Facebook Twitter RSS

Wednesday, September 26, 2012

Widgets

தமீம் அன்சாரி: ஊடகங்கள்+போலீசு உருவாக்கிய தீவிரவாதி!

 
ஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (34) கடந்த செப்டம்பர் 16 அன்று திருச்சி விமான நிலையத்தில்  கைது செய்யப்படுகிறார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவ ரகசியங்களைக் கடத்த முயன்றபோது அவரை கைது செய்ததாக‌ க்யூ பிரிவு போலீசார் செய்தி பரப்பினர். ஆதாரம் அவர் வைத்திருந்த செல்போனில் உள்ள குன்னூர் ராணுவ பயிற்சிக் கல்லூரி மற்றும் அணுமின் நிலையங்களின் புகைப்படங்கள். இணையத்தை திறந்தால் எளிதாக கிடைக்கும் இப்படங்களை ஒரு ஆள் வைத்து புகைப்படம் எடுக்குமளவுக்கு ஐஎஸ்ஐ என்னமோ  அர்ஜூன், விஜயகாந்த் படங்களில் வரும் காமடி பீசாக காட்டுகின்றனர் தமிழக போலீசார்.

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் தமீம் அன்சாரி அங்கு பாக். உளவுப்பிரிவில் உள்ள சாஷி, காஜி என்பவர்களை சந்தித்தாராம். கடந்த 8 மாதங்களில் அன்சாரி இலங்கைக்கு 5 முறை சென்றாராம்.  தமீம் அன்சாரிக்கு சாஜி தர வேண்டிய வியாபார பாக்கி 27 இலட்ச ரூபாய். அதாவது க்யூ பிராஞ்ச் மொழியில் சொல்வதென்றால் உளவு பார்ப்பதற்கான கைக்கூலி.
முதல் தகவல் அறிக்கையில் சாஜி பெயரும், இலங்கையிலுள்ள பாக். தூதரகத்திலுள்ள சில அதிகாரிகளின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ,,அவர்களில் யாரும் பாகிஸ்தான் உளவுப் பிரிவில் இருப்பவர்களா? என எனக்குத் தெரியாது.,, என்கிறார் தமீம் அன்சாரி. அவர்களுடம் வியாபாரம் செய்வதைத் தாண்டி அவர்களுடைய சொந்த விருப்பு வெறுப்பு தனக்கு எப்படித் தெரியும் என்கிறார் அன்சாரி.  இந்த லட்சணத்தில் கடந்த 8 மாதமாக அவரது செல்போன் பேச்சுக்களை வேறு உளவுப் பிரிவினர் கண்காணித்துதான் பொறி வைத்துப் பிடித்தார்களாம்.
அன்சாரி மீது இந்திய அரசாங்க ரகசிய சட்டம் 3,4,9 பிரிவின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் 120பி இன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் உறுப்பினராக உள்ள அன்சாரி முன்னாள் தஞ்சை மாவட்ட இந்திய மாணவர் சங்க செயலர். ஆனாலும் சிபிஎம் இக்கைது பற்றி வாய் திறக்கவேயில்லை. அதனால்தான் விமான நிலையத்தில் கைதுசெய்து விட்டு திருச்சி டோல்கேட்டில் வைத்து பிடித்ததாக முதல் தகவல் அறிக்கையில் போலீசாரால் துணிந்து பொய் சொல்லுவதோடு அவருக்கு தீவிரவாதி பட்டமும் கட்ட  முடிகிறது. சிபிஎம்மும் பொதுவான இந்து உளவியலின் செல்வாக்கில் இருப்பதால் அன்சாரிக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.
புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள அன்சாரி வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை கொள்முதல் செய்ய குன்னூருக்கு சென்றபோது வெலிங்கடன் ராணுவக் கல்லூரியையும் புகைப்படம் எடுத்தாராம். தஞ்சைக்கருகில் உள்ள மல்லிப்பட்டிணம் கடற்படை தளத்தை கூட இதுவரை அவர் பார்த்ததில்லையாம். ஆனால் அவர் அங்கேயும் சென்று படம் எடுத்தாகக் கூறுகிறது போலீசு. எதிர்காலத்தில் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்பதும் அன்சாரியின் ஆசையாம். அதற்கு செல்லுமிடங்களெல்லாம் புகைப்படம் எடுக்கும் வழக்கம் உடையவர் அவர்.
குன்னூரில் இந்திய இராணுவம் இருக்கிறது, பயிற்சிக் கல்லூரிகள் இருக்கிறது என்பது உலகத்திற்கே தெரிந்த விசயம். அதுவும் இலங்கை வீரர்கள் எல்லாம் வந்து பயிற்சி செய்யும் இடம். ஒரு வேளை இலங்கை வீரர்கள் மூலம் குன்னூர் தகவல்கள் பாகிஸ்தான் சென்றால் இந்தியா என்ன செய்யும்? எனில் அப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதோடுதான் அங்கு இலங்கை வீரர்கள் வந்து போகிறார்கள் என்றால் அதில் இரகசியம் ஏதுமிருக்க வாய்ப்பில்லை.
இந்தியாவின் மூலை முடுக்குகளையெல்லாம் அமெரிக்க விண்கோள்கள் வேவு பார்க்கும் போது அமெரிக்காவிடம் சொல்லி இந்திய இராணுவ இரகசியங்களை பாக் வாங்கிவிடலாம். இல்லையெனில் அப்படி ஒரு விண்கோளை விட்டால் முடிந்தது விசயம். இதெல்லாம் முடியாது என்று ஒரு திருச்சி வெங்காய வியாபாரியை வைத்துத்தான் ஐ.எஸ்.ஐ செயல்படுகிறது என்றால் சிரிப்பாக இல்லை?
ஏற்கெனவே முசுலீம்கள் பற்றிய சமூகத்தின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் புரிதலுக்கு ஏற்ப ஊடகங்கள் தமீம் அன்சாரியை முக்கியமான தீவிரவாதியாக ஓரிரவில் சித்தரித்து விட்டன• போலீசும், ஆளும் வ‌ர்க்க‌மும் நாடு முழுக்க‌ முசுலீம்க‌ளை தீவிர‌வாதிக‌ளாக‌ காட்டுவ‌தில் முன்னிற்கின்ற‌ன• காசுமீரில்  சாதார‌ண‌ அப்பாவிக‌ளை இந்திய‌ ராணுவ‌ம் தீவிர‌வாதிக‌ளாக‌ சித்த‌ரிக்கின்ற‌து. அதுபோல‌வே நாடு முழுதும் சித்த‌ரிப்ப‌த‌ன் ஒரு ப‌குதிதான் அன்சாரி தீவிர‌வாதி ஆன‌தும்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets