Facebook Twitter RSS

Saturday, March 30, 2013

Widgets

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் ... பகுதி 1
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!


முஸ்லிம் உம்மத்தின் மறுமலர்ச்சிப்பாதை பற்றி 20ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூற்களில் அஷ்ஷஹீத் செய்யித் குத்ப் அவர்கள் இறுதியாக எழுதிய “இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள்” என்ற நூல் முக்கியமானது. ஜமால் அப்துல் நாசரின் எகிப்து அரசாங்கம், அரசைக் கவிழ்க்க சதி செய்தார் என அவருக்கு எதிராக தயாரித்த குற்றப்பத்திரிகைக்கு இந்நூலிலிருந்தும் சான்றுகள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் அவர் எகிப்து அரசினால் தூக்கிலிடப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார். ஒரு ஷஹீதின் இறுதி வார்த்தைகளான இந்நூலின் பகுதிகளை உம்மத்தின் மறுமலர்ச்சி நோக்கி இயங்கும் முஸ்லிம்களுக்காக இங்கே தருகிறோம்.
இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் 
ஆசிரியர் : ஷஹீத் செய்யித் குதூப் (ரஹ்)
இந்நூலுக்கு ஷஹீத் செய்யித் குதுப் (ரஹ்) அவர்கள் வழங்கிய முன்னுரை

மனித இனம் தனது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தேவைப்படும் மாண்புமிக்க நெறிகளை இழந்து நிற்கின்றது. இதனால் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றது மனித இனம். வளர்ச்சியில் வானத்தை எட்டி முட்டி நிற்கின்றோம் என மார் தட்டிய மேலைநாடுகள் கூட மனித இனம் மனித இனமாக வாழ்ந்திட வழி காட்டிட வழி தெரியாமல் அங்கலாய்த்து நிற்கின்றன. (செய்யித் குதுப் அவர்கள் எகிப்தின் முதன்மைக் கல்வி கண்காணிப்பாளராக இருந்த போது இந்த மேலைநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவற்றின் ஒழுக்க வீழ்ச்சியை நேரில் கண்டார்கள் என்பது நினைவு கூரத்தக்கது.) மேலை நாடுகள் இன்று வரை பிரஸ்தாபித்துப் பேசி வந்த தத்துவங்கள் அவற்றைக் காப்பாற்றிடவில்லை. கீழை நாடுகளைக் குறைத்தும் குத்தியும் பேசி வந்தன அந்த மேலை நாடுகள். ஆனால் பல நேரங்களில் இந்தக் கீழை நாடுகளை அண்டித்தான் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்திட்டன இந்த மேலைநாடுகள். இப்படிச் சொல்லி விடுவதால் இந்தக்கீழை நாடுகள் மேலை நாடுகளை விஞ்சிக் கீர்த்தி பெற்று விட்டன என்றில்லை. இந்தக்கீழை நாடுகளில் பல தங்களைக் கம்ய10னிசக் கொள்கையின் ஒளிவிளக்குகள் எனப் பிரகடனப்படுத்தின. உண்மையில் இந்த நாடுகள் எதிலும் கம்ய10னிசம் எள்ளளவும் வாழவில்லை. கம்ய10னிசம் என்ற இந்த மார்க்சிசம் வறுமையிலே மக்களை உழலவிட்டு உரிமைகளே அவர்களுக்கு இல்லை என ஆக்கி வேடிக்கை பார்க்கும் கொடுங்கோல் ஆட்சிகளிலே தான் எடுபடும். எங்கே எப்போது மனிதன் வறுமையிலிருந்தும் ஏழ்மையிலிருந்தும் விடுபட்டு விட்டானோ அந்த நொடியில் கம்ய10னிசம் அவனுடைய எதிரியாக மாறிவிடும். இதன் இன்னொரு வேதனையும் வேடிக்கையும் என்னவெனில் அநியாயமும் அக்கிரமும் செய்யும் ஆட்சியாளர்களின் மண்ணிலே கூட கம்ய10னிசம் எடுபடாமல் போய்க்கொண்டிருக்கின்றது.
கம்ய10னிசம் முழுமையாகச் செயல்படுகின்றது எனப் பிரகடனப்படுத்தப்படும் ரஷ்யாவிலேயே அது வாழ முடியாமல் வதைபடுகின்றது. (இன்று அது மாஸ்கோவில் மாண்டுவிட்டது. இது செய்யித் குதுப் அவர்கள் 1964களில் எழுதியது.) தனக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்திட இயலாமல் வேற்று நாடுகளிலிருந்தும் மாற்றுக் கொள்கையைக் கொண்டவர்களிடமிருந்தும் இறக்குமதி செய்து தனது தங்க வளத்தைத் தாரை வார்த்துத் தந்து கொண்டிருக்கின்றது கம்ய10னிசம். கழனிகளும் காடுகளும் அரசுக்கே சொந்தம் என்று பொதுவுடைமை பேசி அரசே விவசாயம் செய்யும், விநியோகம் செய்யும் என்ற பிடுங்கி பறிக்கும் கொள்கைகளால் ஏற்பட்ட குளறுபடி தான் கம்ய10னிச புரட்சி பேசிய நாடுகளில் உணவுப் பஞ்சம். சுருங்கச் சொன்னால் மனிதனின் இயற்கையான இயல்புக்கு எதிராகப் போர் தொடுத்திடும் போக்கைக் கொண்டது தான் கம்ய10னிசத்தின் மிகப் பெரிய பலவீனம். இதனால் அது அழிவைத் தேடி விரைந்தோடிக் கொண்டிருக்கின்றது. மேலை நாடுகளின் முதலாளித்துவக் கொள்கைகள் மனிதனுக்கு வேண்டிய உயரிய வழிகாட்டுதல்களை வழங்கத் தவறி விட்டதால், கீழை நாடுகள் அதாவது கம்ய10னிச நாடுகள் அழிவைத் தேடி ஓடிக்கொண்டிருப்பதால், இந்த உலகை காப்பாற்றிட ஒரு கொள்கை அவசரமாகத் தேவைப்படுகின்றது.
இந்த மேலைநாடுகள் அது போலவே இந்தக் கீழைநாடுகள் விஞ்ஞானத்தில் அறிவுத்துறையில் தாங்கள் பெற்றிருந்த வளர்ச்சியிலே தளர்ச்சிக் கண்டு விட்டன. ஆதலால் அவை மனித இனத்திற்கு வழிகாட்ட இயலாமற் போய்விட்டன என நான் கூறவில்லை. அறிவுத்துறையில் இந்த நாடுகள் ஈட்டிய வெற்றிகள் மனித இனத்திற்குப் பயன்பட வேண்டும் என்றால் ஓர் உன்னதமான வாழ்க்கை நெறி உடனேயே தேவைப்படுகின்றது. இந்த உலகை அழிவிலிருந்து காப்பாற்றி ஈடேற்றத்தின் பால் இட்டுச்செல்லும் இந்த வாழ்க்கை நெறி நிச்சயமாக மனிதனின் இயற்கையான இயல்புகளோடு இயைந்து சென்றிட வேண்டும் இல்லையேல் இன்னொரு மாபெரும் தோல்வியை மனித இனம் சந்திக்க வேண்டியது வரும். தேசியம் தேசியம் என்று கூவி மக்கள் மத்தியில் வெளிகளைய10ட்டி இடைக்காலத்தில் எடுபட்ட கொள்கைகளும் அந்தக் கொள்கைகளைச் சொல்லி வாழ்ந்த இயக்கங்களும் தங்கள் வலுவை இழந்து தளர்ந்து நிற்கின்றன. உள்ளதைச்சொல்வதனால் மனித மூளைகளால் உருவாக்கப்பட்ட கொள்ககைகளெல்லாம் தங்கள் தோல்வியை ஒத்துக் கொள்ளத்; துவங்கிவிட்டன. (1993 ஆம் ஆண்டில் மட்டும் 8000 ஜெர்மானியப் பெண்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இவர்கள் ஏன் இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்பதைக் கண்டறிய Human Sciences என்ற மனித விஞ்ஞானத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர் ஒருவர் முற்பட்டார். இந்த ஆய்வின் முடிவில் அவர் கூறிய உண்மைகள் இங்கே கவனிக்கப்பட வேண்டியவை. அவை: மேலைநாட்டுக் கொள்கைகள் பெண்களுக்குத் தேவையான ஒழுக்கப் பாதுகாப்பினை தர இயலவில்லை. இதனால் பெண்கள் மன அமைதி இழந்து சதாசர்வ காலமும் பீதியிலேயே வாழ்ந்திட வேண்டியதாயிருக்கின்றது. இஸ்லாம் ஒழுக்கப் பாதுகாப்பையும் ஆன்மீக விடுதலையையும் நிரந்தரமான அமைதியையும் தருகின்றது. (Islamic Voice Dec 1994) தொடர்ந்து வந்த தோல்விகளால் துவண்டு நிற்கிறது மனித இனம். இதை மீட்டு மீண்டும் முன்னேற்றத்தை நோக்கி இழுத்துச் செல்லும் வன்மையும் திண்மையும் வாய்ந்த ஒரே கொள்கை இஸ்லாம் தான். உலக அரங்கில் அறிவுத் துறையில் (விஞ்ஞானத்; துறையில்) மனித இனத்திற்கு நன்மை பயக்கும் நல்ல கண்டுபிடிப்புகளை இஸ்லாம் எதிர்ப்பதில்லை. ஏற்கின்றது, உற்சாகமூட்டி உதவிகளை அள்ளித் தந்து வளர்க்கின்றது என்பது மட்டுமல்ல மனிதனின் நல்வாழ்வுக்காகத் தான் நிறைவேற்றிட வேண்டிய கடமை எனக் கருதுகின்றது. உலகில் கொண்டு வரப்படும் எந்த விஞ்ஞான கண்டுபிடிப்பும் அது எத்துணை விந்தையானதாக இருப்பினும் அது இறைவனை மறந்ததாயோ, அவனை எதிர்க்கின்ற தொனியிலேயோ இருந்திடக்கூடாது. அறிவுத் துறையில் அதிசயங்களை நிகழ்த்துவோர் ஓர் உண்மையை மனதிற்கொண்டாக வேண்டும். இந்த உலகை படைத்தவன் ஒருவன் இருக்கின்றான். அவன் படைத்தான் அனைத்தையும் மனிதனுக்காக அந்த மனிதனைப் படைத்தான் அந்த மாண்புமிக்க இறைவனை மாட்சிமைப்படுத்தவும் நன்றி கூறவும். மானிட இனம் மானுடம் மன அமைதியோடு வாழ்ந்திட வேண்டும் என்றால் இந்த உண்மை ஒத்துக் கொள்ளப்பட்டாக வேண்டும். இந்த உண்மையை உலகில் செயல்படுத்திக் காட்டிடும் நடைமுறை வழிகாட்டுதலும் செயல் திட்டமும் அதனை செயல்படுத்திக் காட்டிய வரலாறும் இஸ்லாத்திற்கு மட்டுமே சொந்தம். ஆகவே தான் இறைமறை முஸ்லிம்களைப் பார்த்து இப்படிக் கூறுகின்றது:

(விசுவாசிகளே) அவ்வாறே (ஏற்றத் தாழ்வற்ற) நடுநிலையான சமுதாயத்தினராகவும் நாம் உங்களை ஆக்கினோம். ஆகவே நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு (வழிகாட்டக்கூடிய) சாட்சியங்களாக இருங்கள். (நம்முடைய) தூதர் உங்களுக்கு (வழிகாட்டக்கூடிய) சாட்சியாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:143)

(விசுவாசிகளே) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி மனிதர்களை) ஏவி பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசிக்கின்ற நீங்கள் தாம் மனிதர்களில் தோன்றிய சமுதாயங்களிலெல்லாம் மிக்க மேலானவர்கள். (அல்குர்ஆன் 3:110)

இந்த உன்னத பொறுப்பை உலக முஸ்லிம்கள் ஏற்றிட வேண்டிய காலம் எதிரே ஓடி வந்து கொண்டிருக்கின்றது.


முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

இஸ்லாம் கொள்கை அளவில் ஈடு இணையற்றது. அதனால் அவனியில் தானாகவே நிலைபெற்றிடும் என்ற எண்ணத்தில் முஸ்லிம்கள் செயலிழந்து நின்றிடக் கூடாது. இஸ்லாம் அதனை ஏற்றுக் கொண்டோர் வாழ்க்கையில் செயலில் மிளிர்ந்திட வேண்டும். இஸ்லாம் காட்டும் வழிகளை வையகத்தில் வழிகாட்டியாகக் கொண்டு வாழும் ஓர் சமுதாயம் இருக்கின்றது. இதைத் தங்கள் நித்திய வாழ்க்கையை விளக்கிடும் வகையில் முஸ்லிம்கள் வாழ்ந்து காட்டிட வேண்டும். வனப்பான கொள்கை என்பதற்காக எந்தக் கொள்கையையும் அடுத்தவர்கள் ஏற்றிட முன்வர மாட்டார்கள்.
அவர்கள் அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது எனப்பார்ப்பார்கள். இன்றைய உலகில் மனிதன் எதையும் கூர்ந்து கவனிப்பவனாக இருக்கின்றான். எதையும் ஆழ்ந்து சிந்திப்பவனாக இருக்கின்றான். எதையும் நடைமுறையில் கண்டாலன்றி நம்ப மாட்டான். நடைமுறை வாழ்க்கையைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் இஸ்லாத்திலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டார்கள். பல நூற்றாண்டுகள் இப்படியே வாழ்ந்து விட்டார்கள். இஸ்லாத்தை ஏற்று வாழும் முஸ்லிம்கள் எனப்படுவோர் ஏதோ ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்வோர் எனக் குறிப்பிடப்படுவதில்லை. அல்லது இன்ன காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்குப் பெயர் தான் முஸ்லிம்கள் எனக் குறிப்பிடப்படுவதுமில்லை. அது இஸ்லாம் என்ற கொள்கையை யதார்த்த வாழ்க்கையில் ஏற்று எல்லா நிலைகளிலேயும் அதை நடைமுறைப்படுத்தி வாழும் ஓர் சமுதாயத்தின் பெயர். ஆகவே இந்த சமுதாயம் எந்த அளவிற்கு இஸ்லம் சொன்ன கொள்கைகளை எடுத்து வாழ்கின்றது என்பதைக் கொண்டே அந்தக் கொள்கையின் பலமும் பலவீனமும் நிர்ணயிக்கப்படுகின்றது.

· எந்தச் சமுதாயத்தின் சிந்தனை முற்றாக இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்திருக்கின்றதோ

· எந்தச் சமுதாயத்தின் வாழ்க்கை முற்றாக இஸ்லாத்தின் வழிகாட்டுதலின் வழி அமைந்திருக்கின்றதோ

· எந்தச் சமுதாயத்தின் இங்கிதங்கள் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்திருக்கின்றதோ

· எந்தச் சமுதாயத்தில் வழக்குகளும் பிணக்குகளும் அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதரும் வழங்கியதைக் கொண்டு தீர்க்கப்படுகின்றனவோ

· எந்தச் சமுதாயத்தின் கட்டுப்பாடுகள் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்திருக்கின்றனவோ

· எந்தச் சமுதாயத்தின் இன்பமும் துன்பமும் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்திருக்கின்றனவோ

- அந்தச் சமுதாயமே இஸ்லாமிய சமுதாயம்.

இந்தப் பொன்னரிய வழிகாட்டுதலை முஸ்லிம்கள் புறக்கணித்து வாழ்ந்து வந்தால் நிச்சயமாக இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் மீது சாட்சியாக இருக்கின்றார்கள் எச்சரிக்கை. முஸ்லிம் சமுதாயம் அதனுடைய அசல் வடிவை மீண்டும் பெற வேண்டும். அப்போது மட்டுமே அது உலகை வழி நடத்தும் பொறுப்பைப் பெற முடியும். அப்போது மட்டுமே அந்தப் பொறுப்பை நிறைவேற்றிடும் தகுதியைப் பெற்றிட முடியும். பல நூற்றாண்டுகளாக தங்கள் கொள்கையிலே இருந்து தடம் மாறிப் போய் மனிதர்கள் கண்டெடுத்த வழிமுறைகளிலும் பழக்கவழக்கங்களிலும் தங்களை புதைத்துக் கொண்ட முஸ்லிம் சமுதாயத்தை மீட்க வேண்டும். தனக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத இஸ்லாத்தோடு எந்த விதத்திலேயும் தொடர்பில்லாத கொள்கைகளின் அழுத்தத்தால் தனதின் தன்மை(களை)யை இழந்து நிற்கும் இந்த முஸ்லிம் சமுதாயத்தைப் புனரமைத்துப் புடம் போட வேண்டும். இப்படி இஸ்லாத்திற்கு வெகு தூரத்தில் வாழ்ந்து கொண்டே நாங்கள் இஸ்லாமியப் பெருங்குடியினர் எனச் சொல்லிக் கொண்டிருக்கின்;றனர் முஸ்லிம்கள். இஸ்லாத்தை விட்டுப் பிரிந்து விலகி வாழ ஆரம்பித்த காலத்திலே தான் மேலைநாடுகள் விஞ்ஞானத்தில் சாகசங்களை நிகழ்த்தி உலகில் விரிந்து பரந்து உலகத் தலைமையைக் கைப்பற்றிக் கொண்டன. கிடைக்கவியலாத இந்த இணையற்ற வழிகாட்டுதலாம் இஸ்லாத்தை விட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த முஸ்லிம் சமுதாயத்தைச் சீரமைப்பதற்கும் அது உலகத் தலைமையை ஏற்பதற்கும் இடையே அகன்றதோர் இடைவெளி இருக்கின்றது. என்றாலும் முஸ்லிம்களைப் புனரமைப்பது என்பது அவசியம் நிறைவேற்றியாக வேண்டியதொரு கடமை. அதற்கான முயற்சிகளை முறையாக உடனேயே ஆரம்பித்தாக வேண்டும். இந்த முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்னால் நாம் எந்த அடிப்படைகளில் இந்தச் சீரமைப்பை ஆரம்பிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்திட வேண்டும். ஏனெனில் நாம் எடுத்த எடுப்பிலேயே தவறுகளைச் செய்திடக்கூடாது. அறிவுத் துறையில் விஞ்ஞான வானத்தில் அதிசயங்களை இஸ்லாமிய சமுதாயம் செய்து காட்டி மேலைநாடுகளை தலைகுனியச் செய்திட வேண்டும் என்றில்லை. இதை இப்போது இஸ்லாமிய சமுதாயம் செய்திடவும் முடியாது. இப்படியொரு போட்டியில் இறங்கியாக வேண்டும் என்பது அவசியமும் இலலை. ஏனெனில் இந்தப் போட்டியில் இறங்கி அதில் வென்றால் தான் உலகத் தலைமையைக் கைப்பற்றலாம் என்றொரு நிலை இங்கே இப்போது இல்லை. இப்படிச் சொல்லி விடுவதால் நாம் அறிவுத்துறையைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்திடலாம் என்றில்லை. அந்தத் துறையில் அமிழ்ந்திருக்கும் அழிவு சக்திகளை அப்புறப்படுத்தி அந்தத் துறையில் இன்னும் பல அதிசயங்களை நிகழ்த்தி மனித இனம் வாழ வழிகாட்டிட வேண்டும். எனினும் அதற்கு முன் இன்றைய உலகம் தடந்தெறியாமல் தட்டுத் தடுமாறி நிற்கின்றதே அதனை நிலைபெறச் செய்து நிலையாக வாழ வைக்கும் உன்னதமான மாண்புமிக்க பண்பாடு கலாச்சாரம் ஆன்மீக வழிகாட்டுதல் நம்மிடமிருக்கின்றன. இவற்றைச் செயல்படுத்திக் காட்டிட வேண்டியது அதைவிட அவசர அவசியம். இஸ்லாமிய சமுதாயத்தைப் புனரமைத்திடவும் ஓர் இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்திடவும் சில மைல்கற்களை இங்கே தொகுத்திருக்கின்றேன். இந்த மைல்கற்கள் ஓர் இஸ்லாமிய எழுச்சிக்குக் கட்டியங் கூறிடும். இதில் நான்கு அத்தியாயங்களை நான் எழுதிய திருக்குர்ஆனின் நிழலில்.. என்ற திருமறை விளக்கத்திலிருந்து எடுத்துத் தந்துள்ளேன்.

இந்த நான்கு அத்தியாயங்கள்

(1) புரட்சி – திருக்குர்ஆனின் வழியில்
(2) இஸ்லாமிய கோட்பாடுகளும் கலாச்சாரமும்
(3) அல்லாஹ்வின் வழியில் போர்
(4) முஸ்லிம் சமுதாயத்தின் புனரமைப்பும் அதன் இயல்புகளும்

ஏனைய அத்தியாயங்கள் ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் நான் எழுதியவை. ஓர் இஸ்லாமிய எழுச்சிக்கு இவை மைல்கற்களாக அமையும் என விழைகின்றேன். இன்னும் சில அத்தியாயங்களை இனிவரும் நாளில் இணைக்க இருக்கின்றேன்.

(இந்நூலையே காரணங்காட்டி செய்யித் குதூப் அவர்கள் தூக்கிலிடப்பட்டுவிட்டதால் இந்த அத்தியாயங்களை எழுதிட அவர்கள் உயிருடன் இருக்கவில்லை)

அல்லாஹ் இதனை நிறைவானதாக ஆக்குவானாக. அறுதியான அறிவும் வழிகாட்டுதலும் அல்லாஹ்விடமிருந்து கிடைப்பனவே.


இவன்
உங்கள் உடன் பிறப்பு
செய்யித் குதுப்.
தொடர்ந்து வரும்...

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets