புதுடெல்லி:இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக வி.எஸ்.சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 62.
தற்பொழுது தேர்தல் கமிஷனராக பணியாற்றி
வரும் சம்பத், தற்போதைய தலைமை கமிஷனர் எஸ்.ஒய்.குரைஷி வருகிற 10-ஆம் தேதி
ஓய்வு பெறுவதையொட்டி தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அரசின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஒப்புதல்
அளித்துவிட்டதாக அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
16.01.1950-ல் பிறந்த சம்பத், ஆந்திரப்
பிரதேசப் பிரிவில் 1973-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். அந்த
மாநிலத்தில் நிதித்துறை முதன்மைச் செயலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட
பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். 2009-ம் ஆண்டு ஏப்ரலில் தேர்தல்
ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக மத்திய அரசின் மின் துறைச் செயலராகப்
பணியாற்றினார்.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஓய்வு பெறும்
வயது 65. அதன்படி 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை வி.எஸ்.சம்பத் இந்தப்
பொறுப்பில் நீடிப்பார். அதற்கு இடையே, பல்வேறு மாநில சட்டப் பேரவைத்
தேர்தல்களையும், 2014-ம் ஆண்டில் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலையும்
அவர் நடத்துவார்.
தேர்தல் ஆணையத்தில் ஒரு தலைமைத் தேர்தல்
ஆணையரும் இரு தேர்தல் ஆணையர்களும் பொறுப்பு வகித்து வருகின்றனர். தேர்தல்
ஆணையராக இருக்கும் சம்பத், தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு
விட்டதால், தேர்தல் ஆணையர் பொறுப்புக்கு புதிய அதிகாரியின் பெயர்
பரிந்துரைக்கப்படும்.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்,
துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோரை தலைமைத் தேர்தல் ஆணையர்
குரேஷி மரியாதை நிமித்தமாக புதன்கிழமை சந்தித்தார்.
No comments:
Post a Comment