Facebook Twitter RSS

Wednesday, September 26, 2012

Widgets

பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முஸ்லிம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது முஸ்லிம் மக்களின் நிலைமை.

ஒரு முசுலீமின் வீட்டுக்கதவை போலீசோ அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முசுலீம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக அப்பாவி முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது இசுலாமிய மக்களின் நிலைமை.

வீடு, வேலை, கல்வி அனைத்திலும் முசுலீம் என்பதற்காகவே வாய்ப்புகள் மறுக்கப்படும் அளவுக்கு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவ்வளவு ஏன் இரண்டாம் காட்சி சினிமாவைப் பார்ப்பதற்குக்கூட ஒரு முசுலீமுக்கு சுதந்திரம் இல்லை.


ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் ஓராயிரம் முசுலீம் மக்களின் நிம்மதி குலைக்கப்படுகின்றது. குண்டு வைத்த தீவிரவாதிகளை உடனே கைதுசெய்து ரிசல்ட் காட்ட வேண்டுமென்ற இயல்பான பொது நிர்ப்பந்தம் காரணமாக எண்ணிறந்த முசுலீம் மக்கள் எந்தக் குற்றமுமிழைக்காமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடுகின்றார்கள். இது அப்படிப்பட்டவர்களின் கதை. தெகல்கா ஏடு இந்தியாவெங்கும் புலனாய்வு செய்து இந்த உண்மைகளை வெளியிட்டிருக்கின்றது. தொந்தரவில்லாமல் நிம்மதியாக வாழும் இந்து மனத்தை இந்த கண்ணீர்க்கதைகள் சற்று நேரமாவது குறுக்கீடு செய்யட்டும்.

···

அகமதாபாத் பள்ளிவாசல் ஒன்றில் ஜூமா நமாஸில் நிதானமாக அமைதியாக ஜூலை 25, 2008, வெள்ளியன்று தொழுகை நடத்தி “இந்துக்களோடு பரஸ்பரம் நேசமான வாழ்க்கை வாழவேண்டும்; அடுத்தவன் பசியோடு இருக்க நாம் மட்டும் வயிறுமுட்டச் சாப்படுவது அநீதி” என்று போதித்த ஒல்லியான இசுலாமியக் கல்விமான் அப்துல் அலீம் — அடுத்தநாள் ஜூலை 26 அகமதாபாத் குண்டுவெடிப்புக்குப் பிறகு சில நிமிசங்களுக்குள்ளாகவே போலீசால் கைது செய்யப்பட்டார். வீட்டில், தெருவில் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, தடதடவென வீட்டுக்குள்ளிருந்து அலீம் இழுத்துச் செல்லப்பட்டார்.

ஞாயிறு ஜூலை 27 அன்று டி.வி., செய்தித்தாள்களில் அப்துல் அலீம் புழுதிவாரித் தூற்றப்படுகின்றார். ரகசிய சதிவேலை செய்த தீவிரவாதி என்று வர்ணிக்கப்பட்ட அலீம் நெரிசல்மிக்க சந்தடிமிகுந்த முசுலீம் பகுதிகளில் மக்களால் மதிக்கப்பட்டவர்தான். இரண்டு மாதங்களுக்கு முன்புகூட உள்ளூர் இன்ஸ்பெக்டர் அலீமின் அமைப்பான “அஹ்பே ஹதீஸ்’ இசுலாமியப் பிரிவின் டிரஸ்டுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்; அவரது உறுப்பினர்கள் பட்டியல் தனக்கு உடனே வேண்டும் எனக் கோரியிருந்தார். அப்போதுகூட, போலீசாரின் தகவலின்படி, அலீம் ஒரு முகவரியில் டிரஸ்டு நடத்துபவர்தான்; தவிர, அலீம் சட்ட விரோதமானவரோ, ரகசிய நபரோ அல்ல.

2006 இல் அலீமின் அமைப்பு புதுடெல்லியில் நடத்திய தேசியக் கருத்தரங்கத்திற்குத் தலைமை விருந்தினராக வந்தவர் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் என்பது குறிப்பிடப்பட வேண்டிய சிறப்புச்செய்தி. குஜராத் இனப்படுகொலைக்குப் பிறகு, அலீம் ஏராளமான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். அப்போது, நிராதரவாக விடப்பட்ட 34 முசுலீம் குழந்தைகளுக்கு குவைத்தில் வசிக்கும் ஒரு பணக்காரரிடம் உதவி கோரினார். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை, கைவிடப்பட்டது. குழந்தைகளும் அந்தப் பணக்காரரிடம் அனுப்பப்படவில்லை. இதையெல்லாம் காரணம் காட்டி அலீமின் மீது தீவிரவாதக் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டது. தீவிரவாதப்பயிற்சி எடுப்பதற்காக அகமதாபாத்திலிருந்து இளைஞர்களை உ.பி.க்கு அனுப்பினார்; 2002லிருந்து தலைமறைவாகி விட்டார்” என்றெல்லாம் ஜோடித்து, அவரைப் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்ததாகச் சித்தரித்து குற்றவாளியாக்கினார்கள்.

சட்டத்துக்கு உட்பட்ட குடிமகனாய் வலம்வந்த ஒரு இசுலாமிய மதநம்பிக்கையாளரான அலீமை சட்டவிரோதமாகத் தீவிரவாதியாய்க் காட்டி இப்போது 2008 இல் கைதுசெய்து உள்ளே தள்ளிவிட்டது போலீசு. நமக்கு எழும் கேள்வி: முன்பு அலீமின் டெல்லி கருத்தரங்கில் கலந்து கொண்ட சிவராஜ் பாட்டீலை விசாரித்து விட்டார்களா?

நம்முள் எழும் வேதனை: அலீம் சிறையில் வாடுகின்றார்; அலீமின் குடும்பமோ அடுத்தவேளைச் சோற்றுக்கே பரிதவிக்கின்றது. அலீம் இருந்த வரை கடைச்சிறுவன் உதவியோடு பழைய இரும்புக் கடை ஒன்றை நடத்தி வந்தார்; இப்போது சிறுவன் மட்டுமே கடையைக் கவனிக்கின்றான்; அதிக வருவாயில்லை. ஒவ்வொரு மாதமும் வீட்டுவாடகைக்கு அலீமின் மனைவி ரூ. 2500 தேற்ற வேண்டும்; 5 குழந்தைகளுக்குச் சோறு போட்டுக் காப்பாற்ற வேண்டும்.

···

ஐதராபாத்தில் மவுலானா மொகம்மது நசீருதீன் மற்றும் அவரது இரு மகன்களான யாசிர், நசீர் ஆகிய மூவரையும் “தீவிரவாதிகளின் குடும்பம்’ என்று போலீஸ் அழைத்தது. நசீருதீன் முப்பதாண்டுகளுக்கு முன்னால் தெருவோரக் கடைகளில் தான் கற்ற மோட்டார்பைக் ரிப்பேர், வேலைத்திறன், நண்பர்களிடம் வாங்கிய கடன் இவற்றை வைத்து என்ஜினீயரிங் ஒர்க்ஷாப் வைத்திருந்தார்.

நசீருதீன் இசுலாமியக் கல்விமான். பாபர் மசூதி இடிப்பு, குஜராத் 2002 முசுலீம் படுகொலைகள் இரண்டிலும் அரசை வெட்டவெளிச்சமாக விமரிசித்தவர்; “குஜராத்தில் கலவரம் செய்தார்; 2003 மார்ச்சில் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பான்டியாவைக் கொலை செய்த சதியில் ஈடுபட்டார்” என்ற சொல்லி 4 ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டார்.

செப் 2001ல் “சிமி’ தடை செய்யப்பட்ட சமயத்தில் யாசிர் இதில் உறுப்பினர். பிறகு பல பொய்வழக்குகளில் அவர் சேர்க்கப்பட்டபோதும் “சிமி’ உறுப்பினர் என்பதிலிருந்து தொடங்கியே வழக்கு சோடித்தது போலீசு. முதலில் 2001இல் “சிமி’ தடைசெய்யப்பட்டபோது கைது; கைதான மறுநாளே பிணை கிடைத்தது; ஆனால் “அரசை எதிர்த்துப் பேசினார்’ என்று அடுத்தநாளே மறுபடியும் கைது, 29 நாள் சிறை. இப்போது ஏழாண்டுகளாகி விட்டன. ஆனாலும் எந்த வழக்குமே நடக்கவில்லை.

அண்மையில் ஜூலை 15, 2008 இல் மறுபடி கைது பெங்களூருவைக் குலுக்கிய குண்டு வெடிப்புக்கள் ஜூலை 25இல் நடந்தபோது, குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளைக் கர்நாடகாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தவர் என்று பின்னால் வந்த வழக்குடன் பிணைக்கப்பட்டார். ஆதாரம் விசாரணையில் யாசிரே கொடுத்த வாக்குமூலம் என்றார் கமிஷனர் பிரசன்னராவ். போலீசு சொன்னது பொய் என்று தனது தாய் உதாய் பாத்திமா மூலம் வெளி உலகுக்குத் தெரிவித்தார் யாசிர். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்துச் சித்திரவதை செய்து கையெழுத்து வாங்கிவிட்டார்கள் என்று அதனது குரூரத்தை அம்பலமாக்கினார் பாத்திமா.

யாசிரின் தம்பி நசீர் இருபதே வயது நிரம்பியவர். ஜனவரி 11, 2008 இல் கர்நாடகாவில் நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மறித்து நிறுத்திக் கைதுசெய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளைத் திருடி ஓட்டுவதாகவும், இருவரும் கைவசம் சிறுகத்தி வைத்திருப்பதாகவும், “அரசுக்கெதிராகப் போர்செய்ய இருப்பதாகவும்’, தாங்கள் “சிமி’ உறுப்பினர்கள் என வாக்குமூலம் கொடுத்ததாகவும் போலீசு கூறியது. ஆனால் 90 நாட்களுக்குப் பிறகும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், நசீரின் வழக்குரைஞர் பிணை பெற்றார். ஆனால் உடனே அவர் மீது சதிவழக்கொன்றைப் போட்டு சிறையிலிருந்து வெளியே வராதவாறு போலீசு செய்து விட்டது.

அக், 2004 இல் மவுலானா நசீருதீன் கைது செய்யப்பட்டபோது அதை எதிர்த்து மக்கள் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஐதராபாத் வந்திருந்த குஜராத் போலீசு அதிகாரி நரேந்திர அமீன் தனது துப்பாக்கியால் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுவிட்டார். இறந்தவர் உடலை வைத்துக்கொண்டு, அமீன் மீது வழக்குப் போட்டால்தான் நகருவோம் என்று மக்கள் உறுதியாக அங்கேயே மறியல் செய்தனர். போலீசு மக்கள் மீது ஒரு வழக்கும் அமீன் மீது ஒரு வழக்குமாகப் பதிவுசெய்தது. அமீன் கைது செய்யப்படவில்லை. பிறகு அமீன் மீதான வழக்கு ஒர் அங்குலம் கூட நகரவில்லை. அன்று மவுலானாவுடன் அமீன் அகமதாபாத்துக்குப் பறந்தான்; அவனுடைய உடையில் சிறு கசங்கல் கூட இல்லை. அவனுக்கு எதிரான வழக்கு எப்போதோ செத்துப் போய் விட்டது.

மவுலானா நசீருதீன் மற்றும் இரு மகன்களும் கொடுஞ்சிறையில். அந்த மகன்களைப்பெற்ற தாய் கதறுகின்றாள்: “எங்கள் குடும்பத்திலிருந்து மூன்று பேர் மீது பொய்வழக்கு. என்னையும் சேர்த்துச் சிறையில் தள்ளட்டும். பிறகு, எங்களை ஒன்றாகவே சேர்த்து சுட்டுக் கொன்று விடட்டும், வசதியாக இருக்கும்.”

···

அப்துல் முபீன், உத்திரப் பிரதேச மாநிலம் பக்வா கிராமம். இவர் மீது ஒன்றன் பின் ஒன்றாகப் பொய்யாக 4 கிரிமினல் தீவிரவாத வழக்குகள். முதல் வழக்கு செப் 2000 இல் போடப்பட்டது. பிறகு அடுத்தடுத்து வழக்குகள். ஒவ்வொரு வழக்கையும் அது பொய் என்று நிரூபிக்க இரண்டு, மூன்று ஆண்டுகள் எடுத்தன. நான்காவது வழக்கு மட்டுமே எட்டு நீண்ட ஆண்டுகளாக நடந்தது. முதல் இரு வழக்குகளிலுமே அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது. ஆகஸ்டு 6, 2008 இல்தான் முபீன் விடுதலை ஆனார்.

மேலே சொன்ன நான்கு வழக்குகளிலுமே “இவர் சிமி உறுப்பினர்’ என்று பொய் சொல்லப்பட்டது எப்படியாவது “சிமி’ யைத் தடைசெய்ய வேண்டும் என்பதற்காக. சாட்சி: அப்துல் முபீன் போலீசில் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட வாக்குமூலம்.

முதல் வழக்கில் முபீன் சிறை சென்றபோது அவரது கடைசிக் குழந்தையான மகள் ஜைனாவுக்கு வயது ஆறேமாதம். இப்போது 2008 இல் முபீன் விடுதலையாகி வந்து பார்க்கும்போது அவளுக்கு அப்பாவைப் பார்க்க ஒரே வெட்கம். இந்த முபீன் விடுதலையான நான்காம் நாள், “இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடு ஆகஸ்டு 10, 2008 அன்று சிமியைப் பற்றி முழுப்பக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. முபீன் சிமியின் முதல் தீவிரவாதி என்று எழுதியது; குற்றம் நிரூபிக்கப்படாத போதும் அவர்தான் முதல் தீவிரவாதி என்று எழுத இந்துஸ்தான் டைம்ஸ் வெட்கப்படவில்லை. முபீனுக்கும் “சிமி’க்கும் ஜனநாயக மறுப்பு, சித்திரவதைகள், பலப்பல பொய் வழக்குகள்; “இந்துஸ்தான் டைம்ஸூ’க்கோ பொய்களை இரைத்துக் கதைகள் விற்க வானளாவிய உரிமை.

···

அபுல் பஷார் குவாஸ்மி உ.பி.யைச் சேர்ந்த இசுலாமியக் கல்விமான். 23 வயதே நிரம்பிய இளைஞர். ஒராண்டுக்கு முன் தனது திருமணத்தை முடித்திருந்த குவாஸ்மி தம்பிக்கும் திருமணம் செய்து வைக்க அங்கங்கே சொல்லி வைத்திருந்தார். இதை மோப்பம் பிடித்த போலீசு தரப்பு கடந்த ஆகஸ்டில் பெண்வீட்டார் என்று சொல்லிக் கொண்டு குவாஸ்மியின் வீட்டுக்குள்ளே நுழைந்தது. வெளியே அவர்கள் மாருதி வேனை நிறுத்தியிருந்தார்கள். உள்ளே தடதடவென நுழைந்த இரண்டு போலீசோ குவாஸ்மியைத் தரதரவென்று இழுத்துச் சென்று மாருதி வேனில் திணித்துக் கொண்டு பறந்து போனார்கள்.

இரண்டு நாள் கழித்து, குஜராத் போலீசு அதிகாரி பி.சி. பாண்டே அகமதாபாத் குண்டு வெடிப்பைத் திட்டமிட்டவன் குவாஸ்மிதான் என்று அறிவித்தான். “பாண்டே’ கேள்விப்பட்ட பெயராகத் தெரிகின்றதா? ஆமாம், குஜராத்தில் 2000 அப்பாவி முசுலீம்களின் படுகொலைகளில் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங் தள் மூன்றோடும் தீவிரமாக இறங்கி நரவேட்டையாடியவன்தான் பாண்டே. இதற்காக அவன் பதவி உயர்வும் வாங்கிக் கொண்டான்.

ஆனால் குவாஸ்மி ஒரு அப்பாவி; கிழக்கு உ.பி.யிலுள்ள அசாம்கர் நகரத்தின் அருகே ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த கூச்ச சுபாவமுள்ள அப்பாவி. போலீசோ அவனைச் “சிமி’யின் தலைவன், குஜராத் படுகொலைகளுக்குப் பழிவாங்கத் துடித்த “புனிதப் போராளி’ (ஜிகாதி) என்று விவரித்தது. ஊடகங்கள் தங்களது பங்குக்கு குவாஸ்மி இந்தியா முழுக்கப் பயணம்செய்து தீவிரவாத வலைப்பின்னலை உருவாக்கியவன் என்றும், கேரளத்தில் செயல் வீரர்களை வடிவமைத்தவன் என்றும் கலர்கலராகச் செய்திகளை விற்றன.

ஆகஸ்டு 14இல் குவாஸ்மியை இழுத்துச் சென்ற போலீசு இரண்டுநாள் கழித்து மறுபடியும் அவரது வீட்டுக்கு வந்தது. அவரது தந்தை, தம்பி, தங்கைகளை வெளியே பிடித்துத் தள்ளிவிட்டு வீட்டைச் சல்லடை போட்டுச் சலித்து சோதனை போட்டது. வீட்டிலிருந்த மூட்டைப் பூச்சி மருந்து மற்றும் ஒரு மெட்டல் கிளீனிங் பிரஷ்ஷைக் கவனமாகப் பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றது. அபு பக்கீர் பயத்தோடு கேட்டார்: “இவற்றை என் பையன் குண்டு தயாரிக்கத்தான் பயன்படுத்தினான் என்று போலீசு சொல்லி விடுவார்களோ?”

குவாஸ்மி “சிமி’ உறுப்பினர் அல்ல; இசுலாமிய இறையியல் முடித்துள்ள, வழக்குகள் ஏதுமில்லாத எளிய இளைஞர். இவரைப் போலீசு கடத்திச் சென்றது என்று உள்ளூர் மக்கள் போலீசிடமே முறையிட்டார்கள். அக்குடும்பத்துக்கே இப்போது ஊரார்தான் சோறு போடுகின்றார்கள்.

தந்தை அபுபக்கீர் சொல்கிறார்: “நாங்கள் செய்த ஒரே தவறு முசுலீம்களாக இருப்பதுதான்.”

நன்றி: வினவு !

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets