புதுடெல்லி:நிலக்கரி வயல்களை ஏலம் செய்யாது அரசுத்துறை நிறுவனங்களுக்கும் தனியாருக்கும் குத்தகைக்குவிட்டு நிலக்கரி வெட்ட அனுமதி அளித்ததில் 10.67 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை கூறுவதாக பத்திரிகைகளில் வெளியான செய்தி காரணமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அமளியால் ஸ்தம்பித்தன.2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் அலையொலி அடங்கும் முன்பே புதிய மெகா ஊழல் குறித்த சி.ஏ.ஜியின் அறிக்கை மத்திய அரசை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பிறகு சபையில் தாக்கல் செய்யவிருந்த சி.ஏ.ஜி அறிக்கை பிரபல தேசிய நாளிதழில் நேற்று முன் தினம் வெளியானது. இதனைத்தொடர்ந்து எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஸ்தம்பித்தன.
வியாழக்கிழமை காலையில் மக்களவை கூடியதும், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009 வரை சுமார் 100 நிறுவனங்களுக்கு 155 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டி ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.
“இது தொடர்பாக, ஊழல் நடைபெற்றதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அது குறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும்” என்று ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர்.
ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை மக்களவைத் தலைவர் மீரா குமார் நிராகரித்தார். கேள்வி நேரம் தொடரலாம் என்று அவர் கூறியதும் அவையின் மையப் பகுதிக்கு ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் சென்று கோஷமிட்டபடி இருந்தனர்.
இதையடுத்து மக்களவையை நண்பகல் 12 மணி வரை மீரா குமார் ஒத்தி வைத்தார்.
மாநிலங்களவையில்… மாநிலங்களவையில் நிலக்கரி சுரங்க விவகாரத்தை பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், அதிமுக உறுப்பினர்கள் எழுப்பினர்.
இது குறித்து விவாதிக்க அனுமதி கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளதாக பா.ஜ.க. உறுப்பினர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். ஆனால், மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி அனுமதி மறுத்தார்.
இதையடுத்து, அவைத் தலைவரின் அனுமதியின்றி இந்தப் பிரச்னையை எழுப்ப முடியாது என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி குறிப்பிட்டார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் அதிமுக உறுப்பினர் மைத்ரேயன், “நாளிதழில் இது குறித்து தெளிவாகச் செய்தி வெளியாகியுள்ளது. அதற்கு விளக்கம் கொடுங்கள்” என்று நாளிதழைக் காட்டி வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக மற்ற அதிமுக உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர்.
“அவைக்குள் எந்த நாளிதழையும் காட்ட அனுமதிக்க முடியாது. உறுதி செய்யப்படாத தகவல்களை அவைக்குள் பேச அனுமதிக்க முடியாது” என்று ஹமீது அன்சாரி தெரிவித்தார். உறுப்பினர்களின் அமளி நீடித்ததையடுத்து காலை 11.17 மணி வரை மாநிலங்களவையை அவைத் தலைவர் ஒத்தி வைத்தார். மீண்டும் கூடியபோது இதே நிலை நீடித்ததால், நண்பகல் வரை அவையை ஹமீது அன்சாரி ஒத்தி வைத்தார்.
No comments:
Post a Comment