Facebook Twitter RSS

Thursday, February 16, 2012

Widgets

ஷஹீத் ஹஸன்-அல்-பன்னாஹ் – மறக்கமுடியாத இஸ்லாமிய ஆளுமை


Imam Hassan Al Bannah
ஒவ்வொரு  நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அல்லாஹ் இஸ்லாத்தை புனர்நிர்மாணிக்க ஒருவரை அனுப்பி வைக்கிறான் என்ற நபிமொழியின் அடிப்படையில், 20-வது நூற்றாண்டின் துவக்கத்தில் ஏகாதிபத்தியத்தின் கோரப் பிடியில் சிக்கிக்கொண்ட முஸ்லிம்களை காப்பாற்றவும், மேலும் இஸ்லாத்தின் கலாச்சாரத்தை பாதுகாக்கவும் எவராலும் ஒன்றும்  செய்ய முடியாத காலகட்டத்தில் அபூர்வமான, அசாதாரண தகுதிகளுடைய ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்…) அவர்களை அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு அளித்தான்.

காலம்,வரலாறு, சூழல் உருவாக்கிய மனிதர் அல்ல. எவருடைய முயற்சியாலும் உருவான மனிதரும் அல்ல. அல்லாஹ்வின் விஷேட ஏற்பாட்டின் பெயரில் உதித்த மனிதராகவே நாம் ஹஸனுல் பன்னாஹ்வை காணமுடிகிறது. என இமாம் நத்வி கூறுகிறார்கள்.

“அல்-இஹ்வானுல் முஸ்லிமூன்”  என்ற இயக்கத்தை தொடங்கி இன்று எகிப்தில் மாபெரும் எழுச்சியை உருவாக்கிய, இவரது பெயரைக் கேட்டாலோ, அவர் தொடங்கிய இயக்கத்தின் பெயரைக் கேட்டாலோ முஸ்லிம் இலட்சியவாதி ஒருவரின் உள்ளம் புத்துணர்ச்சி பெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

பத்து வயதிலேயே ஹஸனுல் பன்னாஹ்விடம் ஒரு சிறந்த மனிதருக்கான அனைத்து தகுதிகளும் இடம் பெற்றிருந்தன. அந்த வயதிலேயே அவர் இரண்டு இயக்கங்களை உருவாக்கினார்.

ஜம்மியத்துல் அஹ்லாக்குல் அதபிய்யா – நல்லொழுக்கங்களை உருவாக்கும் இயக்கம்.

ஜம்மியத்துல் மன்னில் முஹர்ரமா – ஹராம்களை தடைசெய்யும் இயக்கம் ஆகியனவாகும்.

1928-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கத்தை 6 பேரைக் கொண்டு துவக்கிய பொழுது கூட அதனை அவர் இயக்கம் என பன்னாஹ் குறிப்பிடவில்லை. “முஸ்லிம் உம்மத்தின் உடலில் பாய்ச்சப்படுகின்ற ஆத்மா” என்று குறிப்பிட்டார்.

இஸ்லாத்திற்காக பணிபுரியும் சகோதரர்கள் நாம் என்பதால் ‘அல் இஃவானுல் முஸ்லிமூன்’ என பெயரிடுவதாக பன்னாஹ் கூறினார்.
இப்படி தன் வாழ்க்கையை முஸ்லிம் சமூகத்திற்காகவும், இஸ்லாத்திற்காகவும் அர்ப்பணித்த  இமாம் ஹசன்-அல்-பன்னா ஒரு முறை மாணவன் ஒருவருக்கு அளித்த அறிவுரை இன்று நம்மில் பலருக்கு நம்மை சரியான வழியில் பயணிக்கவும், நமது ஈமானின் கயிற்றை பற்றி பிடிப்பதற்கு உதவும் என்பதால் இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

இன்றைய கால கட்டத்தில், மாணவர்கள் சிலர் தனது படிப்பை மேலை நாட்டில் தொடரப் போவதாக அறிவித்தால், அவரது தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள், ஆசிரியர்கள் என்று பலரும் அறிவுறுத்துவது அவரது இம்மை வாழ்க்கைக்கு பயனுள்ளதாக மட்டும் இருக்கும், ஆனால் மாமனிதர் இமாம் ஹஸன்-அல்- பன்னாஹ் 1935-ஆம் ஆண்டு காலப் பகுதியில் மேற்கத்திய தேசம் ஒன்றில் கல்வி கற்க தனது மனைவியுடன் சென்ற ஓர் இஸ்லாமிய மாணவனுக்கு அளித்த நெஞ்சை உருக்கும் உபதேசங்கள் முற்றிலும் மறுமை வாழ்வை நோக்கமாக கொண்டே அமைந்திருந்தன.
அவர் அந்த கடிதத்தின் மூலம் தனது உபதேசங்களை பின்வருமாறு தெரிவித்தார்:-

கண்ணியத்துற்குரிய மாணவனே!
இன்னும் சற்று நேரத்தில் நீங்கள், உங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு சமூகத்திற்கு மத்தியிலும், உங்களுக்கு பழக்கமில்லாத மனிதர்களுக்கு மத்தியிலும் இருப்பீர்கள். அவர்கள் உங்களிடத்தில் ஒரு முஸ்லிமுக்குறிய உதாரணத்தை பார்ப்பார்கள். எனவே நீங்கள் மிகச் சிறந்ததொரு உதாரணமாக திகழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

உங்களிடத்தில் பெறுமதிமிக்க அடைக்கலப் பொருளொன்று இருக்கிறது. அது தான் உங்களது மனைவி. அவளை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுங்கள். அவளுக்கு பாதுகாப்பான தோழனாக இருங்கள். அப்போது அவள் உங்களுக்கு மன அமைதியையும் சந்தோஷத்தையும் பெற்றுத் தருவாள்.
நான் உங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாகவும், உங்களுக்கு சந்தோஷமானதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென எதிர்ப்பார்க்கும் ஒரு தூய்மையான நண்பன்.

மேலும் உங்களது எல்லா விவகாரங்களையும், செயற்பாடுகளையும், கண்களுக்குப் புலப்படாத, உள்ளங்கள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கின்ற அனைத்தையும் அல்லாஹ் கண்காணித்துக் கொண்டு இருக்கிறான் என்ற நல்லுணர்வோடு செயற்படுங்கள். எனவே அவன் உங்களை எந்தவொரு நிலையிலும் பொருந்திக் கொள்ளக் கூடிய வகையில் காண்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வால் நிரம்பிய உள்ளத்தை ஷைத்தான் நெருங்கவும் மாட்டான். எனவே இவ்விஷயத்தில் பொடுபோக்காக இருந்துவிட வேண்டாம்.

உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நேரத்துக்கு நிறைவேற்றி விடுங்கள். அவற்றை பிறகு செய்யலாம் என்றோ அல்லது காரணங்களை முன் வைத்து அதிக வேலைகளினாலோ பிற்படுத்தாதீர்கள். விட்டு விடாதீர்கள், ஏனெனில் அது இச்சையின் உணர்வுகள் என்று அல்லாஹ் தன் திருமறையில் பின்வாருமாறு கூறுகிறான்.

‘மனோ இச்சையை பின்பற்ற வேண்டாம். அவ்வாறாயின் அது உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிதவறச் செய்து விடும்.’ (அல் குர்-ஆன் – 38:26)

அல்லாஹ்வை நெருங்கி செல்வதற்குரிய மிகச் சிறந்த சாதனமாக அவன் விதியாக்கிய கடமைகளே காணப்படுகின்றன. அதில் குறைவு செய்திட வேண்டாம். நீங்கள் மேற்க்கத்திய நாட்டில் இருந்து கொண்டு கஷ்டத்துடன் ஒரு நன்மையை செய்வது பன்மடங்கு கூலியை பெற்றுத் தரும்.
உங்களுக்கு முடியுமான அளவு நேரத்தை சுன்னத்தான காரியங்களை நிறைவேற்றுவதில் செலவு செய்யுங்கள். பர்லான தொழுகைகளையும், சுன்னத்தான தொழுகைகளையும் நிறைவேற்றுங்கள். இஸ்திஃபார் செய்யுங்கள்.

ஒருவன் பிரயாணத்தில் கேட்கப்படும் துஆ பதிலளிக்கப் படக் கூடியது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை நினைவுபடுத்திக் கொள்வதை நீட்டிக் கொள்ளுங்கள், ஏனென்றால்,
நபி(ஸல்) அவர்கள், உமது நாவு அல்லாஹ்வின் ஞாபகத்தால் நனைந்து கொண்டே இருக்கட்டும் என அலி(ரலி) அவர்களுக்கு உபதேசம் செய்து இருந்தார்கள்.

அல்-குர் ஆனை விளங்கி, ஆராய்ச்சி சிந்தனையுடன் அதிகமாக ஓதி வாருங்கள். அது தான் உள்ளங்களுக்கான நோய் நிவராணமாகும். ஒவ்வொரு நாளையும் அல்-குர் ஆனை கொண்டே முடியுங்கள், ஏனெனில் அது சிறந்த ஆரம்பமாகவும் நல்ல முடிவாகவும் உள்ளது.

மேலை நாட்டிற்கு பயணம் செய்யும் நீங்கள், அங்கே  பலவீனமான உள்ளங்களை மிகைத்து, கண்களை மயக்கி, சிந்தனையை மழுங்கடித்து உள்ளத்தை திசை திருப்பக் கூடிய உலகத்தின் கவர்ச்சிகளையும், மாயைகளையும் காண்பீர்கள். இவைகளெல்லாம் உங்கள் மறுமையை மறக்கடிக்காமல் இருக்கட்டும்.

இதனை அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு சுட்டிக் காட்டுகின்றான்.

(நபியே!) அவர்களில் இருந்து சில பிரிவினருக்கு, உலக வாழ்க்கையின் அலங்காரமாக எதைக் கொண்டு நாம் சுகமனுபவிக்கச் செய்திருக்கிறோமோ அதன் பக்கம் உம்முடைய இரு கண்களையும் நீர் திண்ணமாக செலுத்த வேண்டாம். (ஏனெனில், மறுமையில் வழங்கப் பெறும்) உமது ரப்புடைய உணவு (இவ்வுலக வாழ்வில் அவர்கள் வழங்கப் பெறுவதை) விட மிகச் சிறந்ததும், நிலையானதும். (அல் குர்-ஆன் – 20:131)

எனது மதிப்பிற்குரிய மாணவனே!  மேலை நாட்டில் உள்ளவர்கள் அல்லாஹ் நமக்கு ஹராமாக்கியதை ஹலாலாக கருதுவார்கள். அந்த ஹராமான விஷயங்களை செய்ய சற்றும் தயக்கம் காட்ட மாட்டார்கள். எனவே நீங்கள் அவர்கள் செய்யும் பாவங்களில் பங்கு கொள்ள வேண்டாம். நிச்சயமாக அவை உங்களை அல்லாஹ்வின் பிடியில் இருந்து பாதுகாக்க மாட்டாது. மறுமையில் உங்களுக்கு ஆதரமாக இருக்க மாட்டது.

மேலும் நீங்கள் அங்கு, இளமை நிறைந்த பெண்களுடன் தோழமை கொள்வதில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் இது ஏனையவர்களுக்கு ஒரு குற்றமாக காணப்பட்டால் உங்கள் மீது இரண்டு குற்றங்களாகும்.  மதுபானத்தை நெருங்காதீர்கள், அவ்வாறு நெருங்குவதற்கு சூழலை காரணம் காட்டவும் வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் அனைத்து சூழல் காரணிகளையும் அறிந்தே அதனை ஹராமாக்கினான். இவ்வாறே ஹராமான எந்த உணவையும் சுவைக்க வேண்டாம். ஹராமான உணவினால் வளரும் உடம்பு நரகத்திற்கே மிகவும் பொருத்தமாகும். அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றில் கெடுதியை தவிர வேற ஒன்றுமில்லை.

இன்னும் தூய்மானவற்றை அவர்களுக்கு அவர் (நபியவர்கள்) ஹலாலாக்கி, கெட்டவற்றை அவர்களின் மீது ஹராமாக்கி வைப்பார். (அல் குர்-ஆன்  – 7:157)

இவ்வாறு  இன்னும் பல விஷயங்கள் இருப்பினும், அதிகமான பேச்சு சிலவற்றை மறக்கடித்து விடும் எனப் பயப்படுகிறேன் என்று தனது நெஞ்சுருகும் அறிவுரையை யார் என்று அறியாத, சொந்தமோ பந்தமோ இல்லாத ஒரு மாணவனுக்கு அவர் வழங்கிய அறிவுரை நமது வாழ்விலும் பல மாற்றங்களை ஏற்படுத்த வல்லது..
இப்படிப்பட்ட மாமனிதர் இந்த உலகத்தைவிட்டு மறைந்து 63 வருடங்கள் கழிந்துவிட்டன என்பதை நினைக்கும்போதே கண்களில் கண்ணீர் சொரிகின்றன. உள்ளங்கள் ஏங்குகின்றன.

ஆம்! அவர் தன்னுடைய 42 வருட வாழ்வை இஸ்லாதிற்க்காகவும், முஸ்லிம் மக்களுக்காகவும் செலவழித்து, மாபெரும் இயக்கமான “அல்-இஹ்வானுல் முஸ்லிமூன்”  என்ற இயக்கத்தை துவங்கி, மகத்தான எழுச்சியை கண்ட பன்னாஹ் அவர்கள் பிப்ரவரி 12, 1949 ஆண்டு  இதே நாளில் மன்னர் ஃபாரூக்கின் சூழ்ச்சியால் எதிரிகளால் சுட்டு  வீழ்த்தப்பட்டு ஷஹீத் என்ற அந்தஸ்தை அடைந்து இறைவனிடத்தில் சேர்ந்தார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலாஹி ராஜிவூன்).

20-ஆம் நூற்றாண்டில் அற்புதமான மனிதர்களை இந்த உலகம் காண வித்திட்ட ஹஸனுல் பன்னாஹ்வின் வாழ்க்கையை நமது இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டியது நமது கடமையாகும். முழுமையான இஸ்லாமிய ஆளுமையை தோற்றுவிக்கும் விதமாக ஹஸனுல் பன்னாஹ்வின் தர்பியா(ஒழுக்க பயிற்சி) அமைந்திருந்தது. ஆன்மீகம், அறிவு, பண்பாட்டு, சமூக விவகாரங்கள், அரசியல், இறை வழி போராட்டம், உடல் பலம் என அனைத்து துறைகளையும் தழுவியதுதான் பன்னாஹ்வின் பயிற்சியாகும்.
இஸ்லாமிய இலட்சியவாதிகளை குறித்து படிக்க முயலும் வேளையில் ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்…) அவர்களின் ஆளுமை, அணுகுமுறைகள் மறக்காமல் படிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets