Facebook Twitter RSS

Saturday, July 07, 2012

Widgets

ரமளானை வரவேற்போம்!


welcome_ramadan[152x149] ஒரு முறை அலீ (ரலி) அவர்களிடம் தக்வா என்றால் என்ன என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் இரத்தினச் சுருக்கமாக பதிலளித்தார்கள். இறைவனை அஞ்சுவது, இறைமறை வழி நடப்பது, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவது, மரணத்தை எதிர்நோக்கி தயாராக இருப்பது.
இந்த மாதம் எப்படி குர்ஆனின் மாதமோ அது போன்றே ஈகையின் மாதம். இம்மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம் வறியவரின் அன்றாட கஷ்டங்களை நாம் உணர்கின்றோம். எனவே அதனைப் போக்கும் முகமாக இறைவன் நமக்கு வழங்கி இருக்கும் செல்வத்தை அவர்களுடன் பங்கு வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு கொடுப்பது கொண்டு ஒரு போதும் நமது செல்வம் குறைந்துவிடுவதில்லை. மாறாக அதைவிட சிறப்பானதை இறைவன் நமக்கு நல்குவதாக வாக்களிக்கின்றான்.
நன்மைகளை அள்ளித் தரும் புனித ரமளான், மீண்டும் ஒரு முறை நம்மை சந்திக்க வருகின்றது. இது தொழுகை மற்றும் நோன்பின் மாதம். இறையச்சத்தை இதயத்தில் ஏற்றும் மாதம். தேவை உடையோருக்கு ஈந்துதவி, இறை உவப்பை பெறும் மாதம். தன்னையே அழித்துக் கொள்ளும் பாவம் புரிந்தாலும் அதற்காக பச்சாதாபப்பட்டு பாவமன்னிப்பைத் தேடி பெற்றுக் கொள்ளும் மாதம்.
இந்த மாதத்தையும், அதன் முக்கியத்துவத்தையும், அது ஏற்படுத்த வேண்டிய மாற்றத்தையும் பற்றி இறைமறையாம் அருள்மறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது:
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப் பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல் குர்ஆன் 2 : 183)
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும். (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன்  இறக்கியருளப்பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். (அல் குர்ஆன் 2 : 185)
மேற்கண்ட வசனங்களை சிந்திக்கும் போது ஒரு பேருண்மையை விளங்கிக் கொள்ள முடியும். உலகம் படைக்கப்பட்டதில் இருந்து மாதங்களின் எண்ணிக்கை 12 என குர்ஆன் எடுத்தியம்புகின்றது. அந்த 12 மாதங்களில் ஒரு மாதம்தான் ரமளான். என்றாலும் அந்த மாதத்திற்கு எனத் தனிச் சிறப்பு என்பது குர்ஆன் இறக்கப்பட்டதனால்தான்.
அறியாமை எனும் இருள் சூழ்ந்த காலம் அது. மனித இனத்தின் மாண்புகள் எல்லாம் புறம் தள்ளப்பட்டிருந்த காலம். பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு புதைக்கப்பட்டாள். பெண் ஒரு போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டாள். அவளுக்கு என்று ஒரு ஆன்மா உண்டு என்பது கூட அறியப்படவில்லை. கொலையும், கொள்ளையும்  மலிந்து, சந்ததியும், சக்தியும் உள்ளவன் மட்டுமே சமூகத்தில் அந்தஸ்து உள்ளவன் எனும் நிலையிருந்த காலம்.
நாகரிகம் என்றால் விலை என்ன என்று கேட்கும் இந்தச் சமூகத்தை மாற்றி அமைக்க அல்லாஹ் அவர்களில் இருந்தே ஒரு தூதரை தெரிவு செய்கின்றான். அவருக்கு வழிகாட்ட தன் புறத்திலிருந்து ஒரு வேதப் புத்தகத்தையும் வழங்குகின்றான். இதன் மூலம் அறியாமையில் கிடந்த அந்தச் சமூகம் உலகுக்கே அறிவுச்சுடரை ஏற்றி நாகரிகத்தின் தொட்டில் எனும் உன்னத சமூகமாக மாறியது.
இத்தகைய அற்புதங்களை அவர்களிடத்தில் ஏற்படுத்திய அந்தத் திருமறை குர்ஆனை நாம் ரமளான் மாதத்தில்தான் இறக்கியருளினோம். எனவே இந்தக் குர்ஆனின் அடிப்படை போதனையாகிய ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டோர், அந்த பாக்கியம் பொருந்திய திருமறை இறக்கப்பட்ட மாதத்தில் நோன்பிருக்கட்டும் என இறைவன் கட்டளை இடுகின்றான்.

இவ்வாறு ரமளான் மாத்தில் நோன்பிருப்பது திருமறை இறக்கியருளப்பட்டதற்கு நன்றியறிவிப்பதற்காக மட்டுமா? மனிதன் என்பவன் வெறும் சதையால் வடிவமைக்கப்பட்ட உடல் மட்டுமல்ல. அத்துடன் ஆன்மா என்பதும் ஒன்றிணையும் போதுதான் அவன் முழு மனிதனாகின்றான். இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் பெரும் பகுதியை, உடலை சரிவர பேணிப் பாதுகாப்பதற்காக அல்லது இந்த உடல் சுகம் அனுபவிப்பதற்காக என்பதற்காகத்தான் தங்களின் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகின்றனர். அகத்தில் இருக்கும் ஆன்மாவை வலுப்படுத்த என்று நேரம் ஒதுக்கி அதற்கான காரியங்களில் ஈடுபடுவது அரிதே.
ஆனால் ரமளான் மாதத்தில் மட்டும் நோன்பு நோற்பதன் மூலம் தங்களின் உடலை வருத்திக் கொண்டு உள்ளத்தை பலப்படுத்துவதை காணமுடியும். தங்களுக்கு விருப்பமான உணவு வகைகள் பரப்பப்பட்டிருக்கும். தாகம் தீர்க்க தண்ணீர் அருகில் இருக்கும். அனுபவிப்பதற்கு அனைத்து தகுதியும் உடைய மனைவி அருகில் இருப்பாள். இவை அனைத்தையும் அடைய மனமும் ஏங்கும். ஆனாலும் எனது இறைவனுக்காக என்று தனது இச்சையை கட்டுப்படுத்துவதன் மூலம் அவன் தனது ஆன்மாவை வசப்படுத்துகிறான். இதனையே திருமறைக் குர்ஆன்,
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப் பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (அல் குர்ஆன் 2 : 183)
சுருங்கச் சொன்னால், இறை உவப்பிற்காக என்று மட்டும் இறைவன் விதியாக்கி இருக்கும் நல்லவைகளை ஏற்று தீயவைகளை புறம் தள்ளும் ஆன்மாவுக்கான ஒரு பயிற்சிமுறையே நோன்பு.
தக்வா என்றால் என்ன?
முள் நிறைந்த பாதையில் நடப்பவன் எவ்வாறு தன்னையும், தனது ஆடையையும் பாதுகாத்துக் கொண்டு கவனமாக நடப்பானோ அது போன்று இவ்வுலகில் தக்வா உடையோரின் வாழ்க்கை என்றார்கள் உமர் (ரலி)
“இறையச்சத்தை ஏற்படுத்தும் நோன்பு என்னுடையது. அதற்கான கூலியை நானே வழங்குகிறேன்” என இறைவன் கூறுகின்றான்.
வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்காக என்றிருந்தாலும் ஏன் இறைவன் நோன்பை மட்டும் என்னுடையது என்கின்றான்?
அல்லாஹ் நம்மீது விதியாக்கி இருக்கும் ஐந்து கடமைகளை எடுத்து ஆய்வு செய்தால் விளங்கும்.
கலிமா! இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள ஒப்பந்தமும் சாட்சி பகர்தலும்.
தொழுகை! எதனை ஒப்பந்தமாக எடுத்துக் கொண்டோமோ அந்த இறைவனை துதி பாடுவதைக் கொண்டு ஒப்பந்தத்தை நிறைவேற்றல்.
ஸகாத்! இறைவன் ஒருவன்தான் என ஒப்பந்தம் செய்து கொண்டோரிடையே ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் கூடாது. எனவே வளம் மிக்கோர் வறியவருக்கு வாரி வழங்குவதன் வழி  சமத்துவமிக்க சமூகம் ஒன்றை உயிர்ப்பித்தல்.
ஹஜ்! ஏக இறைவனை ஏற்றுக் கொண்டோர் உலகின் எந்தப் பகுதியில்  வசித்தாலும், எந்த மொழி பேசினாலும், எந்த நிறம் உடையோராய் இருந்தாலும் அவர்களிடையே எள் முனையளவும் மேலோன் கீழோன் எனும் மனோபாவம் இல்லை என்பதைப் பறையறிவிக்கும் மாநாடு. ஆக இந்த நான்கு கடமைகளுமே மனிதன் தன்னையும், சமூகத்தையும் மேம்படுத்திக் கொள்ள இஸ்லாம் விதியாக்கி இருக்கும் கடமைகள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
ஆனால் நோன்பு ஏனைய கடமைகள் அனைத்தில் இருந்தும் வேறுபட்டது. நோன்பு நம்மீது  விதியாக்கப்பட்டிருந்தாலும் இது முழுக்க முழுக்க ஒரு மனிதன் தனது சுயவிருப்பத்தில் செய்யும் வணக்க வழிபாடாகும். அவன் நோன்பு நோற்றிருக்கின்றானா இல்லையா என்பதன் உண்மைத் தன்மையை அந்த மனிதனும் இறைவனும் மட்டுமே அறிய முடியும்.  எனவே என்னை மட்டும் அஞ்சி எனக்காக எனச் செய்யும் இந்த அமல் என்னுடையது அதற்கு நானே கூலி நல்குவேன் என்கின்றான் இறைவன்.
நோன்பு நோற்பதன் மூலம் மனிதர்களிடத்தில் தக்வா ஏற்படுகின்றது. அது பல்வேறுபட்ட குணநலன்களை அவனுள் ஏற்படுத்துகின்றது. தக்வா எனும் இறையச்சமுடையோருக்கு அல்லாஹ்வின் நெருக்கம் கிடைக்கின்றது. மேலும் அல்லாஹ் அவர்களை நேசிக்கின்றான். ரமளான் எனும் இந்த ஒரு மாதத்தில் அவர்கள் மேற்கொள்ளும் பொறுமை, எஞ்சிய நாட்களில் அவர்களை பண்பட்டவர்களாக மாற்றுகிறது. நான் எனும் அகந்தை மாற்றி இறைவனால் என்ற பணிவை ஏற்படுத்துகின்றது. முகஸ்துதி மறைந்து இறைவனுக்காக மட்டும் எனும் உளத்தூய்மையை ஏற்படுத்துகின்றது. பொது வாழ்விலும் அந்தரங்கத்திலும் புடம் போட்ட ஒழுக்க சீலர்களாக நம்மை தயார் படுத்துகின்றது.   உம்மத்தின் அங்கமான சகோதரரின் பசி பட்டினியின் கோரத்தன்மையை உணர்வதன் மூலம் ஈந்துதவும் பண்பு மிக்கவர்களாக நம்மை மாற்றியமைக்கின்றது.
நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “ரமளான் மாதம் வந்துவிட்டது என்றால் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்பட்டு சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றது. மேலும் சொன்னார்கள். எவரொருவர் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்ப்படவில்லையோ அவர் நஷ்டமடைந்துவிட்டார்.”
இவ்விரு நபிமொழிகளும் உணர்த்தும் உண்மை, ரமளான் மாதம் ஒரு முஃமினை அவனது மறுமை இலட்சியமான சுவனத்தை நோக்கி அண்மிக்கும் காரணி. எனவே ஒவ்வொருவரும் அதனைத் தவற விடாமல் பற்றிப் பிடித்துக் கொண்டு வணக்க வழிபாடுகளில் தரிப்பட்டு வெற்றி பெற வேண்டும்.
அவ்வாறான வணக்க வழிபாடுகளில் மிகவும் இன்றியமையாத ஒன்று பிரார்த்தனை. மனிதன் தனது தேவைகளை இறைவன் முன் சமர்ப்பிப்பதையே பிரார்த்தனை என்று அழைக்கப்டும். ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் பிரார்த்திப்பதே ஒரு வணக்க வழிபாடு என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ஆம்! எனது அடிமை தனது தேவைகளை என்னால் மட்டுமே நிறைவேற்றித்தர முடியும் எனும் மன உணர்வோடு தன்னை பிரார்த்திப்பதை விரும்புகின்றான் இறைவன். இதனை தனது வானவர்களிடம் சிலாகிக்கவும் செய்கின்றான். அவர்கள் எவ்வளவு மலை போன்ற பாவங்கள் செய்துவிட்டு அதிலிருந்து பச்சாதாபப்பட்டு வருந்தி தன்னிடம் மீண்டு வந்து பிரார்த்தித்தால், அத்தனை பாவங்களையும் மன்னிப்பதாக வாக்கு தருகின்றான். இரவின் மூன்றாம் பாகத்தில் அடிவானத்தில் இறங்கி வந்து அனைத்து மாந்தரும் அயர்ந்து உறங்கும் வேளையில் என் அச்சத்தில் விழித்திருந்து பிரார்த்திக்கும் எனது அடியான் யார்? அவனுக்கும் எனக்கும் இடையில் எவ்வித திரையும் இல்லை. அவனது பிரார்த்தனைகளை நிறைவேற்ற காத்திருக்கின்றேன் என்கின்றான்.
ரமளானைப் பொறுத்தவரை ஏனைய மாதத்திலிருந்து நாம் அதிகம் வித்தியாசப்படுகின்றோம். இரவின் மூன்றாம் பகுதியில் நாம் கண்விழிக்கின்றோம். உணவருந்த கண்விழிக்கும் நாம், அடிவானத்திற்கு வந்து என்னைப் பிரார்த்திப்பவர் யார் என அழைக்கும் இறைவனின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சற்று நேரம் ஒதுக்கி நமது தேவைகளையும் உம்மத்தின் வேதனைகளையும் முறையிடுவோம்.
திருமறையை பொருளுணர்ந்து ஓதுதல் ரமளான் மாதத்திற்கான முக்கியத்துவமே மனிதர்களுக்கு நன்மை தீமையைப் பிரித்தறிவிக்கும் திருக் குர்ஆனை இறைவன் இறக்கியருளியது. எனவே அதிகம் அதிகமாக, அந்த இறைமறை நம்மிடம் எதிர்பார்க்கும் விஷயங்களை ஓதி தெரிந்து கொள்வதும் அதனை நமது வாழ்வில் செயல்படுத்துவதற்கான வழிமுறையை ஆராய்வதுமே அதற்கு நாம் செய்யும் கண்ணியம் ஆகும்.
மனிதர்களுக்கு நர்வழி காட்டுவதற்காக திருக்குர்ஆன் இறக்கப்பட்டிருந்தாலும் அதனை ஓதுவதற்காக மட்டுமே கூலி வழங்கப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள். அதனையும் தெளிவு படுத்திச் சொன்னார்கள், அதன் ஒவ்வொரு எழுத்திற்கும் 10 நன்மைகள் உண்டு. சாதாரண காலத்தைவிட ரமளானில் நன்மையின் மடங்கு 7 லிருந்து 700 வரை. எனவே கணக்கின்றி நன்மைகளை நமக்கு அள்ளித் தரும் திருமறையை அதிகம் அதிகம் ஓதி நன்மைகளை வாரிக் கொள்வோம்.
திருமறையின் வசனங்களை வாசிப்பதோடு நிறுத்திவிடாமல் அது சொல்ல வரும் ஆழிய கருத்துகளை அறிதல் இன்றியமையாதது. கருத்தறியா திருவசனங்களை சுமப்பவனின் உதாரணத்தை அருள்மறையாம் திருமறை இவ்வாறு சொல்லிக் காட்டுகின்றது:
எவர்கள் தவ்றாத் (வேதம்) சுமத்தப் பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகைளச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும். (அல்குர்ஆன் 62 : 05)
எனவே குர்ஆனின் மாத்தில் அதனைப் புரிந்து இனிவரும் நாட்களில் அதன் வழிகாட்டுதலுக்கு ஒப்ப வாழ்வதற்கு நம்மைத் தயார் படுத்துவோம்.
தானதர்மம் செய்தல்
நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்குச் செல்வத்தை விசாலப்படுத்துவான். இன்னும் தான் நாடியோருக்குச் சுருக்கியும் விடுகிறான். ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான். மேலும், அவன் கொடையாளிகள் அனைவராலும் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறும். (அல் குர்ஆன் 34 : 39)
பெரும் பெரும் செல்வந்தர்கள் தான் தங்கள் செல்வங்களை வாரி வழங்க வேண்டும் என தர்மத்திற்கு தவறான அளவுகோல் கற்பிக்கப்பட்டிருப்பதை நாம் காண்கின்றோம். கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள், எதனை எதற்காக தான தர்மம் செய்ய வேண்டும் என்பதை குறிப்பிடும் போது, ஒரு பேரீத்தம் பழத்தின் துண்டையேனும் தர்மம் செய்து நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள்.
இத்தகைய தர்மம் மூலம் ஒரு நோன்பாளி இரு நோன்பாளிகளின் நன்மையை பெறும் வழிவகையைப் பற்றி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறும்போது, யார் ஒரு நோன்பாளிக்கு நோன்பு துறக்க உணவு வழங்குவாரோ, அவருக்கு நோன்பாளியைப் போன்றே பூரணமாக கூலி வழங்கப்படும் என்றார்கள்.
இது போன்று ஏராளமான நன்மையை அள்ளிச் சொரியும் சங்கை மிக்க ரமளான் நம்மை அண்மித்து வருகின்றது. ஒவ்வொரு முறை நம்மைவிட்டு ரமளான் பிரிந்து செல்லும் போதும் நாம் கைசேதப்படுவதுண்டு. இப்போதுதான் இபாதத்துகளை செய்யத் துவங்கினேன், அதற்குள் இம்மாதம் முடிந்து விட்டதே என்று. இதற்கு காரணம் ரமளானுக்கு என்று முன்னமே நாம் திட்டமிடாமல் போனதுதான். எனவே வரும் ரமளானையாவது முழுவதுமாக பயன்படுத்துவதற்கு நாம் தயார் செய்வோம்.
ஆம்! நெருங்கி வரும் ரமளானை வரவேற்க இப்போதே நம்மை தயார் படுத்தி ஈடேற்றம் பெறுவோம்.
                                                                                                                                                       -:சாதிக் மீரான்:-

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets