருந்தன.
அங்கு வழக்கம் போல காய்கறி, பூ வியாபாரம் நடந்தது. கோயம்பேடு பஸ்
நிலையத்திலும் வழக்கம் போல் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
தமிழ்நாட்டில் முழு அடைப்புக்கு பால் முகவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனாலும் பால் வினியோகம் தடையின்றி நடைபெற்றது.
வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கங்களின்
பேரவை மட்டுமே கடை அடைப்பு நடைபெறும் என்று அறிவித்திருந்தது. ஆனாலும்
பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்களும் திறந்திருந்தன. மேலும்
தமிழ்நாடு முழுவதும் மளிகை கடைகள் திறந்திருந்தன.
சில பேருந்து பணிமனைகளில் மட்டும் இடதுசாரி தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் பஸ்களை இயக்கவில்லை.
சிஐடியூ ஆட்டோ சங்கத்தினர் மட்டும்
ஆட்டோக்களை இயக்கவில்லை. ஆனால் தொழிற்சங்கங்களில் இல்லாத பெரும்பாலான ஆட்டோ
டிரைவர்கள் இயங்கின. கால் டாக்சிகளும் வழக்கம்போல் ஓடின.
சென்னை விமான நிலையத்தில் விமானப்
போக்குவரத்து பாதிப்பின்றி நடைபெற்றது. அனைத்து விமானங்களும் வழக்கம் போல்
வந்தன. மும்பை செல்லும் விமானத்திற்கு போதிய பயணிகள் இல்லாததால் ரத்து
செய்யப்பட்டது.
தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தின்
போது அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை
எடுக்குமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் டி.ஜி.பி
ராமானுஜம் உத்தரவிட்டிருந்தார். இதனால் நேற்று இரவில் இருந்தே சென்னை உள்பட
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நேற்று இரவு விடிய, விடிய வாகன சோதனை
நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பஸ் டெப்போக்கள்,
ரயில் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
திறந்திருக்கும் கடைகளை அடைக்கச் சொல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்திருந்தனர்.
தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணிகளில்
சுமார் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனால் பந்த்
காரணமாக தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை எந்த வகையிலும்
பாதிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment