Facebook Twitter RSS

Latest News

Saturday, December 29, 2012

ஆபிரிக்காவில் அமெரிக்க இராணுவம் - உலக ஏகாதிபத்தியத்தின் இன்னொரு அத்தியாயம்!


by: Abu Sayyaf    ஈராக்கில் அமெரிக்க இராணுவம் வெளியேறி விட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகிறது. ஆனால் ஆப்ரிக்காவில்.....?

United States Africa Command (USAFRICOM or AFRICOM). இந்த பெயர் இப்போது தான் மெல்ல ஆபிரிக்காவின் புளுதிக் காற்றோடு மணக்கிறது. ஆபிரிக்க விவகாரங்களிற்கான அமெரிக்காவின் சிறப்பு படைப்பிரிவு. ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் தனது கட்டளை மையத்தை கொண்டு இயங்குகிறது இந்த USAFRICOM. தலைமையகத்தின் பெயர் “கெல்லி பராக்ஸ்”. 57 ஆபிரிக்க நாடுகளை கண்காணிக்கும் அமெரிக்காவின் அதிகாரபூர்வ இராணுவ மையம். அந்த நாடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட குறுகியகால இராணுவ நடவடிக்கைகள், அந்த நாட்டு இராணுவங்களை புணரமைத்தல், பரஸ்பர இராணுவ பயற்ச்சிகள், ஆயுத விநியோகங்கள் என ஒரு அரசாங்கம் போலவே சில அரசியல் விவகாரங்கள் உள்ளடங்களாக இந்த மையம் தனது பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. என்ன எகிப்து மட்டும் இதற்கு விதிவிலக்கு. எகிப்தினுள் மூக்கை நுழைக்க முடியாதபடியினால் தான் ஜெஸ்மின் புரட்சியை உருவாக்கியது அமெரிக்கா. ஆனால் அதன் முடிவுகள் அது எதிர்பார்த்தது போல அமையவில்லை.


அமெரிக்கா என்றவுடன் வெள்ளை மாளிகையும், வோல்ட் டிஸ்னியும், ஹொலிவூட்டும் தான் எமக்கு நினைவிற்கு வரும். சவலட், ஜீ.எம்.சீ.கார்கள், அர்னால்ட் ஸ்வாஸிநேக்கர், ஐ.பீ.எம். கணனிகள், சீ.என்.என், டைம்ஸ், நியூஸ்வீக் பத்திரிகைகள் இப்படி சில தான் நாம் அமெரிக்கா பற்றி அதிகம் தெரிந்து வைத்திருப்பது. உலகை ஏப்பம் விட துடிக்கும் இந்த தேசத்தின் மறைகரங்கள் பற்றி நாம் அவ்வளவாக அறிவதில்லை. அறிவதற்கும் அக்கறைபடுவதில்லை. காரணம் அதன் ஊடக பயங்கரவாதம் செய்த மாயை எம் சிந்தனைகளை தன் கட்டுக்குள் வைத்திருப்பது. ஆனால் அந்த தேசமோ நேர்த்தியான முறையில் ஏகாதிபத்திய பின்னலை விரித்து கொண்டே செல்கிறது. தனது அதீத இராணுவ, தொழில்நுட்ப வல்லைமைகளால் இதனை அது சாத்தியப்படுத்துகிறது. அந்த வகையில் அதன் இராணுவ கரங்கள் பல ரூபங்களில் தன்னை உலகில் நிலைப்படுத்தியுள்ளது.

United States European Command (EUCOM)       - ஐரோப்பிய கட்டளை மையம்
United States Central Command (USCENTCOM)  - மத்தியகிழக்கு, மத்திய ஆசிய கட்டளை மையம்
United States Pacific Command (USPACOM)      - பசிபிக் பிராந்திய கட்டளை மையம்
United States Africa Command (USAFRICOM)    - ஆபிரிக்க கட்டளை மையம்

Africom emblem 2.svgஆபிரிக்க கட்டளை மையம் 2000 ஆண்டுகளிலேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. 2006ம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட், மற்றும் அதன் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் போன்றவர்கள் இதற்கான இறுதி வடிவம் கொடுத்து அமெரிக்க செனட்டில் இதற்கான அங்கீகாரங்களை பெற்று பட்ஜட்டில் நிதிகளை ஒதுக்கி அதனை பென்டகனிற்கு வழங்கி, ஆபிரிக்க கட்டளை மையத்தை மிகப்பிரமாண்டமான செயற்களமாக மாற்றியமைத்தனர். இலுமினாட்டிகளின் உத்தரவுகளின் பின்புலத்தில் நிகழ்ந்தவை இவை. 

வளமிக்க ஆபிரிக்க நிலம் எனும் நவீன கொலம்பஸ் கனவுகளின் வெளிப்பாடே இதன் உருவாக்கம். லிபிய ஆட்சி கவிழ்ப்பு, அதற்கான சுதந்திர போராளிகளின் சண்டை, சோமாலிய கடற்கொள்ளையரை கட்டுப்படுத்தல், மாலி ஆட்சிலைய ஸ்திரப்படுத்தல், நைஜீரியா எனும் எண்ணை வளமிக்க தேசத்தின் கலகங்களை அடக்க உதவுதல், சூடானின் தென்பிராந்தியங்களில் அமைதி பணி (?) செய்தல் என அது உலகிற்கு தன்னை இப்படியெல்லாம் விளம்பரப்படுத்தியுள்ளது. ஆனால் பிரான்ஸும், பிரித்தானியாவும் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய பொருளாதார சுரண்டலை மொத்தமாக தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வரும் நீண்ட கனவு இது..

இப்போது “வட ஆபிரிக்காவில் அல்-காய்தாவின் பிரசன்னம்” குறித்தும், இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்தும் அமெரிக்கா பேசியுள்ளது. இவற்றை இல்லாமல் செய்வதற்கான பணி தங்களுடையது எனவும் தார்மீக பொறுப்புக்கள் பற்றியும் பேசியுள்ளது. ஆபிரிக்க நாடுகளை இராணுவமயப்படுத்தல் என்ற இலக்கின் அடுத்த கட்டம் அந்த நாட்டு இராணுவத்துடன் இணைந்து சில இராணுவ நடடிக்கைகளில் ஈடுபடல் எனும் களத்தினுள் நுழைய தயாராகியுள்ளது அமெரிக்கா. 

தனத கடற்படையின் சிறப்பு அதிரடிப்படை, தாக்குதல் ஹெலிகப்டர்கள், ட்ரொன் உளவு மற்றும் தாக்குதல் விமானம் போன்றவற்றின் துணையுடன் தனது ஆப்கானிஸ்தான் பாணியிலான செயற்பாட்டை ஆபிரிக்காவில் செயற்படுத்த தயாராகிவிட்டது அமெரிக்கா. அதீத பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பாரிய படை பரம்பல் என்ற திட்டங்களை புறந்தள்ளி, தாக்குதல் அணிகளை ஆபிரிக்கா முழுவதும் நிலைகொள்ள வைத்தல், அதன் நிர்வாக, மற்றும் விநியோக, பாரமரித்தல் செலவுகளை அந்தந்த நாட்டு அரசுகளின் தலையில் கட்டுதல் என்ற திட்டத்துடன் இப்போது இந்த களம் திறக்கப்படவுள்ளது. 

U.S. Naval Forces Africaஇதைத்தான் Carter F. Ham தனது இராணுவ மொழியில் சொல்லியுள்ளார். 2011ல் ஆபிரிக்காவிற்கான தளபதியாக நியமிக்கப்பட்டவர் ஜெனரல் கார்டர் எப். ஹம். இராணுவ நடடிக்கைகள் மட்டுமன்றி, புலனாய்வு, உளவு போன்ற பல துறைகளிலும் நுணுக்கமான அறிவுமிக்கவர் இவர். வெள்ளை மாளிகையின் அரசியல் போக்குகளை உணர்ந்து அதற்கு ஏற்றாற்போல் இராணுவ செயற்பாடுகளை நகர்த்தும் திறமைமிக்கவர். ஒரு வகையில் பார்த்தால் சரியான நபரையே சரியான இடத்திற்கு நகர்த்தியுள்ளது பென்டகன். 

லிபியாவில் அமெரிக்கா நிகழ்த்திய பல சதிகளின் முக்கிய செயற்பாட்டாளர் இவர். சுதந்திர போராளிகளிற்கு ஆயுதம் வழங்கியது முதல் அமெரிக்காவின் ஆபிரிக்கா மீதான ஏகாதிபத்திய வல்லாதிக்க கனவிற்கு தடையாக இருந்த கேர்ணல் முஹம்மர் கடாபியின் மரணம் வரை இவரது பங்கு முக்கியமானது. இப்போது வாஷங்டன் போஸ்ட்டிற்கு வழங்கிய நேர்காணலில் ஆபிரிக்காவில் அமெரிக்க இராணுவ செயற்பாடுகள் பற்றி பிரஸ்தாபித்துள்ளார். இது சாதாரணமாக ஒரு இராணுவ ஜெனரலின் கருத்துக்கள் என்று கொள்வதனைவிடவும், அமெரிக்க அரசின் மறைமுக கருத்துக்கள் என்று கொள்வதே சரியானது. 

லிபியாவின் சில நகரங்களில் அல்-கய்தா பயங்கரவாதிகளின் செல்வாக்குகள், அதிகரித்து வரும் அவர்களது ஆதரவுகள், மாலியில் அவர்கள் கைப்பற்றியுள்ள நிலைகள், சோமாலியாவில் அவர்களது பிரசன்னங்கள் போன்ற பல விடயங்களை விரிவாக விளக்கியுள்ள ஜெனரல் கார்ட்டர் இவற்றிற்கு எதிரான தனது வருங்கால நடவடிக்கைகள் பற்றியும் பேசியுள்ளார். அந்தந்த நாட்டு தேசிய இராணுவங்களுடன் ஒருங்கிணக்கப்பட்ட தாக்குதல் நடவடிக்கைள் பற்றியதே அவரது பிரஸ்தாபத்தின் மையக்கரு. 

ஆக மொத்தத்தில் இன்னொரு ட்ரோன் படுகொலை களம் ஆபிரிக்காவில் திறந்து விடப்பட வாய்ப்புக்கள் அதிகம். ஏதோ ஒன்றின் வால் யாரோ ஒருவின் வேட்டிக்கு உள்ளாக நீண்ட கதையாக ஆபிரிக்காவின் நிகழ்வுகள் மாறப்போவது தான் இன்றைய களம்....



Wednesday, December 26, 2012

ஹலால் உணவுகளை புறக்கணிக்க கோரி புத்த பயங்கரவாதிகள் ஆர்ப்பாட்டம் !



இலங்கையில் முஸ்லிம்களுக்காக விற்பனைச் செய்யப்படும் ஹலால் (இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்பட்டி உண்ண அனுமதிக்கப்பட்டது) முத்திரைக்குத்தப்பட்ட உணவுப் பொருட்களை புறக்கணிக்க கோரி புத்த சாமியார்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள எம்பிலிபிட்டிய நகரில் நேற்று(திங்கட்கிழமை) புத்த சாமியார்கள் பெருமளவில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆளும் ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். அதேவேளையில் அக்கட்சியின் மேல்மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில கூறுகையில்,’ஹலால் சான்றிதழ் பெறவேண்டுமென்று வர்த்தக நிறுவனங்களை முஸ்லிம்கள் தரப்பிலிருந்து பலவந்தப்படுத்துகின்ற போக்குக்கு தமது கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்’ அவர் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு ஹலால் உணவு உண்பதற்கு உரிமை இருப்பது போல ஹலால் இல்லாத உணவை உண்பதற்கான உரிமை மற்ற மதத்தவர்களுக்கு உண்டு என்றும் அமைச்சர் உதய கம்மன்பில வாதிட்டார்.
அதேவேளை, நாட்டில் புத்த விகார்களுக்கு அருகில் ‘உரிய அனுமதியின்றி நிர்மானிக்கப்பட்டுள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் சட்டவிரோதமானவை’ என்றும் அவற்றை அகற்ற வேண்டுமென்றே தாம் போராட்டம் நடத்துவதாகவும் அவர் பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் அண்மைக் காலங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களும் போராட்டங்களும் நடந்துவருவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் சில தினங்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுக் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் கூறுகையில்,’முஸ்லிம் மக்களின் சனத்தொகை, பள்ளிவாசல்கள் மற்றும் ஹலால் முத்திரைகளுக்கு எதிராக அண்மைக் காலங்களாக பல்வேறு பிரச்சாரங்களும் போராட்டங்களும் நடந்துவருவது தொடர்பாக நாங்கள் பாதுகாப்புச் செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்தோம். அதேவேளையில், இப்பிரச்சனை தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். எம்பிலிபிட்டிய பொதுச்சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் முச்சக்கர வண்டியில் வந்த நபர்களால் நேற்று முன் தினம்(ஞாயிற்றுக்கிழமை) தாக்கப்பட்டுள்ளனர்’ என்று அமீன் தெரிவித்துள்ளார்.

குஜராத் எம்.எல்.ஏக்களில் 57 பேர் 'கிரிமினல்கள்'... 134 பேர் கோடீஸ்வரர்கள் !



அகமதாபாத்: குஜராத் சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 182 எம்.எல்.ஏக்களில் 134 பேர் கோடீஸ்வரர்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. மேலும் புதிய எம்.எல்.ஏக்களில் 57 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து ஆவணக் கணக்குகளை வைத்து இந்த விவரம் வெளியிடபப்ட்டுள்ளது. இதுகுறித்து குஜராத் எலக்ஷன் வாட்ச் அமைப்பின் பேராசிரியர் ஜெகதீப் சோக்கர் கூறியதாவது... மொத்தம் உள்ள182 எம்.பிக்களில் 57 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது மொத்த உறுப்பினர்களில் 31 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில் 24 பேர் மீது கொலை, கற்பழிப்பு, கொலை முயற்சி என தீவிரமான வழக்குகள் உள்ளன. பாஜகவின் அமீத் ஷா, சங்கர் செளத்ரி, ஜேத்தா பர்வத், ஐக்கிய ஜனதாதளத்தின் சோட்டுபாய் வாசவா, காங்கிரஸின் ஜாசுபாய் பர்வத் ஆகியோர் மீது மிகவும் தீவிரமான வழக்குகள் உள்ளன. வாசவா மீது கொள்ளை, கொலை, கொலை முயற்சி என 15 வழக்குகள் உள்ளன. அமீத் ஷா மீது சோராபுதீன், அவரது மனைவி கெளசர் பீ, துள்சிராம் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்டரில் கொன்றதாக வழக்கு உள்ளது. பர்வத் மீது கற்பழிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு இவர் முன்பு போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்தபோது 1998ம் ஆண்டு தொடரப்பட்டதாகும். பின்னர் இவர் அரசியலுக்கு வந்த பிறகு வழக்கு கிடப்பில் போடப்பட்டு விட்டது. கடந்த சட்டசபையில் 26 சதவீத கிரிமினல் வழக்குகளைக் கொண்டவர்களே உறுப்பினர்களாக இருந்தனர். இந்த முறை இது 31 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்தம் உள்ள 182 உறுப்பினர்களில் 134 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். இதில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் 86 பேர் ஆவர். காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் 43 பேர். ஒவ்வொரு பாஜக எம்.எல்.ஏவின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 5.82 கோடியாகும். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பொறுத்தவரை அவர்களது சராசரி சொத்து மதிப்பு ரூ. 12.36 கோடியாக உள்ளது.

டெல்லியில் ஓடும் காரில் சிறுமி கறபழிப்பு! – அதிர்ச்சியூட்டும் அடுத்தடுத்த சம்பவங்கள்!



டெல்லி கல்லூரி மாணவி மீதான பாலியல் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் டெல்லியில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தைச் சேர்ந்த தலித் சிறுமியை அவரது வீட்டில் இருந்து 4 பேர் கடந்த 15-ம் தேதி டெல்லிக்கு
கடத்தி வந்து காரில் வைத்து கற்பழித்துள்ளனர். பின்னர் அவரை மீண்டும் பைசாபாத் கொண்டு சென்று பஸ் நிறுத்தத்தில் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் ஜம்முவின் புறநகரான அம்குரோடாவில் கடந்த சனிக்கிழமை இரவு 18 வயது பெண்ணை டிரைவர் மற்றும் அவரது நண்பர் இருவரும் வனப்பகுதிக்கு கடத்திச் சென்று கற்பழித்துள்ளனர். குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு மும்பை பந்த்ராவைச் சேர்ந்த கல்லூரி மாணவியை அவரது கல்லூரி நண்பர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி, இன்று காலையில் இறந்தார். கத்தியால் குத்திய அந்த மாணவனும் தற்கொலை செய்துகொண்டான்.
இதுபோன்று நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தும் கற்பழிப்பு புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போலீஸ் அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியைஏற்படுத்தியுள்ளது. source asiananban

மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வலியுறுத்தல்


சென்னை.டிச.26 -  தமிழகம் கடும் மின்பற்றாக்குறையில் தத்தளித்து வருகிறது. எனவே இடைக்கால நிவாரணமாக கல்பாக்கம் அணு மின் நிலையம், நெய்வேலி அனல் மின் நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம்,வல்லூர் மின் நிலையம் ஆகியவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா   வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்​அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:​
சமீப காலமாக தமிழ்நாடு எப்போதும் இல்லாத அளவு கடும் மின் தட்டுப்பாடு பிரச்சினையில் இருப்பதை தாங்கள் அறிவீர்கள் தமிழகத்துக்கு 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் பல வழிகள் வாயிலாக 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. எனவே, 4 ஆயிரம் மெகாவாட் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது.
கடந்த 2011​ம் ஆண்டு தமிழ்நாட்டின் 3​வது முறையாக பதவி ஏற்றபோது தமிழ்நாட்டுக்கு கூடுதலாக மின்சாரம் வழங்கவேண்டும் என தங்களிடம் கோரிக்கை விடுத்தேன். ஆனால் மத்திய அரசின் எதிர்மறைவான நடவடிக்கையால் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அதே நேரத்தில் கடந்த 6​7​2011 அன்று தங்களுக்கு எழுதிய கடிதத்தில் 1000 மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாக வழங்க வேண்டும் என கோரியிருந்தேன். ஆனால் எங்களுக்கு (தமிழகத்துக்கு) 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
23​10​2012 அன்று தங்களுக்கு எழுதிய கடிதத்தில் டெல்லி மாநில அரசு பயன்படுத்தாமல் ஒப்படைத்த மத்திய தொகுப்பு மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதில் எனக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. மாறாக மத்திய அரசு வேண்டுமென்றே எதிரான பதிலையே அளித்தது.
எனவே குறைந்தபட்சமாக தமிழ்நாட்டில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை அருகேயுள்ள வல்லூர் மத்திய மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் 2830 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு வழங்கவேண்டும்.
தமிழ்நாட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மின் திட்டங்கள் முழுமையாக செயல்படும் வரை, கடுமையாக மின்தட்டுப்பாட்டினால் தவிக்கும் தமிழக மக்களுக்கு இடைக்கால ஏற்பாடு ஆக இந்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
கூடங்குளத்தில் அணுமின் திட்டம் இடையூறு எதுவுமின்றி சிறப்பாக செயல்பட தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதும் தாங்கள் அறிந்ததே. சமீபத்தில் நான் உங்களை சந்தித்தபோது, கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதை எதிர்த்து நடந்த போராட்டங்களின்போது எழுந்த மிகப்பெரிய சட்டம் ​ ஒழுங்கு பிரச்சினையை சமாளிக்க எனது தலைமையிலான அரசு எடுத்த முயற்சிகளை தாங்கள் கனிவுடன் கேட்டு அறிந்தீர்கள்.
பதிலுக்கு கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் 2000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்த்தேன். காரணம் எதுவுமின்றி இதை நான் குறிப்பிடவில்லை. அதற்கான முன் நிகழ்வுகள் இல்லாமலும் இல்லை.
ஆந்திரபிரதேச மாநிலத்தில் துவக்கப்பட்ட சிம்ஹாத்ரியில் உள்ள மத்திய அனல்மின் உற்பத்தி நிலையத்தில் தலா 500 மெகாவாட் மூலம் 2 யூனிட்களில் 1000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அவை அனைத்தும் ஆந்திர மாநிலத்துக்கே வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மின் தட்டுப்பாடினால் கஷ்டப்படும் மக்களுக்கு கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
இறுதியாக தமிழ்நாட்டில் மத்திய அரசு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் இடைக்கால அளவாக வழங்கவேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் எங்களுக்கே வழங்கவேண்டும் என்பதை தாங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அதை உடனடியாக பரிசீலித்து எங்களது கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் அனைத்து மின்சாரத்தையும் வழங்க வேண்டும்.பிற மாநிலங்களுக்கு ஒரு நீதி, தமிழகத்திற்கு ஒரு நீதி என்று மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. அதை நிறுத்தி தமிழக மக்களுக்கு உதவ மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு முதல் ​ அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்

இன்டர்நெட்டில் 24.6 கோடி இணைய தளங்கள் சேர்ப்பு


புதுடெல்லி: இந்த ஆண்டின் 3வது காலாண்டில் 50 லட்சத்துக்கும் அதிகமான இணைய தளங்கள் இன்டர்நெட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உலகம் முழுவதும் 24.6 கோடி பதிவு செய்யப்பட்ட இணைய தளங்களின் பெயர்கள் இன்டர்நெட்டில் உள்ளன. இன்டர்நெட் கட்டமைப்பு சேவைகளை வழங்கிவரும் வெரிசைன் நிறுவனம் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 57 லட்சம் இணைய தளங்கள் இன்டர்நெட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. இது கடந்த காலாண்டை விட 2.4 சதவீதம் அதிகமாகும்.

வெடிவிபத்துக்கு காரணம் என்ன?


சேலம்: விருதுநகர் மாவட்டம் முதலிப்பட்டி பட்டாசு ஆலை விபத்பத்தில் 40 பேர் பலியாகினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளை சோதனையிடவும், லைசென்ஸ் பெறப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டது. விதிமுறையை மீறி செயல்படும் பட்டாசு ஆலையின் உரிமைத்தை ரத்து செய்யும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள செங்காட்டூர் பிரிவு கரட்டுப்பகுதியில் 2 கட்டிடங்களில் செயல்பட்ட பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு 7 பேர் பலியாகியுள்ளனர். இது அதிகாரிகளின் சோதனையில் தப்பிய லைசென்ஸ் இல்லாத ஆலை என கூறப்படுகிறது. ஆரம்பத்தில் லைசென்சுடன் இயங்கிய இந்த ஆலைக்கு தற்போது வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது.  இதனால், நடப்பாண் டுக்கு அனுமதி பெறாமலேயே ஆலை செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஆலை சேலம்&மேட்டூர் மெயின் ரோட்டில் செங்காட்டூர் பிரிவு சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் மறைவான இடத்தில் அமைந்துள்ளது. மேச்சேரியை அடுத்துள்ள உப்புபள்ளத்தில் மற்றொரு பட்டாசு ஆலையை சாந்தி நடத்தி வந்துள்ளார். இதில் உப்புபள்ளத்தில் உள்ள ஆலைக்கு மட்டுமே அவர் முறையாக லைசென்ஸ் பெற விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. விபத்து பகுதியை பார்வையிட வந்த மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திடம் இதுபற்றி கேட்டபோது, ‘இந்த பட்டாசு ஆலைக்கு லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 

அதனால் இது லைசென்ஸ் ஆலை தான்,‘ எனக் கூறினார். தனியார் பட்டாசு ஆலைக்கு 15 கிலோ வெடி மருந்தை பயன்படுத்த மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஆனால் இந்த ஆலையில் சுமார் 100 கிலோ அளவுக்கு வெடி மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் விபத்து ஏற்பட்டதும் 2 கட்டங்களும் தரைமட்டமாகியுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன வெங்கடேசனிடம் கேட்டபோது, ‘விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலைக்கு லைசென்ஸ் புதுப்பிப்புக்கு கடந்த 31.3.2012 தேதியில் விண்ணப்பம் வந்துள்ளது. அதற்கான பணமும் கட்டப்பட்டுள்ளது. ஆலையை போலீ சாரும், வருவாய்துறையின ரும் இணைந்து சோதனை நடத்தினர். எப்படியோ தற்போது விபத்து ஏற்பட்டு விட்டது,‘ என்றார்.  பட்டாசு ஆலையை புதுப்பிக்க கடந்த மார்ச் மாதம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 9 மாதமாக அந்த புதுப்பிப்பு விண்ணப்பம் கிடப்பில் கிடந்துள்ளது. புதுப்பிப்பு அனுமதியை அதிகாரிகள் வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் சோதனை நடத்தி, ஆலையை மூடியிருந்தால், இந்த விபத்து ஏற்பட்டிருக்காது.எஸ்பி பேட்டி: அஸ்வின் கோட்னீஸ் கூறுகையில், ‘‘விரிவான விசாரணையை மேற்கொள்வதால், விபத்து குறித்து முழுவிவரம் தெரியவரும்,‘‘ என்றார்.


குடும்பமே பலியான சோகம்
வெடி விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையை நடத்தி வந்தவர் சரவணன். இவர் மேச்சேரி உப்புபள்ளத்தில் மற்றொரு பட்டாசு ஆலையை நடத்தி வந்துள்ளார். அதில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி சரவணன் உடல் சிதறி பலியானார். அதன்பின் தற்போது நேற்று நடந்த செங்காட்டூர் பிரிவு கரட்டு பட்டாசு ஆலை வெடி விபத்தில் அவரது மனைவி சாந்தி, மகன் சூர்யா பலியாகியுள்ளனர். அவரது மகள் அம்மு மட்டுமே தப்பியுள்ளார். பட்டாசு விபத்துகளில் குடும்பமே பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே பயங்கரம் பட்டாசு விபத்தில் 8 பேர் பலி


சேலம்: சேலம் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 4 பெண்கள்,  3 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் உடல் சிதறி இறந்தனர். சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கொப்பம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சாந்தி(36). இவர்கள் உப்புபள்ளம் மற்றும் செங்காட்டூர் பிரிவு காட்டுவளவு கரடு ஆகிய 2 இடங்களில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்தனர். இவர்களுக்கு சூரியா(10), அம்மு(8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு உப்புபள்ளம் ஆலையில் நடந்த தீ விபத்தில் சரவணன் இறந்தார். இதன் பின்னர் சாந்தி 2 தொழிற்சாலைகளையும் நிர்வகித்து வந்தார். பகலில் மட்டும் இந்த ஆலைகளில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணி நடந்து வந்தது. நேற்று பள்ளி விடுமுறை என்பதால் சாந்தி, தனது குழந்தைகள் சூரியா, அம்மு ஆகியோரை அழைத்துக் கொண்டு காட்டுவளவு கரடு பட்டாசு ஆலைக்கு சென்றார்.

 அங்கு வழக்கமாக பணிபுரியும் தொழிலாளர்களுடன், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். விடுமுறை நாட்களில் பட்டாசுக்கு லேபிள் ஒட்டுதல், சணலை தயார் செய்தல் போன்ற பணிகளை மாணவ, மாணவிகள் செய்வது வழக்கம். நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசு தயாரிக்கும் மருந்து கலவை உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ மளமளவென பரவியதில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ வெடி மருந்து, ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் நாட்டு வெடிகள் உள்ளிட்டவை வெடித்து சிதறின.  பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். ஆலை உரிமையாளர் சாந்தி, இவரது மகன் சூரியா (12), சிவகாமி (40), கேசவன்(12) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். 

ஆலையில் பணிபுரிந்தவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், தீயில் கருகியும் உயிருக்கு போரா டினர்.  20 நிமிடத்துக்கும் மேலாக மருந்து மற்றும் வெடிகள் வெடித்துக் கொண்டிருந்தன. படுகாயமடைந்த பாறைக்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கம்(50), விஜயா(37), இவரது மகள் விமலா(17), சதீஷ்(19), இவரது சகோதரி தீபா(12), ஈஸ்வரி (35), பழனியப்பன் (40) ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  இவர்க ளில் தீபா மரணமடைந்தார். மேலும் மாணவர்கள் பவித்ரா(11), மனோஜ்குமார்(12) ஆகியோர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி தங்கம், ஈஸ்வரி, விஜயா ஆகியோர் இறந்தனர். தீ விபத்தில் காயமடைந்தவர்களிடம் மாஜிஸ்திரேட் ரபீக் வாக்குமூலம் பெற்றார். விபத்தில் இறந்தவர்களில் 3 பேர் மாணவர்கள். மேலும் சில மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Blogger Wordpress Gadgets