கொக்ராஜர்:பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கேள்விக் கணைகளால் துளைத்த போதும் தடுமாறாத மத்திய அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் அஸ்ஸாமில் அகதிகள் முகாமில் இரண்டு முஸ்லிம் இளம் பெண்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறினார்.
எதிர் தரப்பினரின் எந்த கேள்விகளுக்கும், புத்திசாலித்தனமாக பதிலளிக்கும் சிதம்பரத்தை பதினொன்றாவது வகுப்பு பயிலும் உமியா காத்தூனும், இல்லத்தரசியான தில்ரூபா ஹுஸைனும் உள்ளத்தில் உறைக்கச் செய்யும் கேள்விகளுடன் எதிர்கொண்டனர்.
“அகதிகள் முகாமில் உண்ண உணவும், உடுக்கத் துணியும் இல்லை என்று புகார் கூற நாங்கள் வரவில்லை. இந்த நாட்டில் நாங்கள் வாழ முடியுமா? என்பதை கேட்கத்தான் வந்திருக்கிறோம்” என ப.சிதம்பரத்தை நேருக்கு நேராக நோக்கி கூறினார்கள் அப்பெண்கள்.
“நாங்கள் முஸ்லிம் என்ற காரணத்தால் இந்த நாட்டில் வாழக்கூடாது என்றா கூறுகின்றீர்கள் சார்?” என ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பிய உமியா காத்தூன் – இதுவரை ப.சிதம்பரத்திடம் எந்த முஸ்லிம் தலைவரும் இவ்வளவு நேரம் பேசாத அளவுக்கு தனது ஆதங்கத்தை கொட்டினார்.
“பிறந்து வளர்ந்த இந்நாட்டில் வாழ முடியாத சூழலில் இனி நாங்கள் எங்கு செல்வோம்” என உமியா கேள்வி எழுப்பினார்.
உடனே ப.சிதம்பரம், “நீங்கள் எதனைகூற விரும்புகின்றீர்களோ அனைத்தையும் கூறுங்கள். அதனை கேட்கத்தான் நான் வந்திருக்கிறேன்” என தெரிவித்தவுடன் கலவரம் குறித்த விபரங்களை விளக்க துவங்கினார் உமியா.
“கலவரம் துவங்கிய நாளில் இருந்து 6 தினங்களாக ஒரு கிராமம் முழுவதும் கதவுகளை மூடிக்கொண்டு வீட்டிற்குள் இருந்தோம். ஏழாவது நாள் வீடுகளில் இருந்து வெளியே வந்து ஓரிடத்தில் ஒன்று கூடியபொழுது போடோக்கள் கூட்டமாக வந்து தாக்கினர். கிராமத்தில் காவலுக்கு நின்றிருந்த போலீசார் போடோக்களுக்கு பயந்து ஓடிவிட்டனர். கிராமங்களை விட்டு ஓடிய மக்களால் கொக்ராஜரில் நள்ளிரவில் சாலைகள் நிறைந்திருந்தன. நள்ளிரவு 12 மணிக்கு வீடுகளை விட்டு வெளியே வந்தவர்கள் அதிகாலை 3 மணிக்கு கொக்ராஜர் காவல் நிலையம் சென்று தங்களை பாதுகாக்க கோரிக்கை விடுத்த பொழுது தங்களால் எதுவும் செய்ய இயலாது என கூறி போலீஸ் மறுத்துவிட்டது. கூட்டத்தில் இருந்து ஒரு இளம்பெண் துணை போலீஸ் கமிஷனரின் காலில் விழுந்தபொழுது லத்தியால் அவரை துணை கமிஷனர் அடித்தார். 50க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால், 200க்கும் 300க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்” என உமியா கூறியபொழுது சிதம்பரம் அதனை மறுத்தார்.
“கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது உண்மைதான். ஆனால், நீங்கள் கூறும் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் கொல்லப்படவில்லை” என சிதம்பரம் தெரிவித்தார்.
“துப்பாக்கியால் சுட்டும், வெட்டி வீழ்த்தியும் வயல்களிலும், கிணறுகளிலும், செப்டிக் டாங்குகளிலும் புதைத்தால் எவ்வாறு பலியானவர்களின் உண்மையான புள்ளிவிபரம் தெரியவரும்” என கேள்வி எழுப்பிய உமியா அழத் துவங்கினார்.
அப்பொழுது சிதம்பரம், “கொல்லப்பட்ட அனைவரின் உடல்களையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கிறோம்” என ஆறுதல் கூறிய பொழுது,
“கிராமங்களுக்கு எங்களை திரும்ப செல்ல அனுமதிக்காமல் எவ்வாறு இறந்து போனவர்களின் உடல்களை கண்டுபிடிக்க முடியும்” என உமியா கேள்வி எழுப்பினார்.
“மரணித்தவர்களின் உடல்களை வாங்க முடியாத அளவுக்கு முஸ்லிம்கள் இந்நாட்டில் அந்நியர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இனி நாங்கள் எங்கே செல்வோம்?” என கேட்ட உமியாவும், அருகில் இருந்த தில்ரூபாவும் கதறி அழுத பொழுது அவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் தெரியாமல் சிதம்பரம் திணறினார்.
சிதம்பரத்துடன் வந்த போடோ தலைவரும், போடோ டெரிட்டோரியல் கவுன்சில் தலைவனுமான ஹக்ராமா மொஹிலரி சூழல் தங்களுக்கு எதிராக மாறுவதை கண்டு உமியா பேசும் பொழுது அடிக்கடி குறுக்கீடுச் செய்தார்.
அப்பொழுது உமியா, “போடோலாண்ட் டெரிட்டோரியல் கவுன்சில் தலைவராக இருந்தபோதும் தங்களுடைய போடோ, தங்களுடைய போடோ என கூறுகிறார்” என குற்றம் சாட்டினார்.
“கவுன்சிலின் எல்லைக்குள் வாழும் போடோக்கள் அல்லாத முஸ்லிம்களும், இதர இனத்தவர்களும் போடோ டெரிட்டோரியல் கவுன்சில் தலைவரின் எண்ணப்படி அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டியவர்கள். ஆகையால்தான், வெளிநாட்டினர் என அழைத்து முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை இவரும், போடோக்களும் அரங்கேற்றியுள்ளனர்” என்று சிதம்பரத்திடம் ஆவேசமாக கூறினார்.
இதனைக் கேட்டு கோபமடைந்த போடோ தலைவர், உமியாவை பைத்தியக்காரி என அழைத்தார். இதனைக் கேட்ட ப.சிதம்பரமும், இதர அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தாலும் எதுவும் கூறாமல் மெளனம் சாதித்தனர். நிலைமை மோசமாவதை கண்ட இதர தலைவர்கள் போடோ தலைவனை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். போகும் பொழுது, “அவளை நம்பாதீர்கள்!அவள் கூறுவது பொய்!” என சத்தம் போட்டவாறு சென்றார் ஹக்ராமா.
ஆனால், தாங்கள் பேசுவதை தொடர்ந்து கேட்குமாறு உமியாவும், தில்ரூபாவும் கோரிக்கை விடுத்தபொழுது சிதம்பரம் அவர்கள் இருவரும் பேசுவதற்கு அனுமதி அளித்தார்.
No comments:
Post a Comment