இஸ்லாத்துக்கு முன் உலகம் எப்படி இருந்தது ?
இஸ்லாத்துக்கு முந்தைய அறியாமைக் காலத்தில் ஆதிக்கமும், அநியாயமும் நிறைந்த சட்டங்களின் மேடையாகவே உலகம் இருந்தது. அரசியல் என்றாலே அது மன்னராட்சிதான். அரச குடும்பத்தினரெல்லாம் புனிதப் பிறவிகள் என்ற நம்பிக்கை பாரசீகத்தில் நிலவியது போல் உலகெங்கும் பரவியிருந்தது.
அரசாட்சி என்பது இறைவன் தமக்களித்த உரிமைப்பொருள் என்று நம்பிய சாசானிய வம்சம், இதை குடிமக்களிடம் வலிந்து பிரச்சாரமும் செய்தனர். மக்கள் அதை நம்பினர். சாசானிய வம்சத்தை தவிர வேறெவருக்கும் மக்களை ஆளும் பதவிகளில் வீற்றிருக்க உரிமை இல்லை. அவர்கள் புனிதப்பிறவிகள் என்று குடிமக்கள் நம்ப வைக்கப்பட்டனர். இறுதியில் இது ஒரு மத நம்பிக்கை என்றாகி விட்டது.
அக்கால சீனர்கள் தம் அரசரை வானத்தின் மகன் இம்பராத்தூர் என்றனர். ஆம் வானம் -ஆண், பூமி- பெண் இவ்விரண்டும் சேர்ந்து உலகத்தைப் பெற்றெடுத்தன. முதல் அரசன் தான் தலைப்பிள்ளை என்று நம்பிக் கொண்டிருந்தார்கள் (நூல்: சீனவரலாறு)
மனித சமுதாயத்தின் ஈடு இணையற்ற தந்தையே சீன அரசர் தம் மனம் போன போக்கில் எதையும் செய்திடும் எல்லா உரிமையும் இம்பராத்தூருக்கு உண்டு என்று கருதிய சீனர்கள் நீயே தாயுமானவர் தந்தையுமானவர் என்று அரசரிடம் கூறி வந்தனர்.
சீனச் சக்கரவர்த்தி லீயான் (அல்லது தாய் தகப்பன்) இறந்தபோது சீன இனமே பெரும் கவலை கொண்டது. சீனாவே துக்க ஆடை அணிந்தது சிலர் தமது முகத்தை ஊசியால் குத்திக் கிழித்தனர். தம் முடிகளை வெட்டி எறிந்தனர் சிலர். மன்னரின் பிணம் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் மோதி காதோடு மண்டையும் உடைத்துக் கொண்டனர் சிலர். இப்படியெல்லாம் செய்து மன்னர் இறந்ததற்கு துக்கம் கடைபிடித்தனர்.
ரோமர்கள் மட்டுமே புனிதமானவர்கள். ரோம் நாடு மட்டுமே புனித பூமி என்பது தான் ரோமர்களிடம் நிலவிய நம்பிக்கை
இதர சமுதாயங்களும் இதர நாடுகளும் ரோமர்களுக்கு சேவகம் செய்திடப் பிறந்தவர்கள் ரோமர்கள் இதயம் போன்றவர்கள் மற்றவர்களெல்லாம் இதயத்துக்கு ரத்தத்தை அனுப்பிவைக்கும் நரம்புகள் போன்றவர்கள்
இவ்வாறெல்லாம் ரோமர்கள் நம்பிவந்த காரணத்தினால் எல்லா உரிமைகளையும் கோட்பாடுகளையும் காலில் போட்டு மிதித்தார்கள். எல்லா மதிப்புகளையும், சிறப்புகளையும் காற்றிலே பறக்க விட்டார்கள். எல்லா அக்கிரமங்களையும், அநாகரிகங் களையும் துணிந்து செய்தார்கள்.
ரோமர்களின் மதத்தையும், மத நம்பிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு ரோம ராஜ்ஜியத்துக்கு விசுவாசத்துடன் நடந்துக் கொண்ட ஊர்களையும் கூட அநியாயங் களுக்கும், அக்கிரமங்களுக்கும் உட்படுத்தி னார்கள் ரோமர்கள், காரணம் அவர்கள் ரோமர்கள் அல்ல என்பதே.
எந்த நாடும் எந்த காலத்திலும் தனக்குரிய சட்டங்களை தானே வகுத்துக் கொண்டு, தன் உரிமைகளை தானே எடுத்துக் கொண்டு தம் நாட்டில் தம் விருப்பப்படி வாழக்கூடாது. திட்டங்கள் தீட்டவும், சட்டங்கள் வடிக்கவும், ரோமர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு
ரோமர்கள் அல்லாத இதர சமுதாயங்களெல்லாம் ஒட்டகங்களை போன்றவர்கள். சில நேரங்கள் அதில் ஏறியமர்ந்து பயணம் போகலாம், சில நேரங்களில் பால் கறந்து பருகலாம், அதற்கென தனியான உரிமைகளை தந்திட முடியாது. கூடாது. அதன் மடுவில் பால் ஊற்றெடுத்திடத் தேவையான அளவுக்கு அதன் முதுகில் ஏறியமர்ந்திட தேவையான அளவுக்கு மட்டும் அதற்குத் தீனி போட்டால் போதும். இஃதன்றி வேறெதுவும் தரத் தேவையில்லை என்று கருதினர் ரோமர்கள்.
ரோம ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியை விரித்துரைக்க முற்பட்ட Robert Briffault கூறுகிறார்: “ரோம ராஜ்யம் நொறுங்கி போனதற்கு எங்கும் பரவி கிடந்த லஞ்சம் போன்ற சீர்கேடுகள் மட்டுமே அடிப்படைக் காரணமல்ல. ரோம ராஜ்ஜியத்தின் தொடக்க நாள் தொட்டே தீமைகளும், சீர்குலைவுகளும் எதார்த்தத்துக்கு முரணான பண்புகளும் அதனுள் ஊடுருவிப் பாய்ந்திருந்தது.
மனித மூளையில் உதித்து வடிவமைத்த எந்த கொள்கையும் போலியான அஸ்திவாரத்தின் மீது தான் நின்று கொண்டிருக்கும் அது எவ்வளவு மதிநுட்பத்துடனும் இயங்கினாலும் தன்னையே காப்பாற்றிக் கொள்ள இயலாது அது அழிந்தே தீரும்.
ரோமப் பேரரசு சீர்குலைவை அஸ்திவாரமாக கொண்டு அமைந்திருந்தது. எனவே அது நாளுக்குநாள் வீழ்ந்து சரிந்து போனது. அரச குடும்பம் என்ற ஒரு சிறுகுழுவினர் சுகபோகமாக வாழ்வதற்காக பெரும்பான்மை மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். அவர்கள் ரத்தங்கள் உறிஞ்சப்பட்டன. இப்படியெல்லாம் ரோமில் அநியாயங்கள் தலைவிரித்து ஆடினாலும், சில நற்பண்புகளும் அங்கே நிலவாமல் இல்லை.
வியாபாரமும், கொடுக்கல் வாங்கலும் நீதியாகவும், நியாயமாகவும் நடந்தன. ரோமர்கள் இதில் இயல்பாகவே ஆர்வம் காட்டினர். அங்கே சட்டத்தின் முன் அனைவரும் சமம். எவருக்காகவும் நீதி வளையாது, தீர்ப்பு திருத்தப்படாது.
ஆனால் இதுபோன்ற நற்பண்புகளால் ரோமப் பேரரசை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க முடியவில்லை. போலியான தவறான அஸ்திவாரத்தின் மீது அரசு அமைந்திருந்ததே அதற்குக்காரணம்.
எகிப்தில் ரோமின் ஆட்சி:
எகிப்தில் நடைபெற்ற ரோம ஆட்சியைப்பற்றி டாக்டர் ஆல்பர்ட் ஜி பட்லர் கூறுகிறார்: எகிப்தில் நிலவிய ரோம ஆட்சிக்கு ஒரேயொரு லட்சியம் மட்டுமே இருந்தது. குடிமக்களின் செல்வங்களைச் சூறையாடி ஆட்சியாளர் பெருவாழ்வு வாழவேண்டும் என்பதே. அந்த லட்சியம் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோ, அவர்களின் வாழ்வாதாரங்களை வளப் படுத்துவதோ அரசுக்கு நோக்கமில்லை. குடிமக்கள் மீது தனது வலிமையை அரசு பிரயோகித்ததேயல்லாமல் அவர்கள் மீது அக்கறை கொள்ளவில்லை. (நூல்: அரபுக்கள் எகிப்தை வென்ற வரலாறு - பத்ஹுல் அரப் மிஸ்ர்)
சிரியாவில் ரோமின் ஆட்சி:
ரோம் நாட்டில் உள்நாட்டுக் குழப்பங்களும் பிரச்னைகளும் இருந்தபோதிலும் சிரியாவை ஆளத்தொடங்கிய ஆரம்பநாட்களில் ரோமர்கள் நீதிநெறியுடன் சிரியாவில் நடந்துக் கொண்டனர். காலப்போக்கில் ரோமர்கள் சிரிய மக்களை அடிமைகளாக நடத்தத் தொடங்கினர். ரோமர்களுக்கு முன்னர் சிரியாவை ஆண்டவர்களை விட இவர்கள் இழிவாக நடத்தினர் சிரிய மக்களை.
சிரியாவில் ரோமர்களின் ஆட்சி நடைபெற்றாலும் சிரியாவின் நகரங்களை ரோம் தன்னுடன் சேர்த்துக் கொள்ளாமல் தனியாகவே வைத்திருந்தது அந்நகரங்களில் வசிப்போரை ரோம தேசியவாதிகளாகவோ சிரிய நகரங்களை ரோமின் நகரங்களாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே சிரியா மக்கள் ரோமர்களுடன் ஒட்ட முடியவில்லை.
தம்மீது விழுந்த பொருளாதாரச் சுமைகளைத் தீர்த்திட தாம் பெற்ற பிள்ளைகளையே விற்கும் நிலைக்கு ஆளாகி விட்டிருந்தனர் சிரியமக்கள். இதன் பின் விளைவாக அடிமைத்தனங்களும் அக்கிரமங்களும் கட்டாயப்பணிகளும் அவர்கள் மீது திணிக்கப்பட்டன.. இந்த இழிநிலையைப் பயன்படுத்தி சிரியாவில் தொழிற்சாலைகளையும், நிறுவனங்களையும் நிறுவி சிரியமக்களைக் கசக்கிப் பிழிந்தனர் ரோமர்கள். (நூல்: ஹுததுஷ்ஷாம்)
ரோமர்கள் சிரியாவை எழுநூறு ஆண்டுகள் ஆண்டனர். இவர்களின் ஆட்சியில்தான் பிளவும் பிணக்கும் ஆதிக்கமும் அகம்பாவமும்கொலைகளும் நடக்க ஆரம்பித்தன.
கிரேக்கர்கள் சிரியாவை முன்னூற்று அறுபத்து ஒன்பது ஆண்டுகள் ஆண்டனர். இக்காலக் கட்டத்தில் தான் சண்டைகளும் அநியாயங்களும் நீக்கமற நிறைந்திருந்தன சிரியாவில். கிரேக்கர்கள் மனம் போன போக்கில் வாழ்ந்தனர். சிரிய மக்களை கோரமாகவும் கேவலமாகவும் நடத்தினர் கிரேக்கர்கள். (நூல்: ஹுததுஷ்ஷாம்)
சுருங்கச் சொன்னால் ரோம பாரசீக வல்லரசுகளின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகள் எதுவும் அந்நியர்களின் ஆட்சியில் நிம்மதியாக இருக்கவில்லை அரசின் மையப்பகுதியிலும் தலைநகரிலும் கூட அரசியல் பொருளாதாரச் சரிவுகள் காணப்பட்டன.
ஈரானில் பொருளாதார அநீதி:
ஈரானில் பொருளியல் சார்ந்த அரசியலோ பொருளாதார அமைப்பு முறையோ நியாயமாகவும் இருக்கவில்லை, நிலைத்ததாகவும் இருக்கவில்லை பெரும்பாலான காலகட்டங்களில் ஸ்திரத்தன்மையற்ற அநீதியான பொருளாதார அமைப்புமுறை அங்கு இருந்தது.
நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்பவும் யுத்த சூழ்நிலைக்கு ஏற்பவும் பொதுமக்களிடமிருந்து வரிகள் வசூலிக்கப்பட்டன. வரியை வசூலிக்கும் அதிகாரிகள் தம் மனம் போன போக்கில் தம் குணங்களுக்கு ஏற்றவாறு வசூலித்தனர். இப்படித்தான் வரி வசூலிக்கவேண்டும் இந்த அளவு தான் வசூலிக்கவேண்டும் என்று எந்த திட்டமோ நிலையான ஏற்பாடோ அங்கு இல்லை
சாசானியர் காலத்து ஈரான் எனும் நூலில் அதன் ஆசிரியர் கூறுகிறார்: வரியை வசூலிக்கும் அரசு அதிகாரிகள் வரிகளை அநியாயமாகவும் மோசடியாகவும் விதித்தனர் ஆண்டுதோறும் வரிவசூலிப்பில் ஏற்றத் தாழ்வுகள் இருந்ததால் அரசின் வரவும் செலவும் ஒரே நிலையில் ஸ்திரத்தன்மையுடன் இருக்க வில்லை”
எப்போதாவது போர் மூண்டுவிட்டால் போர்ச்செலவுகளுக்கு அரசிடம் பணம் இல்லாதபோது புதிய வரிகளை விதிப்பதைத் தவிர வேறு வழி இல்லை அரசுக்கு. இதனால் ஈரானின் வளம் கொழிக்கும் மேற்குப்பகுதி குறிப்பாக பாபிலோன் பகுதிகள் இந்த வரிவிதிப்புகளுக்கு எப்பொழுதுமே இலக்காயின (பக்கம் : 160)
மன்னர்களின் சுகபோகம்:
சூழ்நிலைகளுக்கேற்ப குடிமக்களிடமிருந்து வரிகள் வசூலிக்கப் பட்டன. குடிமக்களின் நலனுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக எந்தச் செலவும் செய்யப்படவில்லை. இதற்கு மாறாக அரசர்களின் சேமிப்புக் கிடங்குகள் நிரம்பின. தொன்றுதொட்டே ஈரானிய மன்னர்களிடம் ஒரு பழக்கமிருந்தது. அறியப்பட்ட உலகின் அதி நவீனப் பொருள்களையும் மதிக்கொண்ணா சாதனங்களையும் தங்க நாணயங்களையும் சேர்த்து வைத்துக் கொண்டிருப்பார்கள். அந்நிலை இப்போதும் நிலவியது.
ஈரான் மன்னர் இரண்டாம் குஸ்ரு தலைநகர் மதாயின் கிபி 607-608 ஆண்டுகளில் தான் கட்டிய அரண்மனைக்கு, பழைய அரண்மனையிலிருந்து செல்வங்களை இடம் மாற்றினார்.
அப்போது அவரிடம் 468 மில்லியன் மிஸ்கால் தங்கம் இருந்தது. இது இன்றைய மதிப்பில் 375 மில்லியன் பிரான்க் தங்கத்துக்கு நிகரானது. (பிரான்க் என்பது ஐரோப்பாவின் பழைய நாணய மதிப்பு ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து தங்களுக்கிடையே யூரோ என்ற ஒரே நாணயத்தை ஏற்படுத்திக் கொண்டன. ஒரு யூரோவின் இந்திய மதிப்பு சுமார் எழுபது ரூபாய்)
இரண்டாம் குஸ்ரு முடிசூட்டிக் கொண்டதிலிருந்து பதிமூன்றே ஆண்டுகளில் அவரிடம் 800 மில்லியன் மிஸ்கால் தங்கம் இருந்தது.
ஈரானிய சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு:
ஈரானில் விரல்விட்டு எண்ணத்தக்க சில தனி நபர்களிடம் செல்வம் குவிந்து கிடந்தது. பெரும்பாலான பொதுமக்கள் வறுமையில் உழன்றுக் கொண்டிருந்தார்கள்.
ஈரான் கண்ட ஆட்சியாளர்களி லெல்லாம் மிகச்சிறந்தவர் நீதிநெறி பிறழாமல் ஆண்டவர் கிஸ்ரா அனுஷர்வான் அவர்கள். இவரைப்பற்றியும் ஈரானிய வரலாற்றில் வனப்பான செழிப்பான காலம் பற்றியும் விரித்துரைக்கிறார் ஸாசானியர் காலத்து ஈரான் எனும் நூலில் ஆசிரியர். கிஸ்ரா அனுஷர்வான் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் அரசாங்கத்தினுடைய பொருளாதார நலனுக்கு உகந்ததாக இருந்ததேயன்றி குடிமக்களுக்கு பெரிய பலனைத் தந்திடவில்லை. எனவே இந்தச் சீர்திருத்தங்களுக்கு முன்னர் மக்கள் எப்படி இருந்தார்களோ அதுபோலவே இப்போதும் அறியாமையிலும் தரித்திரத்திலும் கிடந்து புரண்டனர்.
ஈரானியச் சமூகத்தில் பிறப்பின் பெயரால் கற்பிக்கப்படும் பிளவுகள், சமூக அவலங்கள், ஏற்றத்தாழ்வுகள், அடித்தட்டு மக்களின் இழிந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை நேரில் கண்ட பைசாந்திய அறிவுஜீவிகள் மனம் நொந்தனர். பாரசீக சமூகத்தின் மீது இப்படியொரு கடும் விமர்சனத்தை முன் வைத்தனர். அங்கே வலியவர்கள் வலிமை குன்றியோரை அடக்கி யாண்டனர். அரக்கத்தனமாகவும் அநியாயமாக வும் வேலை வாங்கினார்கள் (நூல்: சாசானியர் காலத்து ஈரான் பக் 589, 590)
ஆட்சியாளர்களிடத்தில் செல்வாக்குப் பெற்ற பொருளாதாரவளம் பெற்ற உயர் வர்க்கத்தின் வம்சத்தினருக்குத்தான் அரசாங்கத் தின் உயர்பதவிகள் வழங்கப்பட்டு வந்தன ஈரானில்.
ரோம ராஜ்ஜியத்தில் நிலவிய சமூக அமைப்பைப் பற்றி Robert Briffault கூறுகிறார்.:- எந்த சமுதாய அமைப்பு வீழ்ச்சிக்கும் சரிவுக்கும் ஆட்பட்டு விட்டதோ அந்த சமுதாயத்தைத் தூக்கி நிறுத்திட நடக்கும் எல்லா உபாயங்களும் யுக்திகளும் தோற்றுத்தான் போகும். வீழ்ச்சியுறத் தொடங்கிய காலகட்டங்களில் ரோம சமுதாயமும் அநீதியான இனப்பாகுபாடுகளில் சிக்கித் தத்தளித்தது. ஒவ்வொரு ஜாதியினருக் கும் ஒரு தொழில். ஒரு ஜாதியின் தொழிலை மற்றொரு ஜாதிக்காரன் செய்யக்கூடாது என்றொரு விதியிருந்த காரணத்தினால் தந்தை செய்த தொழிலைத்தான் மகன் செய்ய முடியும். வேறுதொழில் செய்ய முடியாது அன்றைய ரோம் நாட்டின் நிலை இதுவே. (நூல்:The Making of Humanity, Page: 165)
வீழ்ந்தது விவசாயம்:
ஈரானிய அரசு தம் குடிமக்களுக்கு விதித்த விதவிதமான புதுப்புது வரிகளால் மக்கள் அல்லல்பட்டார்கள். இதனால் பன்னெடுங்காலமாக விவசாயத் தொழில் செய்து வந்தவர்களெல்லாம் கூட வரிச்சுமை தாளாமல் தொழிலை கைவிட்டார்கள். (தொழில் செய்யாமல் சும்மா இருந்தவர்கள் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றவும் இல்லை. காரணம்) தங்களுக்கு ஆர்வமில்லாத ஒரு நோக்கத்துக்காகவோ தமக்கு பிடிக்காத ஒரு சமுதாயத்தின் நலனுக்காகவோ இராணுவச் சேவையில் ஈடுபடவில்லை. எனவே கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப் படுவதிலிருந்து தப்பிக்கவும் வரிகள் கொடுக்காமல் தப்பிக்கவும் அவர்களுக்கு இருந்த ஒரே வழி கோயிலின் மடங்களுக்குள் அடைக்கலம் புகுவதுதான். எனவே மடங்களுக்குள் அடைக்கலம் புகுந்தனர்.
இக்காலச் சூழ்நிலையில் மக்களிடையே துணிச்சலும் குற்றச் செயல்களும் முறை தவறிய வழியில் பொருளீட்டுவதும் அதிகரித்து விட்டன.
சாசானிய காலத்து ஈரான் என்ற நூலின் ஆசிரியர் கூறுகின்றார்: விவசாயிகள் தமது நிலங்களுடனே எப்போதும் பின்னிபிணைந்து கிடந்தனர் உழைத்தனர் உழைத்துக் கொண்டேயிருந்தனர். எனினும் பெரும் பஞ்சமும் வறுமையும் அவர்களை விட்டு அகலவில்லை விவசாயத்துடன் தொடர்புடைய (நடவு, களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல், அறுவடை) என எல்லாவேலைகளையும் இலவசமாகவே செய்திட வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டிருந்தனர். எனவே விவசாயிக்கு எதுவும் மிஞ்சவில்லை.
இம்யான் மார்சீலீனூஸ் என்ற வரலாற்றாசிரியர் கூறுகிறார்: பஞ்சைப் பராரிகளான இந்த விவசாயிகள் இராணுவப் படை செல்லுமிடமெல்லாம் பின்னாலேயே நடந்தே சென்றிட வேண்டும். நிரந்தர அடிமைகளாக விவசாயிகள் நடத்தப்பட்டனர். சம்பளமோ கூலியோ ஊக்கத்தொகையே உதவித்தொகையோ எதுவும் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. எஜமான்கள் அடிமைகளை நடத்துவதைபோல நிலத்தின் உரிமையாளர்கள் விவசாயிகளை நடத்தினர். (நூல்: சாசானியர் காலத்து ஈரான் பக்: 424)
ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் யூதர்கள் அப்போது கடும் சித்ரவதைகளுக்கு உள்ளாகி நின்றனர். எகிப்தில் யஅகூபிய்யூன்கள் சொல்லவொண்ணா சிரமங்களுக்கு ஆளாகி நின்றனர். அவர்களுக்கு எதிரான அநியாயங்களை ஆட்சியாளர்களே அரங்கேற்றி னார்கள். மானங்கள் பறிக்கப்பட்டன. செல்வங்கள் சூறையாடப்பட்டன.
பாதிக்கப்பட்ட யூதர்களின் கோரிக்கையை அபயக்குரலைக் கேட்டிட எவரும் தயாரில்லை. யூதர்களோடு உடன்படிக்கை செய்திருந்தவர்களும் உடன் படிக்கை செய்யாதவர்களும் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை. இது அவர்களின் விதி. இதை மாற்ற இயலாது என்ற கூறி ஒதுங்கிவிட்டனர். இந்த அநியாயங்களையெல்லாம் தாங்கிக் கொண்டு வாழ்வதைவிட சாவதே மேல் என்று யூதர்கள் சிலநேரங்களில் கருதிவிட்டனர். எந்த அளவுக்கு அங்கே அநியாயங்கள் அரங்கேறின என்பதற்கு இது சான்று.
........தொடரும்
தமிழ் வடிவம்: இல்யாஸ் ரியாஜி
No comments:
Post a Comment