Facebook Twitter RSS

Monday, January 16, 2012

Widgets

10 வயது சிறுமியின் கற்பை காப்பாற்றிய அல்குர்ஆன் - சவூதியில் சம்பவம்


''இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்குர்ஆன் 2:2)

சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது. இங்கு அதிகமாக திருமணங்கள் பெரும் ஹால்களில் வாடகைக்கு பிடித்து நடத்தப்படும். அது போல் ஒரு திருமண வைபவத்தில் பெண்கள் பகுதிக்கு ஒரு சவுதி காமுகன் வந்துள்ளான். 10 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தனியாக நிற்கவும் ‘என் காரில் மாப்பிள்ளைக்கு அன்பளிப்பு உள்ளது. எனது கார் வரை வர முடியுமா பெண்ணே!’ என்று அவன் கேட்டுள்ளான்.
திருமணத்துக்கு வந்த உறவினர் என்று நினைத்து அவனுடன் உதவி செய்ய அந்த பெண் சென்றுள்ளாள். வாகனத்துக்கு பக்கத்தில் சென்றவுடன் ‘காரில் ஏறு! பரிசுப் பொருள் வீட்டில் இருக்கிறது. எடுத்துக் கொண்டு வந்து விடலாம்’ என்று சொல்லிக் கொண்டே பின் சீட்டில் அந்த பெண்ணை தள்ளி, வண்டியையும் எடுத்து விட்டான். சாப்பாடு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்ததால் இங்கு நடந்த இந்த களேபரங்கள் பெண்ணின் குடும்பத்தின் கவனத்துக்கு வரவில்லை.
வெளியேற முயற்ச்சித்த அந்த பெண்ணை ‘சத்தம் போடாதே!’ என்று மிரட்டவும் செய்துள்ளான். ‘உனது தகப்பனாரை எனக்குத் தெரியும். நான் போனில் பேசிக் கொள்கிறேன்’ என்று சொல்லவும் சற்று அமைதியாகியிருக்கிறாள் அந்த பெண். அவனின் வீடும் வருகிறது. வீட்டினுள் வந்த அவன் அந்த பெண்ணை அழைத்து சென்று ஒரு அறையில் பூட்டியிருக்கிறான். 10 வயதே ஆன அந்த பெண் என்ன நடக்கிறது என்பதை யூகிப்பதற்குள் எல்லாம் நடந்திருக்கிறது.

பிறகு ஹாலில் அமர்ந்த அவன் சீசா குடிக்க ஆரம்பித்துள்ளான். அரபுகள் நீண்ட குழாய் மூலமாக புகையை இழுத்து விடுவது ஒரு வழக்கம். இதற்கு சீசா குடித்தல் என்று சொல்வார்கள். படங்களில் கூட பார்த்திருக்கலாம். சிலர் இதில் போதை மருந்துகளையும் கலந்து குடிப்பது உண்டு. அரசுக்கு தெரிந்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்.

வீட்டில் யாரும் இல்லாததும் அவனுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது. சீசா குடித்து முடிந்தவுடன் அந்த பெண்ணின் அருகே நெருங்கி வந்துள்ளான். நடக்கப் போவதை உணர்ந்து கொண்ட அந்த பெண் தனக்கு தெரிந்த குர்ஆன் வசனங்களை மளமளவென்று வேகமாக ஓத ஆரம்பிக்கிறாள். இதனால் கோபம் உண்டான அவன் ‘குர்ஆன் ஓதுவதை நிறுத்து’ என்று கூறி முகத்தில் அடித்திருக்கிறான். இதே போல் பலமுறை முயற்சி செய்தும் ஒவ்வொரு முறையும் அந்த பெண் குர்ஆனை ஓதுவதும் அவன் அடிப்பதுமாக இரவு முழுதும் நடந்திருக்கிறது.

"Every time he came closer to me, I started reciting Quran and he would withdraw" she said.

அவனும் அரபி மொழி பேசுபவன். அந்த வசனங்கள் என்ன சொல்கிறது என்பது விளங்கியதால் அந்த பெண்ணிடம் அவன் நெருங்க மனது இடம் தரவில்லை. இதுபோல் பலமுறை முயற்ச்சித்தும் முடியாமல் போக முடிவில் தனது தவறை உணருகிறான். காலையும் நெருங்கியது. அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு எங்கு பிடித்தானோ அந்த இடத்திலேயே அந்த பெண்ணை இறக்கி விட்டு தலைமறைவாகியிருக்கிறான்.

திருமண மண்டபத்தில் காலை நேரமாகையால் யாரும் இல்லை. பிறகு வழியில் சென்ற ஒருவரை நிறுத்தி தனது தகப்பனின் செல் நம்பரை அந்த பெண் கொடுத்துள்ளாள். அந்த நல்ல மனிதர் அந்த பெண்ணின் தகப்பனோடு பேசி அவரை வரவழைத்தார். தனது மகளை கண்டவுடன் தந்தை அழுதது நெகிழ்ச்சியாக இருந்தது.

-நன்றி: அரப் நியூஸ் -

இங்கு நாம் ஒன்றை யோசிக்க வேண்டும். நமது நாட்டை விட இது போன்ற தவறுகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கக் கூடிய நாடுதான் சவுதி. இருந்தும் துணிந்து ஒரு பெண்ணை கடத்தி சென்றவனை சமயோஜிதமாக குர்ஆன் வசனங்களை கொண்டு அவனை ஒரு வழிக்கு கொண்டு வந்துள்ளாள் அந்த பெண். இத்தகைய மன உறுதி ஒரு சில பேருக்குத்தான் வரும். அது இறைவனின் வார்த்தை என்பதை இருவரும் உணர்ந்ததால்தான் ஒரு பெரும் தவறு நடக்கவிருந்தது தவிர்க்கப்பட்டது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

இந்த சம்பவத்தை படித்த போது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னொரு காலத்தில் நடந்த ஒரு சமபவத்தை சொன்னது உடன் ஞாபகம் வந்தது. அதையும் பகிர்ந்துகொள்கிறேன்.

2272. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:'' உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் ‘நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!" என்று தமக்குள் கூறினர்.

அவர்களில் ஒருவர் ‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!

மற்றொருவர், ‘இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன்.

அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, ‘முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!" என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமேவிட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை விலகியது: ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.

மூன்றாமவர், ‘இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!" என்று கூறினார்.

‘நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!" என்று கூறினேன். அதற்கவர் ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!" என்றார். ‘நான் உம்மை கேலி செய்யவில்லை!" என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். ‘இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!" என அப்துல்லாஹ்வின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets