Facebook Twitter RSS

Tuesday, February 19, 2013

Widgets

அப்சல் குருவின் தூக்கு - மக்களாட்சிக்கு ஓர் உன்னதமான நாள்
வெகு அரிதாகத்தான் இந்த நாடோ அல்லது நாட்டின் பெரிய கட்சிகளான காங்கிரசு, பாசக, மார்க்சியப் பொதுவுடமைக் கட்சி(CPM) ஆகியவ ஒருமைப்பாடுடன் இருக்கின்றன. அப்படி ஓர் அரிதான இத்தருணத்தில்தான், தண்டனையின் கால நீட்டிப்பு, நேரம் தொடர்பான சிறு பூசல்கள் இருந்தாலும், இக்கட்சிகள் சட்டம் ஒழுங்கின் வெற்றி(!!!)யைக் கொண்டாட ஒன்று கூடியிருக்கின்றன.
இந்நாட்களில் தேசத்தின் மனசாட்சி தொலைக்காட்சிகளின் படப்பிடிப்புக் கூடங்களிலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. வழக்கம்போல் இத்தொலைக்காட்சிகள் இராச விசுவாசத்தையும் சிறிதளவு உண்மையும் கலந்து நம் மீது கொட்டித் தீர்த்தன.
அப்சல் குரு இறந்து விட்டார். ஆனால் கூட்டமாக வேட்டையாடும் கோழைகளைப் போல, தங்கள் தைரியத்தை அதிகப்படுத்திக் கொள்ள ஒவ்வொருவருக்கும் மற்றவர் தேவைப்பட்டனர் எனத் தோன்றியது.இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்த மிகப்பெரிய தவறின் காரணமாக ஏற்பட்ட ஒரு உள்ளார்ந்த குற்ற உணர்ச்சி இதற்குக் காரணமாக இருக்கலாம்.]
   அப்சல் குருவின் தூக்கு - மக்களாட்சிக்கு ஓர் உன்னதமான நாள்    
9/2/2013 அன்று மக்களாட்சிக்கு ஓர் உன்னதமான நாள் இல்லையா? (கட்டுரையின் ஆங்கில மூலம் 10/2/2013 அன்று எழுதப்பட்டது). தில்லியில் இளவேனிற்காலம் தொடங்கிவிட்டது. கதிரவன் உதித்தவுடன் சட்டமும் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது. 2011 நாடாளுமன்றத் தாக்குதலில் முக்கிய குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்ட அப்சல் குரு காலைச் சிற்றுண்டிக்கு சற்று முன்பாக, கமுக்கமாகத் தூக்கிலிடப்பட்டார். அவரது உடல் திகார் சிறையிலேயே புதைக்கப்பட்டது. ஒருவேளை மக்பூல் பட் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே அப்சல் குரு புதைக்கப்பட்டிருப்பாரோ? (மக்பூல் பட் காசுமீரைச் சேர்ந்தவர். 1984இல் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டவர். 11/2/2013 அன்று காசுமீர் மக்கள் அவரது நினைவு தினத்தை அனுசரிக்க இருக்கிறார்கள்).
அப்சல் குருவைத் தூக்கிலிடப் போவது அவரது மனைவிக்கோ மகனுக்கோ தெரியப்படுத்தப்படவில்லை. "அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட செய்தியை அப்சல் குருவின் குடும்பத்திற்கு பதிவஞ்சல்(Registered post) மூலமாகவும் விரைவு அஞ்சல்(speed post) மூலமாகவும் அதிகாரிகள் அனுப்பி இருக்கிறார்கள். அஞ்சல் சென்று சேர்ந்ததா இல்லையா என்று உறுதி செய்யுமாறு சம்மு காசுமீர் காவல்துறைத் தலைவருக்கு(DGP) உத்தரவிடப்பட்டுள்ளது" என்று உள்துறைச் செயலாளர் (Home Secretary) ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அதைப் பற்றி யாருக்குக் கவலை? கேவலம் அவர்கள் ஒரு தீவிரவாதியின் குடும்பத்தினர் தானே.
வெகு அரிதாகத்தான் இந்த நாடோ அல்லது நாட்டின் பெரிய கட்சிகளான காங்கிரசு, பாசக, மார்க்சியப் பொதுவுடமைக் கட்சி(CPM) ஆகியவ ஒருமைப்பாடுடன் இருக்கின்றன. அப்படி ஓர் அரிதான இத்தருணத்தில்தான், தண்டனையின் கால நீட்டிப்பு, நேரம் தொடர்பான சிறு பூசல்கள் இருந்தாலும், இக்கட்சிகள் சட்டம் ஒழுங்கின் வெற்றியைக் கொண்டாட ஒன்று கூடியிருக்கின்றன.
இந்நாட்களில் தேசத்தின் மனசாட்சி தொலைக்காட்சிகளின் படப்பிடிப்புக் கூடங்களிலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. வழக்கம்போல் இத்தொலைக்காட்சிகள் இராச விசுவாசத்தையும் சிறிதளவு உண்மையும் கலந்து நம் மீது கொட்டித் தீர்த்தன.
அப்சல் குரு இறந்து விட்டார். ஆனால் கூட்டமாக வேட்டையாடும் கோழைகளைப் போல, தங்கள் தைரியத்தை அதிகப்படுத்திக் கொள்ள ஒவ்வொருவருக்கும் மற்றவர் தேவைப்பட்டனர் எனத் தோன்றியது. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்த மிகப்பெரிய தவறின் காரணமாக ஏற்பட்ட ஒரு உள்ளார்ந்த குற்ற உணர்ச்சி இதற்குக் காரணமாக இருக்கலாம்.
உண்மை என்ன?
2001 திசம்பர் 13 அன்று ஆயுதம் தாங்கிய ஐவர் ஒரு வெள்ளை நிற அம்பாசடர் மகிழுந்தில் வாயில் வழியாக பாரளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்தனர். அவர்களிடம் உயர்தர வெடிகருவிகள் இருந்தன. அவர்கள் பாதுகாப்புப்படை வீரர்களால் எதிர்கொள்ளப்பட்ட போது, துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர். அவர்கள் எட்டு பாதுகாப்புப் படை வீரர்களையும் ஒரு தோட்டக்காரரையும் கொன்றனர். அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஐவரும் கொல்லப்பட்டனர். காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அப்சல் குரு பல வாக்குமூலங்கள் அளித்திருந்தார். அதில் ஒன்றில் தாக்குதல் நடத்திய ஐவரின் பெயர்களாக முகம்மது, இராணா, இராஜா, ஹம்சா, ஹெய்டர் எனும் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார். இன்றுவரை அந்த ஐவரைப் பற்றி நமக்குத் தெரிந்த ஒரே தகவல் இதுதான்!
உள்துறை அமைச்சாராக இருந்த அத்வானி அவர்கள் ஐவரும் பாகிசுதானியர்களைப் போல் தோற்றமளித்ததாகக் கூறினார். ஒரு சிந்தியான அவருக்கு பாகிசுதானியர்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்திருக்கக்கூடும் இல்லையா? அப்சலின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்திய அரசு தனது தூதரை பாகிசுதானிலிருந்து திரும்ப அழைத்தது. ஐந்து இலட்சம் வீரர்களை பாகிசுதான் எல்லைக்கு அனுப்பியது இந்தியா. அணுஆயுதப் போர் மூளக் கூடும் என்றெல்லாம் பேச்சுகள் வந்தன. வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் அலுவலர்களுக்குப் பயண அறிவுரைகளையெல்லாம் கூறி தில்லியிலிருந்து வெளியேற்றின. ஆறு மாதங்கள் வரை நீடித்த இந்நிலையால் இந்தியாவிற்கு பல்லாயிரம் கோடிகள் செலவாயின. ஆனால் இவ்வளவிற்கும் அடிப்படையான அப்சலின் வாக்குமூலத்தை விசாரணையின் தவறுகளையும், விதிமுறை மீறல்களையும் காரணம் காட்டி, பின்னர் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
திசம்பர் 14 அன்று தில்லி சிறப்பு காவல் குழு இவ்வழக்கில் துப்பு துலங்கியதாக அறிவித்தது. திசம்பர் 15 அன்று, இத்தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்பட்ட பேராசிரியர் எசு.ஏ.ஆர் கிலானி தில்லியிலும், சௌகத் குருவும், அப்சல் குருவும் சிறீநகரிலுள்ள பழச்சந்தையிலும் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து சௌகத்தின் மனைவியான அப்சன் குருவையும் கைது செய்தனர். ஊடகங்கள் வெகு ஆர்வமாக சிறப்புக் காவல் குழுவின் கூற்றுகளை வெளியிட்டன. "தில்லி பல்கலைக்கழக விரிவுரையாளர் தீவிரவாதத் திட்டங்களின் மையம்", "பல்கலைக்கழக தாதா ஃபிதாயீனை வழிநடத்தினார்", "தாத ஓய்வு நேரங்களில் தீவிரவாதம் பற்றி வகுப்பெடுத்தார்", என்பவை அப்போது வெளிவந்த தலைப்புச் செய்திகளில் சிலவாகும். ஜீ(Zee TV) காட்சி உண்மை நிகழ்ச்சிகளை சோடித்து எடுத்த "திசம்பர் 13" என்ற குறும்படத்தை ஒளிபரப்பியது.
இந்நிகழ்ச்சி காவல்துறையின் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. (காவல் துறையின் கூற்று உண்மையாக இருந்தால் நீதிமன்றங்கள் எதற்காக இருக்கின்றன?).தலைமை அமைச்சர் வாஜ்பாயும், எல்.கே.அத்வானியும் இப்படத்தைப் பாராட்டினர். ஊடங்கள் நீதிபதிகளின் தீர்ப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறி உச்சநீதிமன்றம் இப்படத்திற்குத் தடை விதிக்க மறுத்து விட்டது. விரைவு நீதிமன்றத்தில் அப்சல், சௌகத், கிலானி ஆகிய மூவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டதற்கு சில நாட்கள் முன்புதான் இப்படம் ஒளிபரப்பப்பட்டது. தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டதாகச் சொல்லப்பட்ட பேராசிரியர் எசு.ஏ.ஆர்.கிலானி, அப்சன் குரு ஆகியோரை உயர் நீதிமன்றம் பின்னர் விடுதலை செய்தது. உச்ச நீதிமன்றம் இந்த விடுதலையை உறுதி செய்தது. ஆனால் ஆகஸ்டு 5, 2005 அன்று அளித்த தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் முகம்மது அப்சலுக்கு மூன்று ஆயுள் தண்டனைகளையும் இரட்டை மரண தண்டனையும் விதித்தது.
"அப்சல் குரு திசம்பர் 13,2001 அன்று நாடாளுமன்றத்தை அதிர வைத்த தீவிரவாதிகளில் ஒருவனில்லை. பாதுகாப்புப் படை வீரர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு பேரில் மூவரைக் கொலை செய்த ஒருவனுமில்லை". இது பாசக மாநிலங்களவை உறுப்பினர் சந்தன் மிசுரா, அக்டோபர் 7,2006ல் வெளிவந்த "தி பயோனியர்" இதழுக்கு அளித்த பேட்டியாகும். இக்கூற்று பல மூத்த இதழியல் நிருபர்கள் கூறிய பொய்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளது. உண்மை அந்நிருபர்களுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும். காவல் துறையின் குற்றப்பத்திரிக்கை கூட அத்தகைய நேரடி குற்றச்சாட்டை அப்சல் குரு மீது வைக்கவில்லை. உச்ச நீதிமன்றமும் "சாட்சியங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையிலானவை. குற்றச்சதியில் ஈடுபட்டதற்கான நேரடி சாட்சியங்கள் எவையும் இல்லை." என்று கூறிவிட்டு, மேலும் "ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய, பல உயிர்களை பலி கொண்ட இந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டால் மட்டுமே சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த இயலும்" என்று கூறியது.
பாராளுமன்றத் தாக்குதல் குறித்த நமது கூட்டு மனசாட்சியை வடிவமைத்தவை எவை? நாம் செய்தித்தாள்களின் மூலம் அறிந்துகொண்ட தகவல்களா? தொலைக்காட்சியில் நாம் பார்த்த குறும்படங்களா?
நீதிமன்றம் எசு.ஏ.ஆர் கிலானியை விடுதலை செய்தது; ஆனால் அப்சலுக்குத் தண்டனை விதித்தது. இதிலிருந்தே இவ்வழக்கு நடுநிலையாக நடைபெற்றிருக்கிறது என்று வாதிடக் கூடியவர்களும் இருக்கக்கூடும் இல்லையா? அதையும் பார்க்கலாம்.
இவ்வழக்கின் விசாரணை மே 2002இல் விரைவு நீதிமன்றத்தில் தொடங்கியது. அப்போது உலகம் 9/11 தாக்குதல் ஏற்படுத்திய அதிர்வுகளிலிருந்து வெளிவரவில்லை. அமெரிக்க அரசோ ஆப்கானிசுதானில் பெற்ற வெற்றியில் சிறுபிள்ளைத்தனமாக அகமகிழ்ந்து கொண்டிருந்தது. குசராத்தில் அரசு கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலை தொடர்ந்து கொண்டிருந்தது. பாராளுமன்றத் தாக்குதல் வழக்கிலோ சட்டம் தன் வேலையை காட்டிக் கொண்டிருந்தது. இந்தக் குற்ற வழக்கின் மிக முக்கியமான கட்டத்தில், ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதும், சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்ட போதும் அடிப்படை வாதங்கள் வைக்கப்பட்டபோதும், சட்ட விதிகளின் அடிப்படையில் வாதிடலாம். ஆனால் புதிய ஆதாரங்களைச் சேர்க்க முடியாது எனும் நிலையே இருந்தது.
மிகப் பாதுகாப்பான சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்சல் குருவிற்கு வாதாட வழக்கறிஞர் கூட இல்லை. நீதிமன்றம் அமர்த்திய இளநிலை வழக்குரைஞரோ அப்சல் குருவை ஒரு முறை கூட சிறையில் சென்று சந்திக்கவில்லை. அப்சலுக்கு ஆதவாக ஒரு சாட்சியத்தைக் கூட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. எதிர்த்தரப்பின் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை கூட செய்யவில்லை. நீதிபதி இந்த விவகாரத்தில் தான் எதுவும் செய்ய முடியவில்லை என்று தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தினார்.
இந்த வழக்கிலுள்ள ஏராளமான குளறுபடிகளில் சிலவற்றைக் கீழே காணலாம்:
காவல்துறை கிலானியிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயெ அப்சலைப் பற்றிக் கண்டுபிடிக்க முடிந்ததாகக் கூறியது. ஆனால் நீதிமன்ற ஆவணங்கள் அப்சலைக் கைது செய்யும் உத்தரவு கிலானியைப் பிடிக்கும் முன்பே வழங்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றன. நீதிமன்றம் இதை ஆவண முரண் என்று கூறியது. ஆனால் ஏதும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டது.
அப்சல் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்பேசியும் மடிக்கணிணியும் மிக முக்கிய ஆவணங்களாகும். கைது ஆணை பிறப்பித்த பிசுமில்லா, கிலானியின் சகோதரராவார். பிடியாணை பிறப்பித்தவர்கள் சம்மு காசுமீரைச் சேர்ந்த காவல்துறையினர் இருவராவர். இருவரில் ஒருவர், அப்சல் போராளியாக இருந்து சரணடைந்த போது அவரைத் துன்புறுத்தியவராவார். கைப்பற்றப்பட்ட கணிணியும் செல்பேசியும் முத்திரை(சீல்) வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.
மடிக்கணிணியின் வன்வட்டை(hard disc) கைதுக்குப் பிறகு யாரோ பயன்படுத்தி இருப்பது வழக்கு விசாரணையின் போது தெரிய வந்தது. அந்த வன்வட்டில் உள்துறையின் போலியான அனுமதிச் சீட்டுகளும், தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தினுள் நுழையப் பயன்படுத்திய போலி அடையாள அட்டைகளுமே இருந்தன. மேலும் ஜீ தொலைக்காட்சியின் பாராளுமன்ற காணொளியும் இருந்தது. காவல் துறையின் கூற்றுப்படி "அப்சல் பல தகவல்களை அழித்துவிட்டான். ஆனால் குற்றத்தை மெய்ப்பிக்கும் சில முக்கிய தகவல்களை அழிக்காமல் மடிக்கணியை காசி பாபாவிடம் ஒப்படைக்க அப்சல் விரைந்து கொண்டிருந்தான்". காவல் துறை குற்றப்பத்திரிக்கையின் படி இந்த காசி பாபாதான் தாக்குதலின் தலைவர்.கமல் கிசோர் என்ற சாட்சி அப்சலை அடையாளம் கண்டு கொண்டதுடன், தீவிரவாதிகள் திசம்பர் 4 2001 அன்று ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளப் பயன்படுத்திய சிம் கார்டை அப்சலுக்கு விற்றதாகவும் கூறினார். ஆனால் வழக்கு விசாரணையின் போது செல்பேசி அழைப்புப் பதிவுகள் சிம் கார்டுகள் நவம்பர் 6, 2001லிருந்தே பயன்பாட்டிலிருந்ததைத் தெரிவிக்கின்றன.
இப்படியாக சோடிக்கப்பட்ட ஆவணங்களும் பொய்களும் முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்கின்றன. நீதிமன்றம் இவை அனைத்தையும் கவனித்தது. ஆனால் காவல்துறையை இலேசாகக் கடிந்து கொண்டதுடன் விட்டுவிட்டது.
வழக்கமாக கசுமீரில் சரணடையும் போரளிகளைப் போலவே அப்சலும் இரையாகிப் போனார். அவர் சித்திரவதை செய்யப்பட்டார், மிரட்டப்பட்டார், கடுமையாகத் துன்புறுத்தப்பட்டார். நடந்த சதித் திட்டங்களின் முன் அவர் ஒன்றுமே இல்லை. பாராளுமன்றத் தாக்குதலில் உண்மையை வெளிக்கொணர விரும்பும் எவருக்கும் ஏராளமான ஆதாரங்கள் இருந்தன. ஆனால் யாருமே உண்மையைக் கண்டறிய விரும்பவில்லை. சதியின் மூல காரணகர்த்தாக்கள் கண்டறியப்படவும் இல்லை, விசாரிக்கப்படவும் இல்லை.
ஆனால் அப்சல் தூக்கிலிடப்பட்டுவிட்டார். இப்போது நமது கூட்டு மனசாட்சி திருப்தி அடைந்திருக்கும் என்று நம்புகிறேன். இல்லை நமது கோப்பையில் பாதி இரத்தம்தான் நிரம்பியிருக்கிறதா?
தமிழாக்கம் – வி.நரேந்திரன்
ஆங்கில மூலம்:
http://www.thehindu.com/opinion/lead/a-perfect-day-for-democracy/article4397705.ece

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets