Facebook Twitter RSS

Monday, February 18, 2013

Widgets

ஜமாஅத்தாக செயற்பட வேண்டுமா?


ஜமாஅத்தாக செயற்படுவது என்பதன் அடிப்படைகளும் ஷரீஆ அனுமதியும் எந்த ஆதாரமும் தேவையில்லாதளவுக்கு உறுதியாகியுள்ளன. அறிஞர்களின் கூற்று பின்வருமாறு அமைகின்றது: “இமாம்கள் மகத்தான பிக்ஹின் சொந்தக்காரர்களாக இருந்தனர். அவர்கள் ஷரீஅத்திற்கான பொதுவான அடிப்படைகளை அறிந்திருந்தனர். அதுமட்டுமன்றி, இந்த அடிப்படைகளை சாத்தியத்தியப்படுத்துவதற்கு தேவையானவற்றையும் தெரிந்திருந்தனர். கடமையை பூரணப்படுத்த எது அவசியமோ அதனை நிறைவேற்றுவதும் கடமையாகும் என்பதனையும் அறிந்திருந்தனர். அவர்கள் தனித்துப் போவதனை விட்டும் தவிர்ந்து கொண்டனர். தோளோடு தோள் சேர்த்து, ஜமாஅத்தாக செயற்பட்டனர். நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதில் ஜமாஅத்தாக செயற்படுவதன் அவசியத்தை தெளிவான பத்வாக்களாலும் சீரிய வழி காட்டல்களாலும் தெளிவுபடுத்தினர். ஜமாஅத்தாக செயற்படுவதாயின் அதற்கென்று ஒரு தலைவர் இருக்க வேண்டும். இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது: “நீங்கள் மூன்று பேர் இருந்தால் ஒருவரை உங்களின் தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள்."

இந்த மார்க்கத்தை கடைப்பிடித்தொழுகும் ஜமாஅத்களை உருவாக்க பாடுபடும் போது சிலர் இதனை வித்தியாசமாகப் பார்க்கக் கூடும். இந்த சொல்பாவனைகள் எவ்வித கருத்துமற்ற, புதுமையானவை எனக் கருதுகின்றனர். ஆனால், ஜமாஅத் சார்ந்த சொற்களை எமது இமாம்களும், புகஹாக்களும் பாவித்துள்ளர்.
இமாம் இப்னு தைமியா ஜமாஅத்தாக செயற்படுவது விடயமாக பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
ஸஈம் என அறபியில் குறிப்பிடப்படுகின்ற சொல்லின் அர்த்தம் தலைவர், பொறுப்பாளர் என அமையும். இது விடயமாக அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
“நாங்கள் அரசருடைய (அளவு) மரக்காலை-பாத்திரத்தை- இழந்து விட்டோம். அதனை எவர் கொண்டு வந்தாலும், அவருக்கு ஓர் ஒட்டகச்சுமை (தானியம் சன்மானமாக) உண்டு. இதற்கு நானே பொறுப்பாளி என்று கூறினார்கள்." (12:72) இங்கு பொறுப்பாளி என்ற கருத்து கையாளப்பட்டுள்ளது. யார் ஒரு கூட்டத்தினரை பொறுப்பெடுக்கிறாரோ அவர் பொறுப்பாளி, தலைவர் எனக் கருதப்படுவார்.
ஒழுங்குபடுத்தப்பட்ட கூட்டு செயற்பாடு என்பது இந்த மார்க்கத்தை சரியாக விளங்கி, அதற்காக தூய்மையாக செயற்படுவதன் விளைவே இதுவாகும். எனவே, தெளிவான விளங்கமும், தூய எண்ணமும் காணப்பட வேண்டும். அப்போதுதான் தெளிவாக செயற்பட முடியுமாக இருக்க முடியும்.
“(நபியே!) நீர் சொல்வீராக! இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும். நான் அல்லாஹ்வின்பால் (உங்களை) அழைக்கின்றேன். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம். அல்லாஹ் மிகத் தூய்மையானவன். ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்."(12: 108)
வேண்டப்படும் செயற்பாடு ஓய்வின்றி, தொடராக போராடுவதாகும். அல்லாஹுதஆலா படைப்புக்களில் மிகச்சிறந்த படைப்பாகிய நபியவர்களுக்கு பின்வருமாறு கூறுகிறான்:
“இரவில் சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக" (73 : 02)
“எழுந்து நிற்பீராக" என்ற கட்டளை நபி (ஸல்) அவர்களுக்கு சத்தியத்திற்காக 23 வருடங்கள் செயற்படுவதற்கான தெளிவான கட்டளையாக இருந்தது. நபியவர்கள் அமைதியின்றி, ஓய்வை அறியாது செயற்பட்டார்கள். கதீஜா (றழி) அவர்கள் நபியவர்களிடம் ஓய்வெடுக்குமாறு வேண்டிய போது இவ்வாறு பதிலளித்தார்கள்: “கதீஜாவே! தூங்கும் காலம் முடிந்து விட்டது." இன்று நாம் இவ்வாறு கூறிக்கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் பயணிக்கிறோமா?
இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாமிய அழைப்பாளர்கள் களக்கமான கட்டத்திலுள்ளனர். அவர்கள் அதிகமாக செயற்படவும், போராடவும், தியாகம் செய்யவும், நிலைத்திருக்கவும், இஹ்லாஸுடன் இருக்கவும் வேண்டும். தனியாகப்போய் செயற்பட வேண்டுமென சிந்திப்பவர் எந்தவொன்றையும் செய்யமாட்டார். இவ்வாறு சிந்திப்பதன் காரணம் பார்வைத்தெளிவின் குறைபாடு ஆகும் அல்லது சீரான கலைத்திட்டத்தை கடைப்பிடிக்காமை ஆகும் அல்லது செயற்பட வேண்டுமென்பதிலுள்ள உணர்வு வறுமையாகும்.
அல்லாஹுதஆலா நபி (ஸல்) அவர்களுக்கு வரையறுத்த, செயற்படுவதற்கான, இலகுவான, ஆழமான, தெளிவான, திட்டத்தை வரையறுத்துக் கொடுத்தான். அதுதான் நபிமார்கள், றஸூல்மார்களின் போக்கின் சுருக்கமாகவும் இருந்தது. ஸஹாபாக்கள் அவற்றை நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள். அதன் பிறகு தாபிஈன்கள் அதன்படி செயற்பட்டார்கள். அந்த திட்டத்தின் நாகரீகம் உலகம் பூராக ஆட்சி செய்தது. அதன் பிறகு தூய்மையாக செயற்படும் தாஈக்கள் (அழைப்பாளர்கள்) பின் தொடர்ந்தார்கள். ஸலபுஸ் ஸாலிஹீன்கள் செய்தவற்றை அவர்கள் உயிர்ப்பித்தார்கள். மேலும், பயணிப்பதற்கான பாதையைத் தெளிவுபடுத்தினார்கள். இந்தப் போராட்டம் தொடர்ந் தேர்ச்சியானதாக இருந்தது. இமாம் ஹஸனுல் பன்னா வருகை தந்து, ஒரு முஸ்லிம் சகோதரன் செயற்படுவதற்கான படித்தரங்களை நுணுக்கமாக வரையறுத்தார்கள். அவற்றை ஏழு படித்தரங்களாக பின்வருமாறு வரையறுத்தார்கள்:
01. தனது உள்ளத்தை சீர்செய் வது: அவன் பலமான உடல் கொண்டவனாகவும், உறுதிமிக்க பண்பாடுகள் உடையவனாகவும், தெளிவான சிந்தனையுள்ளவனா கவும், உழைக்கும் திறனுள்ளவனாவும், மாசற்ற அகீதாவுடையவனாகவும், சீரான இபாதத் செய்பவனாகவும், உள்ளத்துடன் போராடுபவனாகவும், நேரத்தை பேணுபவனாகவும், தனது விவகாரங்களை திட்டமிட்டு ஒழுங்குற செய்பவனாகவும், அடுத்தவர்களுக்கு பயனுள்ளவனாகவும் இருக்க வேண்டும். இது ஒவ்வொரு சகோதரனதும் கடமையாகும்.
02. இஸ்லாமிய வீட்டை உருவாக்குவது: அவன் தனது குடும்பம்தான் சுமந்திருக்கும் சிந்தனையை மதிப்பதற்கு பழக்க வேண்டும். அவன் இல்லற வாழ்வின் அனைத்து நிலைமைகளிலும் இஸ்லாத்தின் ஒழுக்கங்களை பேணுபவர்களாக குடும்பத்தினரை உருவாக்க வேண்டும். அவன் தனது மனைவியைத் தெரிவு செய்து, அவளது உரிமை, கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அவன் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்தெடுக்க வேண்டும். அவர்களை இஸ்லாத்தின் அடிப்படையிற்கு ஏற்ப வளர்த்தெடுக்க வேண்டும். இது அனைத்து சகோதரர்களினதும் கடமையாகும்.
03. சமூகத்திற்கு வழிகாட்டுதல்: சமூகத்திலே நன்மையைப் பரப்புதல், மானக்கேடானவற்றுக்கும் வெறுக்கத்தக்கவற்றுக்கும் எதிராகப் போராடுதல், சிறந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஊக்குவித்தல், நன்மையை ஏவுதல், நல்ல விடயங்களை செய்வதற்கு முந்திக்கொள்ளுதல், இஸ்லாமிய சிந்தனையின்பால் பொது மக்களின் கருத்தை சம்பாதித்தல், எப்போதும் பொது வாழ்வின் வெளிப்பாடுகளை இஸ்லாமிய சிந்தனையின் அடிப்படையில் புடம்போட்டுப்பார்த்தல். இது ஒவ்வொரு சகோதரனதும் ஜமா அத்தினதும் கடமையாகும்.
04. நாட்டை விடுவித்தல்: நாட்டை அரசியல் அல்லது பொருளாதார அல்லது ஆன்மீக ரீதியான அந்நிய கெடுபிடியிலிருந்து விடுவித்தல்.
05. அரசாங்கத்தை சீர்செய்தல்: அது உண்மையான இஸ்லாமிய அரசாங்கமாக இருக்க உழைத்தல். இதன் மூலமே தனது உம்மத்திற்கான ஊழியன் என்ற வகையில் அவனது பணி நிறை வேற்றப்பட்டதாக அமையும். அந்த உம்மத்தின் நலனுக்காக செயற்பட்டதாக அது அமையும். ஒரு அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றுபவர்களாக இருக்கும் காலமெல்லாம் அது இஸ்லாமிய அரசாங்கமாக இருக்கும். அவர்கள் இறைவனுக்கு மாறு செய்வதனை வெளிப்படையாக செய்பவர்களாக இருக்கக் கூடாது. அந்த அரசாங்கம் இஸ்லாத்தின் சட்டங்களையும் அதன் போதனைகளையும் நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.
அதன் பண்புகள்: பொறுப்பை உணர்ந்திருத்தல், குடிமக்கள் மீது அன்பு வைத்திருத்தல், மனிதர்களுக்கு மத்தியில் நீதியாக நடத்தல், பொதுச்சொத்து விடயத்தில் பேணுதலாக நடத்தல், அதில் நடுநிலையைப் பேணுதல்.
அதன் கடமைகள்: பாதுகாப்பை உறுதிப்படுத்தல், சட்டத்தை நடைமுறைப்படுத்தல், கல்வியைப் பரப்புதல், படைப்பலத்தை தயார் செய்தல், ஆரோக்கியத்தைப் பேணுதல், பொது நலன்களைப் பேணி நடத்தல், வளங்களை அபிவிருத்தி செய்தல், செல்வத்தை பாதுகாத்தல், பண்பாடுகளைப் பலப்படுத்தல், தஃவாவைப் பரப்புதல்.
06. முஸ்லிம் உம்மத்திற்கான சர்வதேச கிலாபத்தை தயார்படுத்தல்: நாடுகளை விடுவித்து, அவற்றின் கண்ணியத்தை உயிர்ப்பித்து, அதன் கலாச்சாரத்தை உறுதிப்படுத்தி, எல்லோரையும் ஒற்றுமைப்படுத்த வேண்டும். இவை அனைத்தும் இழந்த கிலாபத்தை மீளக் கொண்டுவந்து, எதிர்பார்க்கப்படும் ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலமே சாத்தியமாகும்.
07. உலகத்தையே ஆளும் சக்தி (உஸ்தாதிய்யதுல் ஆலம்): இஸ்லாமிய பிரச்சாரத்தை உலகம் பூராக பரப்புவதன் மூலமாக இது சாத்தியமாகும். “பித்னா (குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்." (2:193), “காபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்." (9: 32).
இறுதியான இந்த நான்கு படித்தரங்களும் அனைத்து இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கும் கடமையானவை ஆகும். அதுமட்டு மன்றி, முஸ்லிம் ஜமாஅத்தின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் இவை கடமையானவை ஆகும். இந்தப் பொறுப்புக்கள் எவ்வளவு பாரமானவை! இந்தப் பணிகள் எவ்வளவு மகத்தானவை! இவற்றை மனிதர்கள் கற்பனையாகக் கருதுவார்கள். ஆனால், ஒரு சகோதர முஸ்லிம் அவற்றை யதார்த்தமானவையாகக் கருதுவான். எமக்கு அல்லாஹ்விலே மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
“அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான். ஆனால், மக்களில் பெரும்பாலானோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்." (12:21)
ஷெய்க். முஹம்மத் அப்துல்லாஹ் அல்கதீப்

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets