ஜெருசலம்:மார்ச் 30 ஃபலஸ்தீன் பூமி தினம் கடைப்பிடிக்கப்படுவதன் ஒரு பகுதியாக 82 நாடுகளைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் குளோபல் ஜெருசலம் மார்ச்சில்(சர்வதேச ஜெருசலம் பேரணி) பங்கேற்றனர்.
ஃபலஸ்தீனின் பல்வேறு பகுதிகளிலும், இஸ்ரேலிலும், அண்டை நாடுகளிலும் இப்பேரணி நடந்தது. இப்பகுதிகளில் நடந்த பேரணிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது பல இடங்களிலும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. அமைதியாக நடைபெற்ற இப்பேரணிகளில் இஸ்ரேலிய போலீஸ் கண்ணீர் வாயுக்களையும், க்ரேனேடுகளையும் பிரயோகித்தது.
ஜெருசலத்தின் சமீப பிரதேசமான பலந்தியா செக்போஸ்டில் நடந்த பேரணியில் இஸ்ரேல் கண்ணீர் வாயுவை பிரயோகித்ததில் 121 பேருக்கு காயம் ஏற்பட்டது. பைத் கானூன் நகரத்தில் நடந்த தாக்குதலில் ஒரு ஃபலஸ்தீனி கொல்லப்பட்டார். பெத்லஹம், காஸ்ஸா, மேற்கு கரையின் பல்வேறு நகரங்கள், சிரியா, ஜோர்டான், எகிப்து, லெபனான் ஆகிய இடங்களில் பேரணிகள் நடந்தன. பேரணியை எதிர்கொள்ள இஸ்ரேல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. எல்லை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கண்ணி வெடிகளையும் புதைத்திருந்தது.
கிழக்கு ஜெருசலமில் நடந்த பேரணியில் கலந்துகொண்டோர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஃபலஸ்தீன் எம்.பி முஸ்தஃபா பர்கூதி உள்பட பலர் காயமடைந்தனர். மேற்குகரையை சுற்றிலும் பாதுகாப்பு வளையத்தை ஏற்பாடுச் செய்திருந்தது இஸ்ரேல்.
40 வயதுக்கு கீழே உள்ளவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடத்த அனுமதி வழங்கவில்லை. வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு பல இடங்களிலும் பேரணி துவங்கியது.
கலீலியில் ஃபலஸ்தீன் மக்களின் நிலங்களை கைப்பற்றிய நடவடிக்கைக்கு எதிராக 1976-ஆம் ஆண்டு அமைதியாக பேரணி நடத்தியவர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு நடத்தி 6 பேரை படுகொலைச் செய்தது. இச்சம்பவத்தை நினைவுக்கூறும் விதமாக ஒவ்வொரு வருடமும் மார்ச் 30-ஆம் தேதி ஃபலஸ்தீன் பூமி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment