Facebook Twitter RSS

Wednesday, October 31, 2012

Widgets

மாற்று திறனாளி : பார்வையற்ற போராளி.!


நபித்தோழர்கள் வரலாறு : அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம்.
உலகின் முதல் இஸ்லாமிய அரசு (யத்ரிப்) மதீனாவில் நிறுவப்பட்டது. தூய்மையான, நன்மை மிகுந்த, அமைதியான சமூகம் நிலைபெற்றது...! பள்ளிவாசல், மார்க்கெட் என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக நிறுவிய அண்ணலார் (ஸல்) அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமுக்குத் தனிச் சிறப்பு வாய்ந்த பொறுப்பை வழங்கினார். என்னதெரியுமா? நாள்தோறும் ஐவேளையும் இறைவனின் புகழ்பாடி,
வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே எனப் பிரகடனம் செய்து, சத்தியத்துக்குச் சான்று பகர்ந்து, இறைவனின் அடியார்களை இறையில்லத்தின் பக்கம், தொழுகையின் பக்கம், வெற்றியின் பக்கம் அழைக்கும் உன்னத பொறுப்பு அது...! ஆம். முஅத்தின் என்கிற பெருமைமிக்க, சிறப்பான, கண்னியமான பொறுப்பு அது. அந்தப் பொறுப்பு தமக்கு கிடைக்காதா என பெரும் பெரும் தோழர்களும் ஏக்கத்துடன் இருந்த நேரத்தில் அந்த சிறப்புமிக்க பொறுப்பை அடிமையாக இருந்து, இஸ்லாத்தை ஏற்று, ஏற்றம் பெற்ற பிலால் (ரலி) அவர்களுக்கு அண்ணலார் (ஸல்) வழங்கினார் என்பது நான் அனைவரும் அறிந்த உண்மை. பிலால் (ரலி) அவர்களுக்கு உதவியாளராக அப்துல்லாஹ் இப்னு மக்தூமை நியமித்து பார்வையற்றவர் மீதான ஏளனப் பார்வையை திருத்தியமைத்தார்கள். பிலால் (ரலி) அவர்களும் இப்னு உம்மு மக்தூம் (ரலி) அவர்களும் இந்த மகத்தான பணியை பகிர்ந்து கொண்ட பாங்கும் அலாதியானது. மதீனத்து மக்களை தொழுகைக்கு வருமாறு வெண்கலக் குரலில் அழைப்பார், பிலால் (ரலி). இறையச்சமும், நேசமும் ஏக்கமும் கலந்த அழைப்பு அது..! இவ்வாறு தொழுகையாளிகள் சேர்ந்து விடும்போது, கணீர் குரலில் ‘இகாமத்’ சொல்வார், இப்னு உம்மு மத்தூம். கொஞ்சம் மனக்கண்ணில் அந்தக் காட்சியை இருத்திப் பாருங்கள்..! அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாக வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இமாமாக தொழுகைக்குத் தலைமையேற்று நிற்க, இந்த மாநிலம் கண்ட மகத்தான மனிதர்கள் அவருக்குப் பின்னே தொழுவதற்காக நிற்க, ‘தொழுகை நிலை பெறுகிறது’ என அறிவிக்கிறார் இப்னு உம்மு மக்தூம்...! ஆஹா! அதனை விட நற்பெறு, அருள்வளம் வேறு உண்டா? சில சமயம் அப்துல்லாஹ் இப்னு மக்தூம் மக்களை தொழுகைக்கு அழைப்பார். பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொல்வார்கள். ரமளானின் போது அவர்களிருவரும் சிறப்பு வழக்கத்தைக் கடைப்பிடித்தனர். ஒருவர் ஸஹர் செய்வதற்காக நேரம் நெருங்கி விட்டதாக அறிவிப்பார். மற்றவர் ஃபஜர் தொழுகைக்கான பாங்கை விடுப்பார். பிலால் (ரலி) அவர்கள் மக்களை ஸஹருக்கு எழுப்புவார். அப்துல்லாஹ் இப்னு மக்தூம் (ரலி) அவர்கள் தொழுகைக்கு அழைப்பு விடுப்பார்கள். முஹம்மது நபி (ஸல்) மதீனாவை விட்டு எங்காவது செல்லும் போது சில சமயம் மதீனாவில் தம்முடைய கலீஃபாவாக அப்துல்லாஹ் இப்னு மக்தூமை நியமிப்பார்கள் இவ்வாறு பத்து முறை பெறுப்பேற்றுள்ளார்கள். மக்கத்து வெற்றியின் போதும் கூட அவர் மீது இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பத்ருப் போர் முடிந்ததும் அறப்போரில் ஈடுபடுவது குறித்து ஒரு வசனம் அருளப்பட்டது. போரில் கலந்து கொள்ளாமல் தங்கி விடுபவர்களை விட (காயிதீன்) போரில் ஈடுபடும் போராளிகள் (முஜாஹிதீன்) சிறந்தவர்கள் என அந்த வசனத்தில் சொல்லப்பட்டிருந்தது. இறைவழியில் போரிடுவதை ஊக்குவிப்பதற்காகவும், ஊற்சாகமூட்டுவதற்காகவும், வீட்டில் தங்கி விட்ட காயிதீன்களை உசுப்பி களத்தில் குதிக்கத் தூண்டும் விதத்திலும் அந்த வசனம் இருந்தது. இந்த வசனத்தை கேட்டதும் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமின் முகம் வாடி விட்டது முஜாஹிதீன்களுக்கு கிடைக்கும் உயர் சிறப்பு தமக்குக் கிடைக்காமல் போகின்றதே என அவர் மனம் வெதும்பினார். உடனே நபிகள் நாயகத்திடம் விரைந்தார் : “இறைத்தூதரே! என்னால் போரிட முடியும் எனில், நான் நிச்சயமாக போர் புரிவேனே...! என்றார். தம்மைப் போல பார்வையற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் போர்களில் கலந்து கொள்ள இயலாதவர்களின் நிலை என்ன? அது குறித்து தெளிவுபடுத்தி வசனம் அருளுமாறு இறைவனிடம் மன்றாடினார். இறைவன் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். ஊனமுற்றவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கிற வகையில் சில வசனங்கள் அருளப்பட்டது.அது பின்வருமாறு ஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள்; தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும்(அர்ப்பணித்தவர்களாக)அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்; எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்; ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.(திருக்குர்ஆன் 4:95) அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமுக்கும் அறப்போர் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் துளிர்த்தெழுந்தது. இறைவனிடம் மன்றாடி அறப்போர் பற்றிய வசனத்தில் விதிவிலக்கு பெறத்தான் செய்தார். என்றாலும் அவருக்குள் அறப்போர் மீதான ஆசை கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. பார்வையற்றவரான அவரால் போர்க்களத்தில் என்னதான் செய்ய முடியும்? இந்தக் கேள்வியும் அவருக்குள் திரும்பத் திரும்ப எழத்தான் செய்தது. என்றாலும் தோழர்கள் எல்லாரும் போர் புரியப் போகும் போது தாம் மட்டும் வீட்டில் தங்கி இருப்பதா? என்கிற கேள்வி அவரை வாட்டியது. மகத்தான நிகழ்வுகள் கண் முன்னால் அரங்கேறும் போது, வரலாற்றில் மைல்கற்களாக இருக்கக் கூடிய தருணங்கள் கண் முன்னாலேயே கழியும் போது அவரால் வாளாயிருக்க முடியவில்லை. யோசித்து யோசித்து ஒரு தீர்வு கண்டார், அவர். இனி ஒரு போரிலிருந்தும் விலகி இருக்க மாட்டேன் என உறுதி பூண்டு அண்ணலாரிடம் ஒடோடிச் சென்றார். “ என்னை இரண்டு வரிசைகளுக்கு நடுவே நிறுத்தி, என்னிடம் கொடியை கொடுத்து விடுங்கள். நான் நம் அணியின் கொடியை உயர்த்திப் பிடிப்பேன். பாதுகாப்பேன். எனக்கு பார்வை கிடையாது என்பதால் நான் எங்கும் ஓடிப் போய் விட மாட்டேன்” என்பார். ஹிஜ்ரி பதினான்காம் ஆண்டில் பாரசீகர்கள் மீது மிகப்பெரும் போர் தொடுக்க முடிவு செய்கிறார், உமர் (ரலி). இதையோட்டி ஆளுநர்களுக்கெல்லாம் சுற்றறிக்கை அனுப்புகின்றார். உமர் (ரலி) அவர்களின் அழைப்பை ஏற்று சாரி சாரியாக நாலா புறங்களிலிருந்தும் மக்கள் மதீனாவில் குவியத் தொடங்கினார்கள். அறப்போர் செய்கின்ற ஆர்வத்துடன்,ஷஹீத் ஆகிற ஆசையுடன் அணி திரண்ட போராளிகளை வரிசையில் ஒரு பார்வையற்ற முஜாஹிதும் இருந்தார். அவர்தான் அப்துல்லாஹ் இப்னு மக்தூம். இந்தப் படைக்குத் தளபதியாக சஆத்இப்னு அபி வக்காஸ் அவர்களை நியமித்தார், உமர் (ரலி). படையினருக்கு முக்கிய வழிகாட்டுதல்களைக் கொடுத்து, வாழ்த்தி, பிரியாவிடை கொடுத்து அனுப்பினார். இந்தப் படை காதிஸியாவை சென்றடைந்த போது போர்க்கவச ஆடை அணிந்து மிடுக்காகவும் எடுப்பாகவும் தெரிந்தார், அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம். முஸ்லிம்களின் கொடியை கையில் ஏந்திச் செல்வேன். எந்நிலையிலும் அதனை உயர்த்திப் பிடிப்பேன். அதற்காக உயிரையும் கொடுப்பேன் என் சபதம் செய்திருந்தார், இப்னு உம்மு மக்தூம். போர்க்களத்தில் இரண்டு அணிகளும் மோதின. மூன்று நாட்கள் தொடர்ந்து போர் நடந்தது. முஸ்லிம்கள் பங்கேற்ற போர்களிலேயே மிகவும் கடினமான,தீவிரமான போர்களில் ஒன்றாக அது வரலாற்றில் இடம் பெற்றது. மூன்றாவது நாள் முடிவதற்குள் முஸ்லிம்கள் வெற்றிப் பெற்று விட்டனர். அன்றைய வல்லரசு வீழ்ந்தது. ராணுவ பலம் வாய்ந்ததாக போற்றப்பட்ட பராசீக அரசு சரிந்தது. இதற்கு விலையாக நூற்றுக்கணக்கான போராளிகள் இன்னுயிர் ஈந்து தியாகம்செய்திருந்தனர். அவர்களில் ஒருவராக இப்னு உம்மு மக்தூம். போர்க்களத்தில் கைகளில் இஸ்லாமியக் கொடியை உறுதியாகப் பற்றிப் பிடித்தவாறு கிடந்த அவரது முகத்தில் புன்னகை...! சுவனத்து தோட்டங்களையும், சலசலவேன ஓடுகிற நதிகளையும் கண்டதால் மலர்ந்த புன்னகையோ...!

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets