Facebook Twitter RSS

Wednesday, March 13, 2013

Widgets

சீர்திருத்தம் தேவை !


இன்றைய காலத்துக்கு மிகவும் தேவையான கட்டுரை
சீர்திருத்தம் செய்யுங்கள்!
இஹ்யா உலூமித்தீனிலிருந்து...

[ ஒரு காலம் வரும். அப்போதைய மக்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? சீர்திருத்தக்கூடிய மனிதனைவிட அவர்கள் செத்த கழுதையை மேலானது என்று கருதுவார்கள்.
''தவறு நடப்பதை கண்டு உங்கள் மனம் புண்படுகிறதா? அப்படியானால் அந்த கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்பதே பொருள். உங்களை அந்த கூட்டத்தில் ஒருவராகக் கணக்கிட முடியாது. அதே சமயம் தவறு நடக்கும் இடத்தில் இல்லாத ஒருவன் அந்த தவறை மனத்தால் விரும்பி வரவேற்றால், அவன் அந்த கூட்டத்தில் ஒருவனாகக் கணிக்கப்படுகிறான்!'
அளவுக்கு மீறிய அட்டூழியம் நடந்த ஓர் ஊரை அழிக்குமாறு இறைவன் வானவர் ஒருவருக்கு செய்தியனுப்பினான். அந்த ஊரில் ஒரு நல்ல மனிதர் இருந்தார். அவரைச் சுட்டிக்காட்டி வானவர் இறைவனிடம் ''அவன் நல்ல மனிதன்; அவன் எந்த தவறும் செய்யவில்லையே!'' என்று கேட்டார். ''அவனையும் மற்றவர்களையும் சேர்த்து அழிக்கவே நான் கட்டளையிட்டேன். ஏனெனில் மக்கள் தவறு செய்வதை எண்ணிப்பார்த்து அவன் ஒருநாள் கூட வேதனைப் படவில்லை! என்று இறைவன் கூறினான் என்பதும் நபிமொழி.]
''மக்களை நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழு உங்களில் இருக்க வேண்டும்'' என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.
''அவர்கள் நல்லதை வலியுறுத்துவார்கள்; தீயதை தடை செய்வார்கள். இவர்களே வெற்றியாளர்கள்'' இந்த திருவசனம் மற்ற அனைத்தையும் விடத் தெளிவான ஆதரவை நமக்குக் கொடுக்கீறது.. ''ஒரு குழு உங்களுக்கு மத்தியில் இருக்க வேண்டும்'' எனும் வார்த்தைகள் சீர்திருத்த முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன. இதே வார்த்தைகள் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் இந்த வழியில் இறங்க வேண்டியதில்லை - ஒரு சிலர் இறங்கினால் போதுமானது என்றும் தெளிவு படுத்துகின்றன.
எனவே சமுதாயத்தில் ஒருவர் அல்லது ஒரு குழு சீர்திருத்த முயற்சியில் இறங்க வேண்டியது கடமையாகும். இந்த கடமையை யாரும் செய்யவில்லை என்றால் சமுதாயத்த்ல் அத்தனை பேரும் குற்றவாளிகளாகிறார்கள்.
மற்றோர் இறை வசனத்தில் ''முஸ்லிம் ஆண்களும், முஸ்லிம் பெண்களும் சிலருக்குச் சிலர் நண்பர்கள்; அவர்கள் நன்மையை வலியுறுத்துவார்கள்; தீமையைத் தடை செய்கிறார்கள்; இறை வணக்கத்தை நிலைப்படுத்துவார்கள். சீர்திருத்த மனப்பான்மை உள்ளவர்களே உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியும் என்ற உண்மை இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது. இதனை வெறுக்கிறவர்கள் சிறந்த முஸ்லிம்களாக இருக்க முடியாது. என்பது உட்கருத்து.
திருக்குர்ஆன் மீண்டும் பேசுகிறது; ''தமக்குக் கூறப்பட்டதை எல்லாம் அவர்கள் மறந்திருந்தபோது, தீமையைத் தடுத்து நிறுத்தியவர்களை நாம் காப்பாற்றினோம். அட்டூழியம் செய்தவர்களுக்கு நாம் கொடிய தண்டனை கொடுத்தோம். ஏனெனில், அவர்கள் தவறு செய்து கொண்டிருந்தார்கள்!''.
அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றவர்கள் சிலர், தமக்குக் கூறப்பட்ட எச்சரிக்கைகளை எல்லாம் மறந்துதான் வாழ்ந்தார்கள். இருந்தும் அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைத்துவிட்டது. அவன் அவர்களைக் காப்பாற்றி விட்டான். ஏன் தெரியுமா? தீமைகளை விட்டு விலகி நின்றார்கள்; தீமையைச் செய்யக்கூடாது என மக்களுக்கு போதித்தார்கள்.
மற்றொரு இறைவசனம் இப்படி கருத்துத் தெரிவிக்கிறது; ''உங்கள் முன்னோரில் உறுதியுள்ள சிலர் நாட்டில் நடக்கும் தீய விளைவுகளைத் தடுத்துக் கொண்டிராவிட்டால் அவர்களில் பெரும்பாலோர் அழிந்து போயிருப்பார்கள்!'' அழிவுக்குக் காரணம் சீர்திருத்த முயற்சியின்மை என்னும் உண்மை இங்கு வெளியிடப்படுகிறது.
''முஸ்லிம்களில் இரு சாரார் போரிட்டுக் கொண்டால் அவர்களுக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள்'' என்று திருக்குர்ஆன் மற்றோர் இடத்தில் கூறுகிறது.
''முரண் வழியில் செல்லும் சாராரை எதிர்த்துப் போராடுங்கள்!'' என்று வேறொரிடத்தில் அது தீர்ப்பு கொடுக்கிறது.
அடுத்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் நடந்த விறுவிறுப்பான உரையாடலைப் பார்ப்போம்.
''ஒரு காலம் வரும். அப்போது பெண்கள் துரோகம் செய்வார்கள். ஆண்கள் நேர்மையை மறந்து குற்றம் புரிவார்கள். மனப்பயிற்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள்.!'' என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
''அப்படியா நடந்து விடப்போகிறது?'' நண்பர்கள் திகைத்தார்கள்.
''நடக்காமல் என்ன! இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன், இதைவிட மோசமான சூழ்நிலை ஏற்படும்!''
''இதைவிட மோசமான சூழ்நிலையா!'' நண்பர்களின் திகைப்பு இன்னும் அதிகமானது.
''அப்போது மக்கள் நன்மையை எடுத்துக் கூறிச் சீர்திருத்தம் செய்ய மாட்டார்கள்; தீமையைத் தடுக்க மாட்டார்கள்!''
''அப்படியா!'' என்று மட்டுமே நபித்தோழர்களால் திகைப்பும் கவலையுமாக கேட்க முடிந்தது.
''அப்படியேதான்!'' என்றார்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
தொடர்ந்து; ''அப்போது நீங்கள் உலகில் இருந்தால், நல்லதை கெட்டது என்று கருதுவீர்கள்; கெட்டதை நல்லது என்று நம்புவீர்கள்!' என்றார்கள் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
நபித்தோழர்களில் ஒருவர் கேட்டார், ''யா ரஸூலல்லாஹ்! அப்படியொரு காலம் வருமா என்ன?''
''நிச்சயமாக வரும். இதைவிட மோசமான விளைவு ஏற்படும். அப்போது நீங்கள் நல்லதை கெட்டது என்று கருதுவதோடு நிறுத்திக்கொள்ள மாட்டீர்கள்; உங்கள் கருத்தை எடுத்துரைத்து மக்களைத் தூண்டுவீர்கள். இதே போன்று கெட்டதை நல்லது என்று எண்ணுவதோடு நிறுத்திக்கொள்ள மாட்டீர்கள். அதை மக்களுக்கு கூறி அவர்களையும் கெடுப்பீர்கள். நன்மை நடந்தால் அதற்கு தடை விதிப்பீர்கள். தீமை நடந்தால் அதற்கு ஊக்கம் கொடுப்பீர்கள்!''
நண்பர்கள் எதுவும் பேசமுடியாமல் மவுனமானார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தொடர்ந்தார்கள்; ''இப்படியொரு காலம் ஏற்படத்தான் போகிறது! இதில் சிறிதும் சந்தேகமே இல்லை. சூழ்ந்து நிற்கும் துன்பங்களைப் பார்த்து பொறுமை சாலிகள் கதிகலங்கி நிற்பார்கள்!' -இந்த செய்தியை நமக்குக் கூறுபவர் அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
தம் சமுதாயத்தைப் பார்த்துப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீண்டும் பேசுகிறார்கள்: ''அநியாயமாக ஒரு மனிதனை மற்றொரு மனிதன் வதைக்கிறானா? அந்த இடத்தில் (வேடிக்கைப் பார்த்துக்கொண்டு) நிற்காதீர்கள். இந்த வேலையைத் தடை செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இறைவனின் சினத்துக்கு இலக்காகிறார்கள். தடை செய்யும் துணிவு உங்களுக்கு இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு விலகி விடுங்கள்!'
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுத்த மற்றோர் செய்தி: ''உங்கள் நாவன்மையால் தீர்வு காண வேண்டிய பிரச்சனை எதிர்பட்டிருக்கும் போது வாயை மூடிக்கொண்டு இருக்காதீர்கள். உங்களுக்கு உரிமையுண்டு, துணிந்து தடை செய்யுங்கள். இதனால் உங்களுக்கு எவ்விதப் பாதகமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை!'' -இந்த செய்தியை அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களாவார்.
''தவறு நடப்பதை கண்டு உங்கள் மனம் புண்படுகிறதா? அப்படியானால் அந்த கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்பதே பொருள். உங்களை அந்த கூட்டத்தில் ஒருவராகக் கணக்கிட முடியாது. அதே சமயம் தவறு நடக்கும் இடத்தில் இல்லாத ஒருவன் அந்த தவறை மனத்தால் விரும்பி வரவேற்றால், அவன் அந்த கூட்டத்தில் ஒருவனாகக் கணிக்கப்படுகிறான்!'
உலகில் தோன்றிய ஒவ்வொரு திருத்தூதர்களும் அவர்களது தோழர்களும் எப்படி செயலாற்றுகிறார்கள் என்பதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்குகிறார்கள்;
''உலகில் தோன்றிய ஒவ்வொரு திருத்தூதருக்கும் குறிப்பிட்ட சில நண்பர்கள் இருப்பார்கள். திருத்தூதர் மக்களுக்கு மத்தியில் சிறிது காலம் தங்கியிருப்பார்; இறை வேதத்தை அடிப்படையாக வைத்து வாழ்க்கை நடத்துவார். வாழ்க்கையைச் சொல்லிக் கொடுப்பார். சிறிது காலத்திற்குப் பிறகு அவர் இறந்து விடுவார்.
அதற்கப்புறம் அவர் நடந்து காட்டிய வழியில் அவரது நன்பர்கள் நடப்பார்கள். மக்களுக்கு வாழும் வழியைக் கற்றுக் கொடுப்பார்கள். தீயவற்றைத் தடுப்பார்கள். நல்லவற்றை எடுத்துரைத்துத் தூண்டுவார்கள். அவர்களும் சிறிது காலத்தில் இறந்து போய்விடுவார்கள்.
அதற்கப்புறம் மேடை ஏறிப் பிரச்சாரம் செய்யும் சிலர் சமுதாயத்தில் தோன்றுவார்கள். தமக்கு முன்னால் அறிவுரை கூறிய நபித் தோழர்களைப் பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும். மேடையில் ஏறியதும் அவர்கள் தமக்குத்தெரிந்ததை மக்களுக்குக் கூறுவார்கள். தீயவற்றை ஒதுக்கி வைத்துத் தூய வழிட்யில் நடக்குமாறு போதனை செய்வார்கள். ஆனால், அவர்கள் மேடையை விட்டு இறங்கியதும் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் செயலாற்றுவார்கள். நல்லதை ஒதுக்கித் தள்ளுவார்கள். தீயதை எடுத்து நடப்பார்கள்.
இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும்போது உங்கள் சக்தி முழுவதையும், ஒன்று திரட்டிக் குவித்து வைத்துக் கொண்டு அவர்களை எதிர்த்து நீங்கள் போராட வேண்டும். இது உங்கள் கடமை. இது உங்களுக்கு சாத்தியமில்லாவிட்டால் உங்கள் நாவன்மையால் அவர்களை எதிர்த்து முறியடியுங்கள். இதுவும் அசாத்தியமாகத் தெரிந்தால் மனத்தலவிலாவது அவர்களை வெறுத்து ஒதுக்குங்கள்! இந்த அட்டூழியம் பரவினால் எங்கும் இஸ்லாம் இருக்காது' -இந்த செய்தியை அறிவிப்பவர் இப்னு மஸூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
''அளவுக்கு மீறிய அட்டூழியம் நடந்த ஓர் ஊரை அழிக்குமாறு இறைவன் வானவர் ஒருவருக்கு செய்தியனுப்பினான். அந்த ஊரில் ஒரு நல்ல மனிதர் இருந்தார். அவரைச் சுட்டிக்காட்டி வானவர் இறைவனிடம் ''அவன் நல்ல மனிதன்; அவன் எந்த தவறும் செய்யவில்லையே!'' என்று கேட்டார். ''அவனையும் மற்றவர்களையும் சேர்த்து அழிக்கவே நான் கட்டளையிட்டேன். ஏனெனில் மக்கள் தவறு செய்வதை எண்ணிப்பார்த்து அவன் ஒருநாள் கூட வேதனைப் படவில்லை!'' என்று இறைவன் கூறினான் என்பதும் நபிமொழி.
ஒரு காலம் வரும். அப்போதைய மக்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? சீர்திருத்தக்கூடிய மனிதனைவிட அவர்கள் செத்த கழுதையை மேலானது என்று கருதுவார்கள்.
ஒரு நபிக்கு இறைவன் செய்தியனுப்பினான்; ''உம்முடைய சமுதாயத்திலிருந்து 1,00,000 பேரை நான் அழிக்கப் போகிறேன். அவர்களில் கெட்டவர்கள் 60,000 பேர்; நல்லவர்கள் 40,000 பேர்!'' என்று.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள்; 'இறைவனே! கெட்டவர்களைத் தான் அழிக்கிறாய். நல்லவர்களை ஏன் அழிக்க வேண்டும்?''
இறைவன் பதிலளித்தான்; ''தீமை நடக்கும்போது அவர்கள் சினமுற்று எழவில்லை!''
( - இஹ்யா உலூமித்தீனிலிருந்து... மொழியாக்கம்: மவ்லவி, எஸ். அப்துல் வஹ்ஹாப், பாகவி )

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets