Facebook Twitter RSS

Tuesday, January 15, 2013

Widgets

எது முதலில் ?


தேவை தரமான மனிதர்கள் 

நபித்தோழர்களுள் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது(ரழி) அவர்கள் ஒரு மரத்தில் ஏறினார்கள். அப்பொழுது அவர்களின் இரு கெண்டைக்கால்களும் வெளியே நன்றாகத் தெரிந்தன. அவை மெலிந்தும் சிறுத்தும் இருந்ததைக் கண்ட நபித்தோழர்களில் சிலர் வாய்விட்டுச் சிரித்து விட்டனர். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘இவரின் கெண்டைக் கால் மெலிந்திருப்பதைக் கண்டுதானே நீங்கள் (ஏளனமாகச்)சிரிக்கிறீர்கள். என் உயிர் யார் வசமுள்ளதோ அந்த அல்லாஹ்மீது சத்தியமாகச் சொல்கிறேன் (நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்த்திடும்நியாயத்) தராசுத்தட்டில் இவரது கால்களிரண்டும் உஹது மலையை விட அதிக கனமானதாக இருக்கும்’ என்று கூறினார்கள் (நூல்: அஹ்மது, தப்ரானி, அபூயஅலா, பஸ்ஸார்)
அப்படியானால் தூய உள்ளமும் கூர்த்த மதியும் இல்லாமல் வாட்ட சாட்டமாக மட்டும் இருப்பதில் எவ்வித மதிப்பும் இல்லை என்பதுதானே அதன் பொருள்.
அரபுப் பழமொழியொன்று “பேரீத்தம் மரம் போல் இளைஞர்களெல்லாம் இருப்பதைப் பார்க்கிறாய் உள்ளே என்ன இருக்கிறதென்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்கிறது.
ஒரு கூட்டத்தின் மக்கள் குள்ளமாகவோ உயரமாகவே இருப்பது தவறல்ல. உருவத்தில் கோவேறு கழுதை போல் இருந்துக் கொண்டு அறிவில் சிட்டுக்குருவி போல் (சிறுத்து) இருப்பதே தவறு என்று ஒரு கூட்டத்தை இகழ்ந்து பாடியுள்ளார்கள் ஹஸ்ஸான் பின் ஸாபித்(ரழி)அவர்கள். எனவே அறிவும் திறனும் தான் முக்கியமேயன்றி உருவம் அல்ல.
இப்படிக் கூறிவிட்டதால் உடல் ஆரோக்கியத்தை இஸ்லாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று எண்ணிவிடாதீர்கள். உடல் ஆரோக்கியத்தை இஸ்லாம் பெரிதாய் போற்றுகிறது. தாலூத் என்ற அரசரை அல்லாஹ் புகழ்வதைப் பாருங்கள்
அல்லாஹ் அவருக்கு உடல், அறிவு ஆகியவற்றை தாராளமாக வழங்கியுள்ளான் (அல்குர்ஆன் 2:247)
அதாவது அவர் உடலாரோக்கியம், சிந்தனையாற்றல் இவற்றை அதிகம் பெற்றுத் திகழ்ந்தார் என்று அல்லாஹ் பாராட்டுகிறான்
அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: உன் உடலுக்கு நீ செய்ய வேண்டிய கடமையுண்டு (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின்அம்ரு(ரழி), நூல்: புஹாரி, முஸ்லிம்)
இப்படியெல்லாம் இஸ்லாம் கூறியிருந்தாலும் ஒருவரின் மேன்மைக்குரிய அளவுகோலாக உடல் ஆரோக்கியத்தை கூறவில்லை.
கட்டுமஸ்தான உடலமைப்பும் உடல் வலிமையும் ஒருவரின் ஆண்மைக்கு அளவுகோல் அல்ல. அவன் மனிதர்களில் சிறந்தவன் என்பதற்கு இது அளவுகோல் அல்ல. ஒருவனின் அழகும் தோற்றப்பொலிவும் அவனின் மனிதப்பண்புக்கு அளவுகோல் அல்ல. இதுபோல ஒருவனின் உடலில் நோய்கள் இல்லை என்பது அவன் சிறந்த மனிதன் என்பதற்கு அளவுகோல் ஆகாது.
அண்ணல் நபி(ஸ்ல்) கூறினார்கள்: அல்லாஹ் உங்களின் உடலமைப்பையோ உருவங்களையே பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களையே அவன் பார்க்கிறான் (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி), நூல்:முஸ்லிம்)
கலீஃபா அப்துல் மலிக் பின் மர்வான் அவர்களை ஒரு கவிஞர் இப்படிப் புகழ்ந்து கவிபாடினார்.
“அவரின் நெற்றிக்கு மேலுள்ள தலை வகிடு மீது கிரீடம் தங்கம் போல் ஜொலிக்கிறது” என்று பாடினார். இதைக்கேட்ட அப்துல் மலிக் பின் மர்வான், “முஸ்அப் பின் உமைர்(ரழி)அவர்களை ஒரு கவிஞர் புகழ்ந்தாரே அது போல் என்னை நீ புகழ்ந்திருக்கலாமே” என்று கூறிவிட்டு அந்தக் கவிதையைப் பாடினார்.
முஸ்அப்(ரழி) அல்லாஹ்வின் தீச்சுவாலை அவரால் இருள்கள் வெளிச்சம் பெற்றன. அவரின் ஞானம் வலிமையானது அதில் ஆணவமோ பெருமையோ இல்லை”.
இப்படி முஸ்அப்(ரழி) பற்றிப் பாடியது போல் என்னை நீ புகழ்ந்திருக்கலாம் என்றார் அப்துல் மலிக்.
இதற்கு காரணம் அப்துல் மலிக் பற்றி கவிஞர் கூறிய வரிகள் அவரை மறைமுகமாக இகழ்ந்தன. அவரின் கிரீடம் தான் தங்கம் போல் ஜொலிக்கிறது. அவரின் அறிவு ஜொலிக்க வில்லை. முஸ்அப்(ரழி)வின் ஞானம் போல இருளில் வெளிச்சம் தரவில்லை என்பது அக்கவிதையின் மறுபொருள்.
ஆம் தலையில் இருக்கும் அறிவையும் இதயத்தில் இருக்கும் ஈமானையும் ஈமானால் விளையும் அறப்பணிகளையும் வைத்தே ஒரு மனிதன் மதிப்புப் பெறுகிறான்.
ஒருவன் செய்யும் நற்செயல் எவ்வளவு எண்ணிக்கையுள்ளது எவ்வளவு பெரியது என்று இஸ்லாம் பார்ப்பதில்லை எவ்வளவு உளப்பூர்வமாகவும் பயபக்தியுடனும் அச்செயல் செய்யப்பட்டுள்ளது என்றே இஸ்லாம் பார்க்கிறது.
இஹ்ஸான்(உளத்தூய்மையுடன் பணியாற்றுதல்) என்பது முஸ்லிம்கள் அனைவர்மீதும் இஸ்லாம் விதித்துள்ள கடமை. அது நஃபில் அல்ல. நோன்பு உள்ளிட்ட எந்தக் கடமையை நிறைவேற்றினாலும் இஹ்ஸான் மிகமிக அவசியம்.
அண்ணல் நபி(ஸல்) கூறினார்கள்: எல்லாச் செயல்களுக்கும் இஹ்ஸான் அவசியம் என்று அல்லாஹ் விதித்துவிட்டான்.(ஒரு கொலைக் குற்றவாளியை) நீங்கள் கொன்றால் அழகிய முறையில் கொல்லுங்கள். அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். நீங்கள் கத்தியைத் தீட்டுங்கள். பலிப்பிராணிக்கு சிரமம் தராமல் அறுத்து முடித்து விடுங்கள். (அறிவிப்பாளர்: ஷத்தாத் பின் அவ்ஸ்(ரழி), நூல்: முஸ்லிம்)
இந்த நபிமொழியில் இடம் பெற்றுள்ள “கதப” விதித்துள்ளான் எனும் சொல் கடமையாக்கியுள்ளான் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.
நபி(ஸல்)கூறினார்கள்: அனைவரும் அழகிய முறையில் (இஹ்ஸானுடன்) பணியாற்றுவதையே அல்லாஹ் விரும்புகிறான் (அறிவிப்பாளர் : குலைப்(ரழி) நூல்:முஸ்லிம், பைஹகீ)
ஆக எல்லாச் செயல்களும் அழகிய முறையில் செய்யப்படவேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் அதையே விரும்புகிறான் அவர்களையே விரும்புகிறான்.
பொறுப்புள்ள ஒவ்வொரு மனிதனும் அழகிய முறையில் செயல்பட்டால் போதாது மிக அழகிய முறையில் செயல்படவேண்டும் என அழைப்பு விடுக்கிறது அருள் மறையாம் திருக்குர்ஆன்
உங்கள் இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்ட மிக அழகியதைப் பின்பற்றுங்கள்(39:55)
சொற்களைச் செவியேற்று அவற்றுள் மிக அழகானவற்றைப் பின்பற்றும் அடியார்களுக்கு நல்வாழ்த்து கூறுவீராக. (39:17,18)
மாற்றுக் கருத்துடையோரிடம் மிக அழகிய முறையில் தர்க்கம் செய்திடப் பணிக்கிறது திருக்குர்ஆன்.
(நபியே) மிக அழகிய முறையில் அவர்களிடம் தர்க்கம் செய்வீராக (16:125)
ஒரு தீமையை மிக அழகிய நன்மையால் மாற்றும் படி பணிக்கிறது.
நன்மையும் தீமையும் சமமாகாது. மிக அழகியதைக் கொண்டு அதைத் தடுப்பீராக. (41:34)
அனாதையின் பொருளுக்கு அருகில் மிக அழகிய வழிமுறையிலன்றி நெருங்க வேண்டாம் என்கிறது.
அனாதையின் பொருளின் பக்கம் அவன் பருவம் அடையும் வரை மிக அழகான முறையிலன்றி நெருங்காதீர்கள். (6:152)
பூமியையும் வானங்களையும் அவற்றிலிருப்பவற்றையும் ஏன் படைத்தான் அல்லாஹ்? வாழ்வையும் மரணத்தையும் ஏன் படைத்தான்? இதோ கூறுகிறான் அல்லாஹ்
மனிதர்களில் மிக அழகிய முறையில் செயல்படுவோர் யார் என்று சோதிக்கவே நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை நாம் அதற்கு அலங்காரமாக்கினோம் (18:7)
உங்களில் யார் மிக அழகாக செயல்படுகிறார் என்று சோதிக்கவே வாழ்வையும் மரணத்தையும் அல்லாஹ் படைத்தான் (67:2)
அவன் தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷ் நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் மிக அழகிய முறையில் செயல்படுகின்றீர்கள் என்று சோதிக்கவே இவற்றைப் படைத்தான் (11:7)
இந்த வசனங்களை நன்றாகப் படியுங்கள். இவை நமக்குச் சொல்வதென்ன? மனிதர்களுக்கிடையே நடக்கும் போட்டி நன்மைக்கும் தீமைக்குமிடையே நடக்கும் போட்டியல்ல. அழகியதற்கும் மிக அழகியதற்குமிடையே நடக்கும் போட்டியாக இருக்கவேண்டும். இறை நம்பிக்கையுள்ள ஒருவர் எப்போதும் மிக அழகியதையும் மிக உயர்ந்ததையும் கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும்.
அண்ணல் நபி(ஸல்) கூறினார்கள்: நீங்கள் அல்லாஹ்விடம் சொர்க்கத்தைக் கேட்டால் ஃபிர்தவ்ஸ் என்ற சொர்க்கத்தைக் கேளுங்கள். ஏனெனில் இதுவே உயர்ந்த உன்னதமான சொர்க்கம். இதற்கு மேல் தான் அல்லாஹ்வின் அர்ஷ் உள்ளது ( நூல் : புஹாரீ, கிதாபுத் தவ்ஹீத்)
ஜிப்ரீல்(அலை) அவர்கள் மனித உருவத்தில் வந்து நபியிடம் கேள்விகள் கேட்க நபி(ஸல்) அவர்கள் பதில்அளித்தார்கள் என்பது மிகப்பிரபலமான ஒரு ஹதீஸ் தான். அதில் இஹ்ஸான் என்றால் என்ன? என்று ஜிப்ரீல்(அலை) கேட்டதற்கு அல்லாஹ்வை நீ பார்ப்பது போல் அவனை வணங்க வேண்டும். நீ அவனைப்பார்க்கா விட்டாலும் அவன் உன்னைப் பார்க்கிறான் என்று நபி(ஸல்) பதில் கூறினார்கள்(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)
வணக்க வழிபாடுகளில் இஹ்ஸான் என்றால் இதுதான். ஓர்மை ஒருங்கிணைந்த சிந்தனை ஆகியவற்றுடன் வணங்க வேண்டும். அல்லாஹ் எந்த நற்செயலின் வடிவத்தையும் அளவையும் பார்த்து அங்கீகரிப்பதில்லை. மாறாக அதன் தரத்தையும் சத்தையும் தான் பார்க்கிறான்.
நிறைவான நற்செயல்கள்போல் தோன்றும் செயல்கள் பல உண்மையில் உயிரற்றதாக இருக்கின்றன அதனால் அவற்றை மார்க்கம் பொருட்படுத்துவதில்லை அவை அங்கீகாரம் பெறுவதுமில்லை இதோ அல்லாஹ் கூறுகிறான்:
கவனமற்ற தொழுகையாளிகளுக்குக் கேடுதான் இவர்கள் தம் தொழுகையில் கவனமின்றி இருப்போர் முகஸ்துதிக்காகவே தொழுகின்றவர்கள் (107:4,5,6)
நபி(ஸல்)அவர்கள் நோன்பை பற்றி இப்படி சொன்னார்கள்: தீய சொற்களையும் தீய செயல்களையும் கைவிடாமல் நோன்பு நோற்பவர் தமது உணவையும் பானத்தையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை (அறிவிப்பாளர் அபூ ஹுரைரா(ரழி) நூல்:புஹாரீ)
நபி(ஸல்) கூறினார்கள்: எவ்வளவோ நோன்பாளிகளுக்கு அவர்கள் பசித்திருந்ததைத்தவிர வேறு எதுவும் நன்மை இல்லை. இரவு வணக்கத்தில் ஈடுபட்ட எவ்வளவோ பேருக்கு அவர்கள் விழித்திருந்ததைத்தவிர வேறு எதுவும் நன்மை இல்லை (நூல்: இப்னுமாஜா, நஸயீ, இப்னு ஹுசைமா)
அல்லாஹ் கூறுகிறான்: வணக்க வழிபாட்டை அல்லாஹ்வுக்காக மட்டும் அமைத்துக் கொள்ளவே அவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர் (98:5)
அண்ணல் நபி(ஸல்) கூறினார்கள்: செயல்களெல்லாம் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கும். யார் அல்லாஹ்வுக்காகவும் அவனின் தூதருக்காகவும் தியாகப்பயணம் மேற்கொண்டாரோ அவர் அல்லாஹ்வுக்காகவும் அவனின் தூதருக்காகவும் தியாகப்பயணம் மேற்கொண்ட (கூலியைப் பெறு)வார். யார் உலகத்தை அடையவும் பெண்ணைத் திருமணம் செய்யவும் தியாகப்பயணம் மேற்கொள்கிறாரோ அவரின் தியாகப்பயணம் அதற்கென அமையும். (அதனையே அவர் அடைவார்) (அறிவிப்பாளர்: உமர்(ரழி) நூல்: புஹாரீ, முஸ்லிம்)
இப்படியெல்லாம் எண்ணங்கள் பெரும் முக்கியத்துவம் பெறுவதனால் தான் இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் இந்த ஹதீஸை முக்கியமான நபிமொழியாகப் பதிவு செய்கின்றனர் இமாம் புஹாரி அவர்கள் தமது பிரபல ஹதீஸ் தொகுப்பில் முதல் ஹதீஸாக இதைப் பதிவு செய்துள்ளார்கள்
இது இஸ்லாத்தின் கால்பகுதி என்றும் மூன்றில் ஒரு பகுதி என்றும் அறிஞர்கள் கூறுவதற்குக் காரணம் எல்லாச் செயல்களும் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெறவேண்டு மானால் அதற்கு நல்ல நிய்யத் எண்ணம் அவசியம் என்பதால்தான்.
மார்க்கத்தில் கூறப்படாத புதிய செயலை (பித்அத்)ஐ யார் செய்தாலும் அது புறந்தள்ளப்படவேண்டும் ஏனெனில் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்கத்தில் இல்லாத புதிய செயலை ஒருவன் செய்தால் அது மறுக்கப்படும் (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரழி) நூல்: முஸ்லிம்)
ஆக ஒரு செயல் சமுதாயத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டுமானால் மார்க்கம் கூறிய செயலாக இருக்கவேண்டும் ஒரு செயல் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெறவேண்டுமா னால் அது உளத்தூய்மையுடன் நல்ல எண்ணத் துடன் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதே அவ்விரு நபிமொழிகளும் கூறும் பாடம்.
இறைநேசர் ஃபுளைல் பின் இயாழ்(ரஹ்)விடம் ஒருவர் அழகிய செயல் என்று அல்லாஹ் குர்ஆனில் (18:7, 67:2, 11:7) கூறும் அழகிய செயல் எது என்று கேட்டார். அதற்கு எந்த செயல் நேர்த்தியாகவும் உளப் பூர்வமாகவும் செய்யப்படுகிறதோ அதுவே அழகிய செயல். இவ்விரண்டில் எது இல்லா விட்டாலும் அந்த செயல் அழகிய செயல் அல்ல. ஏற்புக்குரியதுமல்ல. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறும் நோக்கத்தில் செயல் படுவதே உளப்பூர்வமாக செய்வதாகும். நபி(ஸல்)சொன்ன வழியில் செயல்படுவதே நேர்த்தியாகச் செய்வதாகும் என்று ஃபுளைல் பின் இயாழ்(ரஹ்) பதில் அளித்தார்கள்.
அல்லாஹ்வோ அவனின் திருத்தூதரோ கட்டளையிடாத ஒரு செயலை ஒருவன் மார்க்கத்தின் பெயரால் செய்தால் அதை சமுதாயம் புறக்கணிக்க வேண்டும் அல்லாஹ்வோ ரசூலோ கூறிய செயலை உளத்தூய்மையின்றிச் செய்தால் அதை அல்லாஹ் புறக்கணித்து விடுவான் எனவே எந்த செயலையும் நேர்த்தியாகவும் செய்யவேண்டும் உளப்பூர்வமாகவும் செய்ய வேண்டும்
இதை வலியுறுத்தும் நபிமொழிகள் ஏராளம் உள்ளன. நபி(ஸல்) கூறினார்கள்: ஒரே அடியில் ஒருவர் ஒரு பல்லியைக் கொன்றால் அவருக்கு நூறு நன்மை கிடைக்கும். இரண்டாவது அடியில் கொன்றால் நூறை விடக் குறைவான நன்மையும். மூன்றாவது அடியில் கொன்றால் அதைவிடக் குறைவான நன்மையும் கிடைக்கும் (அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்)
பல்லியைக் கொல்வது ஒரு சிறிய வேலை தான் அதைக்கூட நேர்த்தியுடன் செய்து முடித்திட வலியிறுத்துகிறது என்றால் எல்லாச் செயல்களையும் அதற்குரிய ஒழுங்குடன் முறைப்படி செய்வதையே இஸ்லாம் விரும்புகிறது.
கொல்வதாக இருந்தால் கூட அழகிய முறையில் கொல்லுங்கள் (நூல்: முஸ்லிம்) இந்த ஹதீஸ் கூறுவதென்ன? விரைவாக உயிரைப் பறித்துவிட்டால் கொல்லப்படுபவர் மனிதனோ மிருகமோ யாராக இருப்பினும் சித்ரவதையின்றி விஷயம் முடிந்துவிடுமல்லவா?
எனவே எந்தச் செயலும் அது எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பதே முக்கியம் எத்தனை முறை செய்யப்பட்டுள்ளது என்பதை விட.
இதுபோலத்தான் மனிதர்களும் எத்தனை ஆண்டு உயிர்வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல. எப்படி வாழ்ந்தான் என்பதில் தான் அவனது மரியாதை இருக்கிறது.
சிலபேர் நீண்ட நெடிய காலம் வாழ்ந்திருப்பான். அவனால் ஒரு நன்மையும் விளைந்திருக்காது. சிலர் குறைவான காலம் வாழ்ந்தாலும் நேர்த்தியுடன் செய்யப்பட்ட நற்செயல்களால் அவர்களது வாழ்க்கை ஜொலிக்கும்.
இதோ இப்னு அதாவுல்லாஹ்வின் தத்துவ வரிகள்: நெடுங்காலம் வாழ்ந்த பலரால் ஒரு சமூகம் பெற்ற பலன்கள் குறைவு. குறைவான காலம் வாழ்ந்த பலரால் சமூகம் பெற்ற பலன்கள் அதிகம். யாருடைய ஆயுளில் அல்லாஹ் பரக்கத் அருள்வளம் பொழிந்து விட்டானோ அவர் குறைவான காலத்தில் அல்லாஹ்வின் ஏராளமான அருள்களைப் பெறுவார் வார்த்தைகளால் அதை வடிக்க முடியாது. விரல்களால் அதை சுட்டிக் காட்டவும் இயலாது. அவ்வளவு தாராளமான அருள் கிடைத்துவிடும்.
நம் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களை விட இதற்கு இன்னோர் உதாரணம் வேண்டுமா?
ஓர் இறைத்தூதராக அவர்கள் வாழ்ந்தது வெறும் இருபத்து மூன்றாண்டுகள் மட்டுமே. அதில் எவ்வளவு சாதனைகள்.
மாபெரும் மார்க்கத்தை உலகில் நிறுவினார்கள். சிறந்த சமுதாயத்தை உருவாக்கினார். மனிதர்களை புனிதர்களாக வார்த்தெடுத்தார்கள். நீதியானதோர் அரசை நிலைநாட்டினார்கள். இறை மறுப்பாளர்களின் சிலை வணக்கத்தை வென்றார்கள். சதிகார யூதர்களை வீழ்த்தினார்கள். இறைவேதத்துக்கு அடுத்தபடியான சுன்னாவை அழகிய வாழ்க்கை வழிமுறையை வழங்கினார்கள். ஆஹா எவ்வளவு சாதனைகள் குறுகிய காலத்தில்.
இரண்டரை ஆண்டுகள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் வீற்றிருந்த கலீஃபா அபூபக்ர் சித்தீக்(ரழி)யவர்கள் சாதித்த சாதனைகள் சாதாரணமானவையா?
போலி நபிகளாகத் தோன்றிய பொய்யர்களை ஒழித்துக் கட்டினார்கள். மதம் மாறிச் சென்றவர்களை மீண்டும் இஸ்லாத் தின் அரவணைப்புக்குள் வரவைத்தார்கள். அறியப்பட்ட உலகின் இருபெரும் வல்லரசுக ளான ரோம் பாரசீகம் ஆகிய நாடுகளுக்கு எதிராக படையை அனுப்பினார்கள். ஸகாத் ஐ தர மறுத்தோரை ஒழுங்குபடுத்தினார்கள். செல்வந்தர்களின் செல்வங்களில் ஏழைகளுக் குரிய பங்கை உரிமையை பேணிப் பாதுகாத்தார்கள்.
ஏழைகளின் நலனுக்காக தம் சொந்தக்குடி மக்களுக்கு எதிராகவே யுத்தம் செய்திடத் துணிந்த ஓர் அரசு உலக வரலாற்றில் உண்டென்றால் அது இஸ்லாமிய அரசு தான் என்ற பெருமையை இஸ்லாத்துக்குப் பெற்றுத் தந்தார்கள்.
பத்து ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கலீஃபா உமர்(ரழி) அவர்களின் சாதனைகளை அடுக்கினால் ஏடுகள் கொள்ளாது. நாட்கள் போதாது
பல நாடுகளை வென்றார்கள். மக்களிடம் ஆலோசனைகள் கேட்டு இயங்கும் நீதியான அரசுக்கு அடிகோலினார்கள். தமக்குப்பின்னர் வரும் தலைமுறைக்கு அழகிய வழிகளை அறிமுகப்படுத்தினார்கள். அவ்வலிய்யாத்து உமர் ( உமர் அறிமுகப்படுத்திய சாதனைகள் ) என்ற பெயரில் வரலாற்றில் என்றும் வாழும் சாதனைகளைப் படைத்தார்கள்
குடிமக்களிடையே கூட்டுப் பொறுப்புணர்வை ஏற்படுத்தினார்கள். மார்க்கத்தின் அடிப்படை நோக்கங்களுக்கு முரண்படாமல் மக்கள் நலப்பணிகளுக்கு முன்னுரிமை தந்தார்கள். பொதுமக்களை காப்பதில் அரசின் பணி என்ன? அரசுக்கு பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை தெளிவுப்படுத்தினார்கள்.
அரசை வழிநடத்தவும் விமர்சிக்கவும் மக்களுக்கு முழு சுதந்திரம் தந்தார்கள். குடிமக்களே அரசை வழி நடத்த தேவையான ஆலோசனைகளையோ அரசு தவறிழைத்தால் அரசு மீது விமர்சனங்களையோ நீங்கள் சொல்லாமல் மவுனமாக இருந்தால் உங்களிடம் எந்த நன்மையுமில்லை. அதைக் கேட்காமல் இருந்தால் எம்மிடம் எந்த நன்மையும் இல்லை என்றார்கள்.
உலகத்தின் சுகபோக வாழ்வில் நாட்டமின்றி சமத்துவம் சமநீதி இவற்றை நிலைநாட்ட வலிமையைப் பிரயோகித்தார்கள். இதற்காக தம் கவர்னர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் கூட கண்டிக்க தண்டிக்க தயங்கவில்லை
உமர் பின் அப்துல் அஸீஸ்(ரஹ்) முப்பது மாதங்கள் மட்டுமே கலீஃபாக இருந்தார். பாழ்பட்டுப்போன நீதியை புதைந்துபோன நேர்வழியை மீட்டார். அநீதிகளையும் வழிகேட்டையும் புதைத்தார். மனித உரிமைகளை மக்களுக்குப் பெற்றுத்தந்தார். மக்களிடமிருந்து பறிபோன இஸ்லாத்தின் இனிய பண்புகளை மீட்டார். அச்சத்திலிருந்தும் பசியிலிருந்தும் குடிமக்களை விடுவிடுத்தார்.
இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பெங்கும் செல்வம் பெருகிற்று. இவரின் ஆட்சியில் ஸகாத்-ஐ கொடுப்பதற்கு ஆள்கள் இருந்தனர். பெறுவதற்கு எவருமில்லையே என்று கொடுப்போர் கவலைப்பட்டனர். அப்படி ஒரு ஆட்சியைத்தந்தார் முப்பதே மாதங்களில்
பேரறிஞர் இமார் ஷாபிஈ(ரஹ்) வாழ்ந்தது (ஹிஜ்ரி 150-204) ஐம்பத்து நான்கு ஆண்டுகள் தான். ஏராளமான கல்வி ஞானத்தை தம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்றார்கள் தம் சொத்தாக.
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) வாழ்ந்ததும் (ஹிஜ்ரி 450-505) ஐம்பத்து நான்கு ஆண்டுகள் தாம். அறிவுத்துறையில் பெரும்புரட்சிகளை செய்தார்கள். அவரின் நூல்கள் இந்த சமுதாயத்தின் மாபெரும் செல்வம்.
அறிஞர் இமாம் நவவீ (ஹிஜ்ரி 631-676) வாழ்ந்தது நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் தான். இவர்கள் சட்டத்துறையிலும் ஹதீஸ்கலையிலும் பதித்த தடங்கள் ஆழமானவை. இவர்கள் எழுதிய அர்பஈன் முஸ்லிம் நூலுக்கு விரிவுரை சட்டத்துறையில் மின்ஹாஜ், ரவ்ளத்துத் தாலிபீன், மஜ்மூஉ, இதன்றி தஹ்தீபுல் அஸ்மா, வல்லுகாத். இவைமட்டுமா இன்னும் எவ்வளவோ நூல்கள் சமுதாயத்தின் பெரும் பொக்கிஷம் அல்லவா?
இவர்கள் மட்டுமா இப்னுல் அரபீ, சர்கசீ, இப்னுல் ஜவ்சீ, இப்னுகுதாமா, கராஃபீ, இப்னுதைமிய்யா, இப்னுல் கய்யிம், ஷாத்பீ, இப்னு கல்தூன், இப்னு ஹஜர், இப்னுல் வசீர், இப்னுல் ஹுமாம், சுயூத்தி, தஹ்லவீ, ஷவ்கானீ (அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருள் நிலவட்டுமாக) இன்னும் ஏராளமான மேதைகள் இப்பாருலகை தம் ஞானத்தால் அறிவுத்திறனால் நிரப்பினார்கள் அல்லவா? எண்ணிப்பாருங்கள் எவ்வளவு பெரிய சாதனை.
இறந்தும் வாழ்வோர் சிலர். உயிருடன் வாழ்ந்தும் மரணித்துப் போனவர்களாகி விட்டோர் பலர். தம் அறிவுத் திறனால் சாதனைகள் படைத்து திறமையானவர்களை உருவாக்கி வரலாற்றில் என்றும் வாழ்ந்து கொண்டேயிருக்கின்றனர் சிலர்.
இப்படிப்பட்ட வரலாற்று நாயகர்கள் தேவையா? கூட்டத்தோடு கும்பலாக வாழ்ந்து மரணித்து மறைந்து மண்மூடிப் போனவர்கள் தேவையா? இவர்களில் யார் முக்கியமானவர்கள். முதன்மையானவர்கள்
..........தொடரும்:
தமிழ் வடிவம்: இல்யாஸ் ரியாஜி

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets