டேராடூன்:உத்தரகாண்ட் முதல்வர் பதவிக்கு தன்னை தேர்வுச் செய்யாததை கண்டித்து மத்திய அமைச்சர் ஹரீஷ் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அளித்துள்ளார். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பு உருவாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எக்கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு 32 தொகுதிகள் கிடைத்த நிலையில் 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மற்றும் உத்தரகாண்ட் கிராந்தி தளின் ஒரு எம்.எல்.ஏ ஆதரவுடன் ஆட்சியமைக்க தயாராகி வந்தது. ஆனால் முதல்வர் பதவிக்கு யாரை தேர்வுச் செய்வது என்பது குறித்து பெரும் விவாதம் நடைபெற்று வந்தது.
காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் குலாம் நபி ஆசாத் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு இறுதியாக உத்தரகாண்ட் மாநில காங்.தலைவர் ரீட்டா ஜோஷி பகுகுணாவின் சகோதரர் விஜய் பகுகுணா முதல்வராக தேர்வுச் செய்யப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த உத்தரகாண்டைச் சார்ந்த மத்திய அமைச்சர் ஹரீஷ் ராவத் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ராவத்திற்கு சில எம்.எல்.ஏக்களின் ஆதரவும் இருக்கிறதாம். இத்தகைய சூழலில் உத்தரகாண்டில் காங்கிரஸ் ஆட்சி சுமூகமாக நடைபெறுமா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
******************* ************************ ************************
No comments:
Post a Comment